[ Birthday adding me, one year more today]
"எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு
எதிலும் பற்றற்ற தனிமை கண்டு
எனக்குள் நானே எதையும் அலசி
என்போக்கில் வாழ பழகி விட்டேன்"
"குழந்தை பருவம் சுமாராய் போக
வாலிப பருவம் முரடாய் போக
படிப்பு கொஞ்சம் திமிராய் போக
பழக்க வழக்கம் கரடாய் போச்சு"
"உண்மை தேடி அலச தொடங்கினேன்
வேஷம் போட்ட பலதை கண்டேன்
ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன்
ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்"
"நானாய் வாழ அமைதி தேடினேன்
வாழத் தெரியாதவன் என்று திட்டினர்
நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன்
ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்"
"ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை
இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை
எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை
உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது"
"ஓடும் உலகில் நாமும் ஓடி
ஓரமாய் கொரோனா ஒதுங்க வைக்க
பேரப் பிள்ளைகள் தனிமை போக்க
ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்"
"உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம்
உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம்
பிறந்தநாள் வயதை கூட்டுது ஒருபக்கம்
பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்"
"என்னை நினைக்க சிரிப்பு வருகுது
அவளை நினைக்க அழுகை வருகுது
வாழ்வை நினைக்க
ஆத்திரம் வருகுது
மரணத்தை நினைக்க
மகிழ்ச்சி வருகுது"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment