"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ"

 



 

"சூரியன் மறைய, தனிமை வாட்டுதா?

சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா?

சூதுவாது தெரியா, அழகு தேவதையே!

சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்"

[சூசகம் - மறைமுகம்]

 

"நேர்த்தியான சுருள்முடி, தோளை தழுவ

நேரே வந்து, புன்முறுவல் எனோ?

நேரார் வருமுன், நான் அணைக்கவா,

நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்"

[நேரார் - பகைவர்]

 

"புத்தன் சொன்ன, கருனை இரக்கம்

புரிந்தோர் சொற்பர், இன்றும் இருக்க

புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ

புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்"

[புங்கலம் - ஆத்துமா]

 

"அரசு தராத, பேச்சு சுதந்திரம்

அழகி உன்னில், நான் காண்கிறேன்,

அக்கம் பக்கம், யார் இருந்தாலும்

அச்சம் இன்றி, காதல் பேசு"

 

"உன் கன்னத்தில், ஒருவன் அறைந்தால்

உன் மறுகன்னத்தை, காட்டு என்றான்

உகவை கொண்டு, கன்னத்தில் தந்தேன்

உலோபி இல்லாமல், மறுகன்னம் காட்டாயோ!"

[உலோபி - கருமி]

 

"வலிந்த குடியேற்றமும், காணாமல் போக்குவதும்

வளமான ஜனநாயக, அரசின் செயல்பாடோ

வளைத்துநெளித்து, மனதை காணாமல் போக்குவதும்

வனப்பான எழில் மேனியின், செயல்பாடோ"

 



"அதிகாரம் குவிய, இருபதாம் திருத்தமாம்

அற்பன் தொப்பி பிரட்டி, கை தூக்கினான்!

அன்பு குவிய, உள்ளம் திருத்தி

அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ!!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment