அன்றில்
இருந்து இன்று வரை, எனது சிற்றறிவுக்குத் தெரிந்தவரை, சிவன் உறையும் திருக்கயிலாயம்
என்றால் நான் நினைத்திருந்தது, நினைத்துக்கொண்டு இருப்பது, ஏதோ, எங்கோ
நம் கற்பனைக்கே எட்டாத தூரத்தில் உள்ள பல தெய்வங்கள் உறையும் உலகம் ஒன்றில், அழகு
மிகு சொர்க்க மண்டலத்தில், தேவர்கள் புடை சூழ, வேத
மந்திரங்கள் ஒலிக்க, தீப ஒளி பரந்து வர, மணியோசை
காற்றில் மிதந்து வர, சுகந்த மணம் வீசும் வண்ண முகில்கள்
படர்ந்திருக்க,
ரிஷிகள், முனிவர்கள்
போன்றோர் வாழ்த்தி வணங்கி இருக்க, அண்டமே தெரியும் அளவில் ஓர் உயர்ந்திருக்கும்
மகா சிம்மாசனத்தில், சடா முடியில் சீறிப் பாயும் கங்கை நதியும், ஒளி
பாய்ச்சும் பிறைச் சந்திரனையும் அணிந்து, நெற்றியில் பெரிய திரு நீற்றுப்
பட்டையும்,
உடம்பில்
புலித் தோல் சட்டையும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும், கைகளில்
துஷ்டர்களை ஒழிக்கும் ஆயுதங்களுடனும், உமாதேவி சமேதரராய் வீற்றிருந்து, தான்
படைத்த பிரபஞ்சத்தில் எல்லாம் சரியாக
இயங்குகின்றனவா என்று பார்த்துக்கொண்டு இருப்பார் என்றல்லவா ?
ஆனால், அவர்
வதியும் கைலாய மலை அப்படி எல்லாம் எட்டாத அதிக தூரத்தில் இல்லை; இங்கே, மிக
அருகில் உள்ள சீன மொழி பேசும் நாட்டில்தான் இருக்கின்றது என்று, கடவுளைப்
பற்றி மிச்சம் தெரிந்தவர்களால் கூறப்பட்டு, தெளிவு படுத்தப் பட்டுள்ளேன்.
என்னே
அதிஷ்டம்! நேபாள எல்லையில் இருந்து வெறும் 80 கி.மீ., மற்றும்
இந்திய எல்லையில் இருந்து ஓர் 200 கி.மீ.தூரத்தில்தான் பரமாத்மா
வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் என்று அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர் இருக்கும் இந்த மலையைத் தரிசிக்க ஏராளமான
பக்தர்கள் நாளாந்தம் சென்றுகொண்டு இருக்கிறார்கள். எந்த ஒருவரும் அவர் இருக்கும்
மாளிகையின் அருகில்கூட இதுவரை செல்ல முடியவில்லை. தூரத்தில் இருந்து கொண்டே இந்த
மலையின் அழகுக்கு காடசியைக் கண்டு
கழித்துத் திரும்புவார்கள். சிலருக்கு அது பெரிய சிவலிங்க வடிவமாய்க் காட்சி
அளிப்பதைப் பார்த்து பக்திப்பரவசமாகி, இறைவனை நேரில் கண்ட அனுபவத்தை
பெற்ற ஆனந்தத்துடன் வீடு திரும்புவார்கள்.
எல்லாம்
சரிதான், மகிழ்ச்சிதான்.
ஆனால், இந்த
ஊனக் கண்ணுள்ள,
இறையருள்
கிடைக்காத,
ஆன்மீக
அறிவு சற்றுமற்ற இந்த அற்ப மானிடனின் முட்டாள்தனமான கேள்விகள்
என்று தெரிந்தோரால் பரிகசிக்கக் கூடிய சின்னச் சின்ன சந்தேகங்கள் சிலவற்றிற்கு, புத்திஜீவிகள்
யாராவது அறிவு பூர்வமான விளக்கங்களின் மூலம் தெளிவு படுத்தி, என்னையும்
இந்த ஞான ஒளிக்குள் இழுத்துச் செல்ல இயலுமா என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
🌄🌄🌄
✋சின்ன
சின்ன சந்தேகம் 1:
சீனா
கடவுளை நம்பாத ஒரு நாடு. அங்கு வெளி இடங்களில் கடவுள் பற்றி பேச முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட சில சமயங்கள் மட்டும் பூட்டிய கட்டிட எல்லைக்குள் வைத்து வணங்க
அனுமதி உண்டு. ஆனால் சைவ சமயம் இதற்குள் அடங்காது.
சீனா
இந்தியாவின் பகை நாடு. சிவனின் கைலாய மலையை தரிசிக்க வேண்டும் என்றால் சீனாவின்
தயவால், அவர்களின்
நாட்டுக்குள் செல்லப் பணம் கொடுத்து விசா எடுத்துப் போக வேண்டி இருக்கிறது.
ஏன்தான்
ஒரு விரும்பாத நாட்டு மலையின்மீது போய் ஒழிந்து உட்கார்ந்து இருக்கிறார்?
சிவனை
வணங்குபவர்கள் அதிகமாக தமிழ் நாட்டில்தான் உள்ளனர். அவர் தங்குவதற்கு மிகவும்
பொருத்தமான இடம் தமிழ் நாடுதான். இங்கு உள்ள மலை ஒன்றுமே பிடிக்கவில்லையா? உயரம்
போதாவிட்டால் ஒன்றை உருவாக்கிவிட்டு அதன் உச்சியில் குந்தியிருக்கலாமே?
சரி, வேண்டாம், அண்டை
மாநிலங்கள் எங்காவது? அல்லது 'புண்ணிய பூமி' இந்தியாவில்
வேறு ஒரு மலையென்றாலும் கிடைக்கவில்லையா? இந்தியாவும் பிடிக்கவில்லை
என்றால், ஒரே
ஓர் இந்து நாடு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட
நேபாளத்தில் என்றாலும்?
ஏனய்யா
வேண்டாத, மதிக்காத, பிடிக்காத, முடியாத இடத்தில் போய் திருவெழுந்து அருளியுள்ளீர்?
✋சி.சி.ச.
2:
சிவன், பார்வதி
மட்டும்தான் அங்கு வசிக்கிறார்களா? பிள்ளைகள், மனைவிமார்
எல்லோரும் ஒரே கூட்டுக் குடும்பமாய் இருக்கிறார்களா அல்லது தனி வீட்டிலா?
✋சி.சி.ச.
3:
கைலாய
மலையின் உயரம் 6.6
கி.மீ. எவரெஸ்ட் சிகரத்தை உயரம் 8.8 கி.மீ. உயரமான மலையை விட்டு இடைத்தர
உயரமுள்ள இந்த மலையைத் தேர்ந்து எடுத்ததன் சூட்சுமம் என்ன?
✋சி.சி.ச.
4:
அவர்
சடாமுடியில் இருந்துதான் கங்கை நதி
உருவாகின்றது என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் அந்த நதி மிகவும் புனிதம்
வாய்ந்தது. ஆனால் இந்தக் கங்கை நதி இந்தியாவில் வட மேற்குப் பகுதியில் இருந்தல்லவா
உற்பத்தி ஆகின்றது? ஒரு கிளைதன்னும் இந்த மலையை எட்டியே பார்க்கவில்லையே?
அப்படி
என்றால், அவர்
முடியில் இருந்து பாயும் (கங்கை) நீர் முழுவதும் சீனாவுக்குப் பிரயோசனப்படுகிறதா?
✋சி.சி.ச.
5:
அல்லா
மெக்காவில்தான் இருக்கிறார், அந்தப் பக்கம் பார்த்து பள்ளிவாசல்கட்டி, அந்த
திசையைப் பார்த்து வணங்கினால்தான் அவருக்கு கேட்கும் என்று அப்படியே
செய்கிறார்களே!
அதே
போல சைவர்களும் இந்த மலையையின் திசையை நோக்கி வணங்கினால் கூடிய பலன் கிடைக்குமா?
✋சி.சி.ச.
6:
சைவர்களை
விட பௌத்த,
சமண, திபெத்திய
பொண் சமயங்களுக்கும் இந்த மலை புனிதமானது. என்றால், அவர்களின்
கடவுள்மார் சிவன் வீட்டில் இருக்கிறார்களா அல்லது வேறு பக்கத்தில் வேறு வேறு
மாளிகைகளில் இருக்கிறார்களா?
✋சி.சி.ச.
7:
சந்திரனை
முடிமேல் வைத்திருப்பதால் எல்லோருக்கும் சந்திரன் எப்பொழுதும் இந்த மலை இருக்கும்
திசையில் தெரிய வேண்டும். ஆனால், அது மாறுபட்ட பல திசைகளில் தெரிகிறதே?
✋சி.சி.ச.
8:
உடம்பில்
துணி ஒன்றும் இல்லையே குளிர் தாங்குவாரா? ஏதாவது தடித்த உடை அணிய மாட்டாரா?
✋சி.சி.ச.
9:
சீனாவில்
இருப்பதால் சீன நாட்டவர்கள் எல்லாரையும் சைவமாய் மாற்றிக் கொடுப்பாரா? அப்படியானால், உலகில்
மூன்றில் ஒரு பங்கினர் சைவ சமயத்தவர் ஆகிவிடுவர்!
✋சி.சி.ச. 10
கைலாய
மலை ஒரு காலமும் சைவ சமயத்தினரின் ஆட்சி எல்லைக்குள் வந்ததில்லை. ஆரம்பத்தில்
திபெத்திய பௌத்த ஆடசியின் கீழ் இருந்து பின்னர் கடவுளை மறுக்கும் சீனரின்
ஆட்சிக்குள் வந்துள்ளது.
கடைசி
சீன - இந்திய போரின்போது ஏன் தனது மலையை
இந்தியா வெற்றிகொள்ள வைக்கவில்லை?
✋சி.சி.ச. 11:
மனிதனால், முக்கியமாக
சைவ மக்கள் எட்டவே முடியாத, கடினமான, உயரமான
இடத்தில் மறைந்திருப்பதன் மர்மம் என்ன?
✋சி.சி.ச.
12:
அறிஞர்கள் கூறுவார்கள் நான் ஒரு அறிவிலி என்று. சிவன் அங்கு, எங்கு என்று எங்கும், வெளியிலும், என் மனசுக்குள்ளும் இருக்கிறார் என்று. அது தெரியாமல் கைலாய மலையில் மட்டும்தான் இருப்பதாகப் பிதற்றுகிறேன் என்று.
அப்படி என்றால், ஏன்தான் எல்லோரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு மிகவும் சிரமமான யாத்திரைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் சிவனைத் தேடி?
அங்கு
போனால் இங்கு கிடைப்பதை விட கூடுதல் கிடைக்குமா?
✋சி.சி.ச.
13:
மலைமேல்
உறையும் பனிக்கட்டியால் பல்வேறு விதமான உருவங்கள் தோன்றலாம். அவற்றில் ஒரு
உருவத்தை சிவலிங்க வடிவம் என்று கற்பனை செய்து கொள்வார்கள் பக்தர்கள்.
பேசாமல்
ஏன் அவர் அந்த முழு மலையையே ஒரு லிங்க உருவத்தில் படைத்து இருக்கவில்லை?
✋சி.சி.ச.
14:
வானத்து
முகில்களும் சிலவேளைகளில் லிங்க, ஜேசு, சிலுவை, பிறை
என்ற உருவங்களில் தோன்றுமே; அங்கும் கடவுளை பார்த்து வணங்கலாமா?
🌄🌄🌄
ஏதோ, என்னவோ
எனக்குப் புரியாத விடயங்களைக் கேட்டு வைத்துள்ளேன்.
கடவுளைக்
கண்டவர்கள்,
கதைத்தவர்கள், உணர்ந்தவர்கள், பக்கத்தில்
இருந்தவர்கள்,
பலன்
பெற்றவர்கள் எவராவது இந்த அஞ்ஞானிக்கு நல்லறிவைப் போதித்து, மோட்ஷம்
கிடைக்க நல்ல வழி கூறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
👉சந்தேகம்-கள் :செல்வதுரை சந்திரகாசன்👈
No comments:
Post a Comment