சிவவாக்கியம்–-076
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள்
ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும்
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே
அறிவிலே பிறந்த ஏடுகளைப்
படித்து மனனம் செய்து வேத ஆகமங்கள் ஓதுவார்கள். யோக ஞானா நெறியிலே நின்று
தியானம் செய்து மயக்கத்தை ஒழித்து மெய்ப்பொருளை அறிய மாட்டார்கள்.
தனது வீட்டின் உறியிலே தயிராக வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைந்து வெண்ணை
தேடுகின்ற மூடரைப் போல உனக்குள்ளேயே இருக்கும் இறைவனை அங்கும்
இங்குமாய் தேடி அலையும் அறிவை அறியாதவுருக்கு எப்படி எடுத்துரைத்து அணுகுவது.
**********************************
சிவவாக்கியம்–- 077
இருவர் அரங்கமும் பொருந்தி
என்புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர்
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே
சக்தியாகிய உடலும் சிவனாகிய
உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள்.
நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து
அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து
அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.
**********************************
சிவவாக்கியம்–080
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.
மண்பானை கவிழ்ந்து
உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்.
வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.
ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம்
என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு
மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில்
நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!
..அன்புடன் கே எம் தர்மா.
No comments:
Post a Comment