சிவவாக்கியம்-065
தீர்த்தம்
ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல்
எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே
தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும்
சிவாயம் அஞ்செழுத்துமே.
தலம் , தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி
நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம்
தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள்
தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது
இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள
தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி
அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம்
செய்யுங்கள்.
******************************
சிவவாக்கியம்-069
ஈன்ற வாசலுக்கே
இரங்கி எண்ணிறந்து போவீர்காள்
கான்ற வாழை
மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத்
திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன்ற மாயை
விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே
பெண்கள் மேல் கொண்ட மையலினால்
அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள்! வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து
காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!! மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை
அறிந்து கொள்ளுங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற
நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து
தியானித்திருக்க வல்லவர் ஆனால் மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு
ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.
**********************
சிவவாக்கியம்-070
உழலும் வாசலுக்கு
இறங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும் வாசலைத்
துறந்து உண்மை சேர எண்ணிலிர்
உழலும் வாசலைத்
துறந்து உண்மை நீர் உணர்ந்த பின்
உழலும் வாசல்
உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!!
வீடு மனைவி மக்கள் செல்வம்
என்று அதற்காகவே அலைந்து உலக வாழ்வில் இன்ப துன்பங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும்
ஊமை மக்களே! நம்மை மீண்டும் பிறவிப்பிணியில் ஆட்படுத்தி உழலும்
அந்த வாசலைத் துறந்து உண்மையை உணர்ந்து மெய்ப்பொருள சேர்ந்து மீதும் பிறவா நிலை
பெற எண்ணம் வையுங்கள். அனைத்தையும் துறந்து அவனே கதியென சரணடைந்து தன்னைத் தான் அறிந்து தனக்குள்ளேயே
இறைவன் இருக்கும் உண்மையை உணர்ந்து தியானியுங்கள் நம்மில் இருக்கும் பத்தாம் வாசலில்
உள்ளிருந்து உழலும் சோதியான மெய்ப் பொருளையே பற்றி இருங்கள் நீயே அதுவாகிய
பெருன்மையாக ஆவீர்கள்
அன்புடன்
கே எம் தர்மா.
0 comments:
Post a Comment