வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?

கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?                                                           ச. பொன்னம்பலம், பரந்தன்


பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே சொல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம். இருந்தபோதும் இது எல்லா முதியவர்களையும் ஒரே விதமாகப் பாதிக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன. வேலைகள் செய்தாலும் அது இளவயதில் இருந்ததுபோல துடியாட்டமாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. படிப்படியாக உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும்.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் சப்பிச் சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை. இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பார்க்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் கெட்டுவிடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்.

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பாலிலும் பாற்பொருட்களிலுமுள்ள லக்டோஸ் என்ற பொருள் ஒத்துக்கொள்வதில்லை. பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸ்கட் போன்றவற்றை அவர்களது உணவுக் கால்வாயால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்  பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலற்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு. பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே 'சாப்பிட்டால் வயிற்றால் போகிறது' என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

'அம்மா சாப்பிடிறா இல்லை. சத்துமா எழுதித்தாங்கோ என்று கேட்காத பிள்ளைகளே இல்லை. தேவையில்லாமல் சத்து மாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது. எடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுகக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும். மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை போன்றவை சேர்த்து உணவு தயார்ப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை அவர்களது வயதில் ஏற்படக் கூடிய பிரஸர், நீரிழிவு எடை அதிகர்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம். பதிலாக மணமும் சுவையுமுள்ள இலைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம், எலுமிச்சம் பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும்.இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு, கறுவா போன்றவையும் உதவலாம்.

இவற்றோடு பார்வைக் குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம். வயதாகும் கற்றரட், மற்றும் விழித்திரைப் பாதிப்பு ஆகியவற்றால் பல முதியவர்களின் பார்வை தெளிவாக இருப்பதில்லை. இதனாலும் உணவில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முதியவர்கள் பெரும்பாலும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். இவற்றில் சில வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை போன்றவற்றிற்னு காலாகலாம்.

' சரியான மலச்சிக்கல். சாப்பிடவே முடியுதில்லை' என்று என்னிடம் பல முதியவர்கள் முறையிடுவார்கள். உண்மைதான் பல முதியவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல், சில மருந்துகளும் காரணமாகலாம். மருந்து காரணமா என்பதையிட்டு மருத்துவருடன்  ஆலோசனை பெறவும்.

உணவு வேளையில் கூட இருந்து கதைத்துப் பேசி உண்பதற்கு யாருமில்லாததும் சிலருக்குப் பிரச்சனையாக இருக்கிறது. குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது. 'சாப்பிட்டு என்ன..' என ஆற்றாமை சூழ்ந்துகொள்கிறது. எதைச் சாப்பிட்டோம் எப்படிச் சாப்பிட்டோம் என்ற நினைவின்றி ஏதோ விழுங்கினோம் என்ற நிலை ஏற்படுகிறது சிலருக்கு.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் அக்கறை போதிய கவனம் வேண்டும்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்.


No comments:

Post a Comment