"நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால்
சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால்
கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால்
செல்லாமல் செல்லும், என்னை
தடுக்கிறாய்!"
"துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில்
கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி
அள்ளாமல் அள்ளி, அன்பை கொட்டி
தள்ளாமல் தள்ளி, என்னை
அணைக்கிறாய்!"
"பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி
வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து
நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு
பள்ளத்தில் பதுங்கி, என்னை
ஏங்கவிடுகிறாய்!"
"மல்லாந்து மஞ்சத்தில், படுத்து இருந்து
கல்லாமல் கற்ற, லீலைகளை காட்டி
எல்லோரும் எண்ணாத, அரட்டை அடித்து
எல்லைகளை எடுத்தெறிந்து, என்னை வீழ்த்துகிறாய்!"
"தாள்களில் தாரமாய், ஓவியம் வரைந்து
வேள்விகள் வேண்டாமல், வரங்கள் தந்து
கேள்விகள் கேட்காமல், உன்னையே தந்து
வெள்ளத்தால் வெளுக்காத, வாழ்வு
தருகிறாய்!"
"வள்ளங்களில் வந்து, கரை சேரும்
கொள்கை கொண்ட, தந்திர பறவையாய்
கள்ளத்திலும் கண்ணியம், கடைப் பிடித்து
தோள்களில் தோரணமாய், சாயா காரிகையோ!"
"ஆழ்ந்த ஆசையும், இளமையும் சேர
வீழ்ந்தும் வீழாமலும், உன்னை ரசித்து
தாழ்ந்த தாழ்வாரத்தில், குந்தி இருந்து
வாழ்க வாழ்கவென, உன்னை வாழ்த்துகிறேன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment