உடற்பருமன்
அதிகமானவர்கள் 'பேலியோ
டயட்'
(Paleo diet) மேற்கொண்டால்
உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும்
என்கின்றார்கள் ,உண்மையா?
கே.விதுசன்
கிளிநொச்சி
பதில்:- உங்கள் கேள்வியான பேலியோ டயட் டின்
பயன்கள் பற்றி கருத்துக்கள் உண்மையா என்பதற்கு வரு முன்னர் 'பேலியோ டயட்' என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தை அளிப்பது
அவசியம் என நினைக்கிறேன். அதுவே கேள்விக்கான விடையினை பெருமளவு
தெளிவுபடுத்திவிடும் எனவும் கருதுகிறேன்.
'பேலியோ டயட்' என்பதை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் பழைய
கற்கால உணவு முறை எனலாம். 'பேலியோ டயட்' றை வேடுவர்களின் தேடல் உணவு, குகை மாந்தரின் உணவு போன்ற வேறு பெயர்களிலும்
அழைக்கிறார்கள்.
அதாவது மனித இனமானது விவாசாயத்தை மேற்கொள்வதற்கு
முன்னைய காலத்தில் மிருகங்களைக் கொன்று அதன் தசைகளையும், மீன்களையும், மரம் செடி கொடிகளிலுள்ள காய்களையும் பழங்களையும்
விதைகளையும் உண்டது போன்ற உணவு முறை என்பதாகும். குறைந்தது 25 மில்லியன் முதல் 10.000 ஆண்டுகளுக்கு முன்னரான மனிதர்களின் உணவு முறை
எனக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் என்ன உணவு உட்கொண்டார்கள் என்பது பற்றி
எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. என்ன உட்கொண்டிருப்பார்கள் என நாம் எமக்குள்ள
அறிவு மூலம் நாமே கற்பிதம் கொண்ட முறை எனலாம்.
விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலத்து
உணவு முறை என்று கொள்ளும் போது அதில் அரிசி கோதுமை குரக்கன் சாமை போன்ற தானித
வகைகள் எதுவும் இருக்காது. பால் தயிர் உப்பு சீனி போன்றவையும் இருக்காது. அதே போல
எண்ணெய் பொரித்தல் வறுத்தல் போன்ற உணவு தயார்ப்பு முறைகளும் இருக்காது. கொழுப்பு
என்பது மிருகங்களின் தசைகளிலிருந்து விதைகளிலிருந்தும் பெற்றதாக மட்டுமே இருந்திருக்கும்.
போசாக்கு ரீதியாகப் பார்க்கும் போது புரத
உணவுகள் அதிகமுள்ளதும், மாப்பொருள் உணவுகள் மிகவும் குறைந்த அளவிவானதும், பொரித்தல் வதக்கல் போன்ற பதப்படுத்தல் முறைகள் அற்றதுமான உணவு முறை என்று
கொள்ளலாம். கேக், பிஸ்கட், பற்றிஸ், ரோல்ஸ், ஐஸ்கிறீம் போன்ற நவீன கலோரிக் குண்டுகள் எதுவும் இந்த உணவு முறையில்
நெருங்காது.
இயற்கையோடு இணைந்த, பதப்படுத்தல் முறைகள் அற்ற, புராதன மனிதனின் உணவு முறையைக் கைக்கொள்வதால்
எடை அதிகரிக்காது, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நவீன நோய்களுக்கான சாத்தியம் குறைந்து ஆரோக்கியமாக
வாழலாம் என்பதே இந்த உணவுமுறையைக் கைக்கொள்பவர்களின் நோக்கமாகும்.
இந்த உணவுமுறையின் நன்மைகள் என்று சொல்லப்படுவவை
எவை?
அரிசி கோதுமை போன்ற மாப்பொருள் உணவுகளும்
கொழுப்பு உணவுகள் நொறுக்குத் தீனிகள் தவிர்க்கப்படுவதால் உட்கொள்ளப்படும் கலோரியின்
அளவு குறைவடையும். இதனால் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.
உட்கொள்ளப்படும் உணவின் அளவு எவ்வளவு அவற்றின்
கலோரிப் பெறுமானம் எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட வேண்டிய தேவை இல்லாததால் சுலபமான
முறை. சங்கடங்கள் இன்றி சுலபமாகத் தொடரக் கூடிய முறை எனலாம்.
சொல்வதற்கு சுலபமாக இருந்தபோதும் பல நடைமுறைப்
பிரச்சனைகள் இந்த பேலியோ டயட் முறையில் இருக்கின்றன.
முதலாவதாக கற்கால மனிதர்கள் எதைச்
சாப்பிட்டார்கள் என்பது பற்றிய தெளிவான உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது. எனவே
நாம் இப்பொழுது கடைப்பிடிக்கும் இந்த உணவு முறையானது ஊகத்தை மட்டுமே அடிப்படையாக
கொண்டது.
அடுத்து இதுதான் பேலியோ டயட் என்று
உத்தியோகபூர்வமான வரையறுக்கப்பட்ட உணவு முறை எதுவும் கிடையாது. பலரும் தங்கள்
கற்பனைக்கு ஏற்றபடி சொலிகிறார்கள்ளூ உட்கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு சிலர் பால் தயிர் மற்றும் தானிய
உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அது ஒரு சமபல வலுவுள்ள
ஆரோக்கிய உணவாக இருக்குமா என்பது சந்தேகமே.
பொதுவாக இந்த உணவு முறையில் இறைச்சி உட்கொள்வது
அதிகமாக இருக்கிறது. ஆனால் கொலஸ்டரோல் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் இன்றைய
காலகட்டத்தில் அவற்றின் உபயோகத்தை அளவோடு வைத்திருக்குமாறே இப்பொழுது
அறிவுறுத்தப்படுகிறது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடை இறைச்சிகளைத்
தவிர்த்து இச்சையாக மேயும் கால்நடை இறைச்சியையே உண்ண வேண்டும் என பேலியோ டயட் டின்
சில தீவிர ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது நடைமுறைச் சிக்கலானதும் செலவை
அதிகரிக்கச் செய்யும் விடயமாகவும் இருக்கிறது.
இந்த உணவுமுறையானது ஒரே மாதிரியாக இருப்பதாலும்
பல்வேறு வகைகளையும் உள்ளடக்குவதில்லை என்பதால் பலருக்கு சிலகாலத்திற்குள்ளேயே
சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதும் உண்மையே.
நாம் கற்கால மனிதர்கள் போல உறுதியான உடல்
உள்ளவர்களாக, நீரிழிவு, கொலஸ்டரோல், இருதயநோய்கள் போன்றவை வராமல் வாழவேண்டுமானால்
அந்த உணவு முறையை மட்டும் கடைப்பிடிப்பது
போதுமா?
எங்கள் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அவர்கள்
முழுநேர உடல் உழைப்புடன் வாழ்ந்தவர்கள். மாறாக இன்றைய மனிதர்கள் உடல் உழைப்பின்றி
கதிரையே கதி என்று நாள் முழுவதும் கிடப்பவர்கள். போதிய உடல் உழைப்போ உடல் உழைப்போ
இன்று கிடையாது.
எனவே அவர்களுக்கு என்று நம்பப்படும் உணவு முறை
எமக்கு உதவுமா என்பது சந்தேகமே. அதே நேரம் ஓடியாடித் திரியாத உடல் உழைப்பற்ற
இன்றைய வாழ்க்கை முறைக்கு இன்றைய வழமையான உணவு முறைகள் பொருத்தமானவை என்றும் சொல்ல
முடியாது. நிச்சமாக மோசமானவையே.
எனவே பேலியோ டயட் முறையில் சில மாற்றங்களைச்
செய்ய வேண்டும். தீட்டாத தானியங்கள் பால் பாற்பொருட்கள் போன்றவற்றிற்கு இடம்
அளிக்க வேண்டும். அத்துடன் தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்புக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் சரியாக வரையறுக்கப்பட்ட ஒரேயொரு பேலியோ
டயட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இறுதியாக 'பேலியோ டயட்' (Paleo diet) மேற்கொண்டால் உடற்பருமன் குறைவதோடு, நீரிழிவு போன்ற நோய்களும் குணமாகும் என்கின்றார்கள் ,உண்மையா? என்ற கேள்விக்கு விடையாக எடை குறையும் என்பது
நிச்சயம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆனால ஏற்கவே உள்ள நீரிழிவை முற்று
முழுதாக குணமாக்குவது என்பது சாத்தியமி;ல்லை.
டொக்டர்.
ஏம்.கே.முருகானந்தன்
குடும்ப
மருத்துவர்
No comments:
Post a Comment