"கல்வி புகட்டுபவன்
ஆசிரியர் என்றாலும்
கடமையை புனிதமாக
மதித்து அவன்
கருவறையில் ஒருவன்
உயிர்பெறுவது போல
கரும் பலகையில்
கற்பிப்பவனே ஆசான்!"
"மக்களின் அறியாமை
நீக்கி அறிவுவேற்றும்
மகத்தான இப்பணியே
ஆசிரியர் அறப்பணி
மகிழ்வுடன் வரவேற்று
அறிவினை பகிர்ந்து
மனசோர்பு அற்று
அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!"
"கவிதையை கவிஞனைப்
போல் வாசித்து
கணித சிக்கலை இலகுவாக
போதித்து
கருத்துக்களை சிறிதாக
சிறப்பாக பதித்து
கலக்கம் போக்கி
மனிதனாக்குபவன் ஆசிரியர்!"
"ஆசான் இன்று
ஒருவருமான தொழிலாகி
ஆயிரமாண்டுகளாக சேவை
செய்ததை மறந்து
ஆசையற்று கவனமற்று
ஆர்வம் அற்று
ஆசிரியர் நிலை இன்று
தட்டுத்டுமாறுது!"
"பெற்றோர் இருவரும்
வேலைக்கு போக
பெரிதாக கவனம்
இல்லாமல் போக
பெருமையான மதிப்புகள்
மாணவரிடம் குறைய
பெரும்பழி
சுமக்கிறான் இன்றைய ஆசான்!"
"குருகுலதில்
தொண்டுசெய்து பெற்ற கல்வி
குடும்பத்தை
விட்டுவிலகி கற்ற அறிவு
குணம் பக்குவப்பட்டு
அறிந்த அனுபவம்
குன்றாய் அவனை
உயர்த்திக் காட்டியது!"
"காலம்மாற
நாகரிகத்தின் கோலமும் மாற
காத்திரமான அமைப்பாக
பாடசாலை தோன்ற
காலையில் மாணவர்
வகுப்பில் ஒன்றியிருக்க
காலட்சேபம்
செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!"
"மரியாதை இல்லை இன்று
கவனமுமில்லை
மருந்துக்கு கூட இன்று ஒழுக்கமுமில்லை
மல்லுக்கட்ட
முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க
மந்தமாய் போயிற்று
இன்று கற்றல்நெறியும்!"
"ஆசான் காட்டும்
பாரபட்சமும் அவசரமும்
ஆத்திரம் கொண்டு
தண்டிப்பதும் திட்டுவதும்
ஆழமறிந்து ஆளையறிந்து
படிப்பிக்க தவறியதும்
ஆசிரியர்நிலை இன்று
தெய்வமற்று போயிற்று!"
"சிலநேரம் மாணவனை
கண்டித்தும் உணர்த்தியும்
சிலநேரம் தோள்
கொடுத்தும் தாங்கியும்
சிலநேரம்
வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும்
சிந்தித்து
படிப்பிப்பதே இன்றைய அழகு!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
நல் மாணாக்கரை உருவாக்கிய பல ஆசிரியர்கள் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், ஆனால் பிரதேச வேற்றுமையினை நெஞ்சில் வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்த ஆசிரியர்களும் உண்டு. அதேவேளை அதே வாதத்தினால் ,மாணவர்களினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் உண்டு.
ReplyDelete