ஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்


இலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி ,அவள் அக்கிராமத்தில்   அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும்  அவள் என்றுமில்லாத வகையில் மிகவும் பரபரப்பாகவும் , பதற்றத்துடனும் இருந்தாள்.

 

செல்லக்கிளி  5 ஆம் வகுப்பு வரையில் அருகே உள்ள மிஷன் பாடசாலையில் தனது வகுப்பினை சென்ற வருடம் தான்  நிறைவு செய்திருந்தாள். அவ்வூரில் 5 ம் வகுப்பிற்கு மேல் கொண்ட பாடசாலை இல்லாதபடியால் அவளை பக்கத்து ஊரில் உள்ள பாடசாலையில் சேர்த்திருந்தார் அவளின் அப்பா அழகேசன் .இன்று முதல் நாள் பேருந்தில் பாடசாலை செல்லவேண்டும், இதுவே அவளின் பரபரப்புக்கும் பதற்றத்திற்கும் காரணமாக இருந்தது.

 

'இங்க பார் செல்லம், சாப்பாடு கட்டி வச்சிருக்கேன், கொட்டாம சாப்பிடவேணும், இவ்வளவுகாலம் வாத்தியரிடடை நல்லபேர் வாங்கினமாதிரி ,பெரிய பள்ளிக்கூடத்திலும் கெட்டிக்காரியா இருக்கவேணும், உன்னோட படிச்ச ஜெயவதனியும்  பஸ்ஸில வருவாஇரண்டுபேரும் கவனமா தெருவை கடக்கவேணும்கவனம் என்ன! ' என்றவாறே அவளின் தாய் பரமேசுவும் செல்லக்கிளியின் பாடசாலைப்  பையினைச் சரிப்படுத்திக் கொண்டாள்.

 

அப்பாடசாலை சென்று இறங்கின செல்லக்கிளிக்குக்கும் , ஜெயவதனிக்கும்  பெரிய ஆச்சரியம். என்ன எவ்வளவு பெரிய கட்டடம் . எத்தனை,எத்தனை மாணவர்கள் எத்தனை,எத்தனை ஆசிரியர்கள்.,அப்பப்பாஇப்படியும்  பாடசாலை இருக்குமா? என்று எண்ணியவாறு திகைத்து நின்றவர்களை , ஓர் ஆசிரியர் அணுகி

 

'பிள்ளையள்   6 ம் வகுப்பா நீங்கள், 6ம் வகுப்புகள் அந்த கட்டிடத்தில் என சுட்டிக் காட்டினார்.

 

செல்லக்கிளிக்கு ஆசிரியர் கூறிய வகுப்புக்கள் என்றதன் அர்த்தம் புரியாமல் அருகில் வந்து கொண்டிருந்த ஜெயவதனியிடம் 'ஏண்டி? ஆசிரியர் வகுப்பு எண்டு சொல்லாமல் வகுப்புக்கள் எண்டு சொல்லுறா.என குடைந்துகொண்டாள். அவளும் 'ஒண்டும் தெரியாதடி ,பேசாமல் வா ' என்றவாறே ஆசிரியர் காட்டிய திசையில் சென்றனர். அங்கே வாசலில் நின்ற ஆசிரியர் ஒருவர் ''பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு இன்று புதுசா நீங்கள். அப்படியெனில் 6டி அந்த அறை .அதுதான் உங்கள் வகுப்பறை'' என சுட்டிக் காட்டினார். இருவருக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ,அவர்கள் கூறும் விதங்களும் வியப்பினையே கொடுத்தது. மீண்டும் செல்லக்கிளி 'அதென்னடி 6 ப்பிறகு ஒரு டி ''என ஜெயவதனியிடம் காதுக்குள் குசுகுசுக்க 'ஒண்டுமில்லையடி, நீயும் நானும் டி போட்டுத்தானே பேசுறம்,அப்பிடியாக்கும்' என்றதும் 'பக்' என்று வந்த சிரிப்பினை கையினால் பொத்தி அடக்கிக்கொண்டாள் செல்லக்கிளி.

 

தன் கிராமத்துப்  பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பிலும் 6,5,4 மாணவருடன் படித்த செல்லக்கிளிக்கு வகுப்பினுள் நுழைந்ததும் , 40 மாணவருடன் ஒரு வகுப்பறையில்  அமர்வது   ஆச்சரியமாகவே இருந்தது. அதுவும் , 6ம் வகுப்பிற்கென A ,B ,C , D என நான்கு அறைகள் இருப்பதாக அங்கு சக மாணவர்கள் பேசிக்கொள்வதனை செவியில் விழுந்தபோது ''அப்போ 6 ஆம் வகுப்பில் மட்டும் 240 மாணவரா?' என்ற கேள்வி நெஞ்சை தொட ,அவள் வியப்பு பலமடங்காகியது. மாணவர் தொகை அதிகரிப்பால் இவ்வருடம் இந்த கட்டடம் புதிதாக கட்டித் தரப்பட்டது என்றுவேறு  மாணவர்கள் அங்கு பேசிக்கொண்டார்கள்.


அன்றய புதுமையான, வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களுடன் பாடசாலையிலிருந்து திரும்பியதும்  அழகேசன்  வேலையால் வந்ததும், அவரை முகம்கூட  கழுவக்கூட விடாது அவர் மடியில் வீழ்ந்த செல்லக்கிளி , தான் கண்ட அதிசயங்களை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தவள் தொடர்ந்து  ..

 

''ஏனப்பா எங்கட ஊரில  இப்பிடி ஒரு பள்ளிக்கூடம் இல்லையப்பா?

 

மடியில் இருந்த செல்லக்கிளியின் தலையினை வருடிய அழகேசன்  ''இருந்ததம்மா! நாங்க படிக்கிற காலத்தில ,நீ 5ம் வகுப்புவரை படிச்சியே அதே பள்ளிக்கூடத்தில , நிறையப்  பிள்ளைகள் படித்தார்கள்தான். எல்லாம் காலம் மாறிப்போச்சுதம்மா, இப்ப என்ன அந்தப் பள்ளிக்கூடத்தில 5 வகுப்பிலையும் ,மொத்தம் 35 பிள்ளையள் தானே படிக்கினம். பிள்ளையளின்ர வரவு குறைவு எண்டதால ,கொஞ்ச நாளிலை பள்ளிக்கூடத்தை அரசாங்கம் முடிப்போடும்''  என்றவாறே பெருமூச்சினை வெளிப்படுத்திக்கொண்டார் அழகேசன்.

''ஏனப்பா ,இப்ப இப்பிடி?

''எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்த வேலையம்மா! ஊருக்குள்ள பணப்புழக்கம் கூடினதால ,பிள்ளையள் படிக்கவேணும் எண்ட ஊக்கம், பெத்தவைக்கும் குறைஞ்சுபோச்சு, பிள்ளையளுக்கும் மறைஞ்சு போச்சு! இதனால  ஊருக்குள்ள எழுத வாசிக்க தெரியாதவை எண்ணிக்கை தான் கூடிக்கொண்டிருக்கு, இப்பிடியே போன ஊரை யாரம்மா மதிப்பான்கள்?  வெளியில எங்கட ஊர் இது என்று தலை நிமிர்ந்து எப்பிடியம்மா சொல்ல முடியும்?

''ஏனப்பா! ,எங்கட ஊரில உயரமான கோவில் இருக்குதே "

சற்று சத்தமாகவே சிரித்துக்கொண்ட அழகேசன் ''செல்லக்கிளி , சனங்களுக்கு கோவில் தேவைதான், ஆனால் கோவில்கள் உயர்ந்து என்னம்மா பிரயோசனம் ? மக்களல்லவா உயரவேண்டும். கற்றவனுக்கு தானம்மா சென்ற இடமெல்லாம் சிறப்பும்,மரியாதையும் கிடைக்கும். கல்வி தானே மக்களை உயர்த்தும். கல்விதானே பெருமைகள் குவிக்கும். நீ மட்டும் படிச்சு ஒரு டொக்டராய் வந்துவிட்டால் உன் காலமெல்லாம் உனக்கு பெருமையும்,சிறப்பும், சமுதாயத்தில் மதிப்பும் இருக்காதா பிள்ளை. அப்பிடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில படிச்சு முன்னேறிவிட்டால் ஒவ்வொரு குடிக்கும் பெருமை இல்லையா? ஒவ்வொரு குடியும் வளர்ந்துவிட்டா , எங்கட கிராமத்துக்கே  பெருமை இல்லையா?

''என்னப்பா என்னை டொக்டருக்கா படிக்க சொல்லுறியள்?'' சிணுங்கிக்கொண்டாள் செல்லக்கிளி

''ஏன் ,செல்லம் டொக்டருக்கு படிச்சால் படிபடாதோ? என்ற கேள்வியுடன் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள் பரமேசு.

''அங்க பாருங்கப்பா அம்மாவை' மீண்டும் சிணுங்கினாள் செல்லக்கிளி

''சும்மா ஒரு உதாரணத்திற்குத்தானே சொன்னன்'' என்று சமாளித்துக்கொண்டார் அழகேசன்

வாசலில் ''செல்லக்கிளி''  என்றழைத்த ஜெயவதனியின் குரல் கேட்டு சிட்டாகப் பறந்து சென்றாள் செல்லக்கிளி. இருவரும்  சேர்ந்தால் ஒரே குசு குசுத்தான். பக்கத்தில் நிற்பவர் தன் காது செவிடென்றே நம்புவர்.

கதை ஆக்கம்: செ.மனுவேந்தன் 







No comments:

Post a Comment