எந்த நாடு போனாலும் தமிழன் ஊர்[கூட்டப்புளி] போலாகுமா?





கூட்டப்புளி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தின் தென் கோடியில் அமைந்து உள்ளது. இது ஒரு கத்தோலிக்க கிறித்தவ மக்கள் நிறைந்துள்ள கிராமம் ஆகும். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் மீன் பிடி தொழிலை நம்பி உள்ளனர். 

இப்போது கூட்டப்புளி அமைந்துள்ள இடம் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கடலால் சூழப்பட்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இன்றளவும் விளையாட்டு மைதானத்தில் காணப்படும் சிப்பிகளும் பாறைகளும் அதற்கு சான்றாக வரலாறு சுட்டிகாட்டுகிறது. கூட்டப்புளி ஊர் தோன்றிய காலகட்டம் எது என்று அறியமுற்படும்போது 1542-1543ம் ஆண்டுகளில் முத்துக்குளித்துறையில் திருமறை பரப்பு பணியாற்றிய புனித சவேரியார் மணப்பாட்டிலிருந்து கடற்கரை வழியாக பயணம் செய்யும் போது கூட்டப்புளி வந்ததாக ஏடுகள் தகவல் தருவதால் கி.பி.1542 ம் ஆண்டுக்கு முன்னரே  கூட்டப்புளி இருந்திருக்கிறது. ஆக கூட்டப்புளி ஊரின் வரலாறு ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு மேலானதாக கணக்கிடலாம்.

இன்னும் 1571ம் வருட தகவல் படி திருவாங்கூர் சமஸ்தான எல்கையையும் மதுரை  நாயக்கர்களின் ஆட்சி எல்கையையும் குறிக்கும் இடமாக கூட்டப்புளி இருந்துள்ளது இங்கு சுங்க சாவடி ஒன்றும் இருந்துள்ளதால் அப்பகுதியில் கூட்டப்புளி பிரபலமான ஊராக இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் 1544 முதல் 1597 வரை ஆண்ட மன்னர்களால் கடற்கரையோர மக்கள் பெரிதும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் அச்சமயத்தில் உவரிக்கு கிழக்கே உள்ள மக்களில் பகுதி பேர் மன்னார் (இலங்கை) சென்றதாகவும் மேலும் பலர் வீரபாண்டியன் பட்டினத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. இதே போல் உவரிக்கு மேற்குள்ள மக்கள் அனைவரும் அச்சமயத்தில் கூட்டப்புளி பிரபலமான ஊராக இருந்த காரணத்தால் கூட்டப்புளியில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம். எனவும் அத்தனை மக்களும் ஊரின் வடக்குப்பகுதிகளில் அமைந்திருந்த புளியந்தோப்புகளில் குடிசை அமைத்து இருந்ததால், கூட்டப்புளி என பெயர் பெற்றது எனவும் வரலாற்றால் உண்ரப்படுகிறது.

முத்துக்குளித்துறையில் திருமறை பரவிய அக்காலகட்டம்தான் கூட்டப்புளியிலும் கிறிஸ்துவம் பரவிய காலகட்டமாக இருக்க வேண்டும். 

கி.பி 52 முதல் 57 வரை இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவில் இறைபணி ஆற்றிய காலகட்டத்தில் இறைப்பணிக்காக தேர்தெடுத்து பகுதிகள் மலபார் மற்றும் கார்மணல் கடற்கரை பகுதியும் தான். அதில் மலபார் பகுதிகளில் கிறிஸ்துவம் வளர்ந்த அளவில் கார்மணல் பகுதியான முத்துக்குளித்துறையில் வளர வில்லை.

அதன் பின் 15ம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த போர்ச்சிகீசியர்களால் மீண்டும் கிறிஸ்துவம் வளர்க்கபட்டது. கி.பி.1534 ம் ஆண்டு கேவாவை இந்தியாவின் மறைமாவட்டமாக அறிவித்து மறைபரப்பு பணியை தீவிர படுத்தியது இக்காலகட்டத்தில்தான் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த  பரவர் இன மக்கள் தமிழகத்தை ஆண்ட (1544-1597) இந்து மன்னர்களாலும் முகமதியர்களாலும் துன்புறுத்தப்பட்டு பல்வேறு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

***1544 ஆம் ஆண்டு வெட்டும்பெருமாள் என்ற இந்து அரசன் கன்னியாகுமரியைத் தாக்கினான். புனித சவேரியார் கன்னியாகுமரி மக்களை மீட்டு மணப்பாட்டில் தங்க வைத்தார்.

***1551, 1553, 1560 ஆம் ஆண்டுகளில் புன்னக்காயல் தாக்கப்பட்டது.

*மணப்பாட்டுக்கு வடக்குப் பகுதியிலுள்ளவர்கள் மன்னாரில் (இலங்கை) குடியேறினர். கொள்ளை நோய் தாக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் மடிந்ததினால் 1564 ஆம் ஆண்டு, பெரும்பாலானோர், தங்கள் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

இவர்களுடைய வழிவந்த பரதகுல மக்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் காண்கிறோம்.

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயாபதியைத் (இடிந்தகரைக்கு வடக்குப் பக்கம்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஆரியப்பெருமாள் உவரியைத் தாக்கி, உவரியின் முக்கியமான ஆண்களைச் சிறைப்பிடித்தான். பெண்களை நிர்வாணமாக்கி, அவர்கள் தலைமுடியைக் கொண்டே, இருவர் இருவராகக் கட்டி, ஆட்டு மந்தைப் போல் தன் அரண்மனைக்கு ஓட்டிச் சென்றான் என்று கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலைக் கண்டு வெகுண்டெழுந்த பக்கத்து கடற்கரைக் கிராமங்களைச் சார்ந்த பரத இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு ஆரியப்பெருமாளையும், அவனுடைய அடியாட்களையும் தாக்கி மேலும் பலரையும் வெட்டிச்சாய்த்ததாகவும் அறிகிறோம்.

***1597ல் உவரி மக்கள் மணப்பாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

***1597 ஆம் ஆண்டின் இறுதியில் இயேசு சபை அதிபரின் ஆலோசனைப்படி ஆலந்தலை, தாளம்புளி மற்றும் திருச்செந்தூர் மக்கள் வீரபாண்டியன் பட்டணத்திற்கு புலம் பெயர்ந்தனர்.

இவ்வாறாக, அரசாண்ட மன்னர்களின் கோரப்பிடியில் சிக்கி, சிதைந்து போயிருந்த, உவரிக்கு கிழக்கே வாழ்ந்த கடலோர மீனவர்கள் மணப்பாடு, வீரப்பாண்டியன் பட்டணம், இலங்கை போன்ற இடங்களுக்குச் சென்று விட்டனர். அப்படியானால் உவரிக்கு மேற்கே, கன்னியாகுமரிக்கு கிழக்கேயுள்ள கடலோரக் கிராமங்களில் வாழ்ந்த பரவர் எங்கு குடியமர்த்தப்பட்டனர்? இங்கேதான் கூட்டப்புளி தலைநிமிர்ந்து நிற்கிறது.

கூட்டப்புளி, கடற்கரைக் கிராமங்களில் முக்கியமான அந்தஸ்த்தைப் பெற்றிருந்த காரணத்தினால், வீரமும், விவேகமும், ஆளுமைத் தன்மையும், வந்தாரை வாழவைக்கும் மனித நேயமும் கொண்ட மக்கள் வாழ்ந்த கூட்டப்புளியே பாதுகாப்பான இடம் என்று கருதிய இயேசு சபை அருட்பணியாளர்கள், கூந்தன்குளியிலிருந்து கூட்டப்புளிக்கு இடைப்பட்ட ஊர்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்களை, கூட்டப்புளியில் குடியமர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தக் குடியமர்த்தலுக்கு முன்னர், கூட்டப்புளி மக்கள் தற்போதுள்ள ஊருக்கு, ஒரு மைல் தொலைவில் கூட்டம் கூட்டமாகயிருந்த புளியமரத் தோப்புகளில், குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர் என்கிறார் வரலாற்று ஆசிரியர் Georg Schurhammer. (.... there were living three or four families in a tamarind grove one mile away from the present village.)

புளியமரத் தோப்புகளில் வாழ்ந்ததாலேயே இந்த ஊருக்கு கூட்டப்புளி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத்தோன்றுகிறது.

 முன்னோர்கள், கூட்டப்புளி விலக்கு, வரலாற்றுப் புகழ்மிக்க ஊருணிக்கு வடக்கே, பழைய ஆலமரம் நின்ற பகுதிகளில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று  யூகித்துக் கொள்ளலாம்.

 மூண்றாண்டுகளாக நீண்ட இக்கொடுமைக்கு முடிவு கட்டும் எண்ணத்தில்தான் முத்துக்குளித்துறை பரத குலத்தலைவர்கள் 15 பேர் கொண்ட குழு (பட்டங்கட்டிமார்) கொச்சியில் இருந்த போர்ச்சுகீசிய அரசின் பிரதிநிதி ஜான் டா குரூஸ் ஐ சந்தித்து உதவுமாறு கேட்டார்கள். 

பரவர் இன மக்கள் அனைவரும் கிறிஸ்துவத்தில் இணைவார்கள் என்றால் கொடுமைக்காரர்களிடமிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் உங்களை பாதுகாப்போம் என  வாக்குறுதி தந்தார் ஜான் டா குரூஸ். இதை அறிந்த அனைத்து பரவ ஊர் மக்களும் சம்மதிக்கவும் செய்தனர்.  இதை ஜான் டா குரூஸிடம் தெரிவிக்க சென்ற 85 பட்டங்கட்டிமார்களும் அருட்தந்தை மிக்கேல் வாஸ் என்பவரால் கொச்சியிலுள்ள மதர் ஆப் கார்ட் என்ற ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது.

அதை அடுத்து கி.பி 1536 ஆம் ஆண்டு 30 பகுதிகளின் 20000 க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்களாக இணைந்தனர். அவ்வருடத்தின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆண்களுக்கும் மே முதல் அக்டோபர் வரை பெண்களுக்கும் என எல்லாருக்கும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது.

 

எனவே இந்த காலகட்டத்திலோ அல்லது புனித சவேரியாரின் மறைபரப்பு பணியான கி.பி.1542 கால கட்டத்திலோ கூட்டப்புளி மக்கள் கிறிஸ்தவ மதத்தில் இணைந்திருக்கலாம்.

கூட்டப்புளியில் புனித வளனாருக்கு ஆலயம் ஒன்று எழுப்ப பட்டது அக்காலத்தில்தான். அதன் பின் 1857 ம் ஆண்டு ஆலயம் பெரிய ஆலயமாக புதுபிக்க பட்டது. 

கூட்டப்புளி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம், சமுதாய நலக்கூடம், சிறிய வணிக வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் தற்போது அமைந்துள்ளன.


1969-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தொடங்க, மீதம் தேவைப்பட்ட பணத்திற்கு, தங்களது தங்க நகைகளை கழட்டிக் கொடுத்த, கூட்டப்புளி ஊர் பெண்கள்களின்  பாதம் பணிகின்றனர் இன்றய அவ்வூர் இளையோர். 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்பதை நிரூபித்துக்காட்டியவர்கள் கூட்டப்புளி ஊர் மக்கள். மலைபோல வந்த துன்பத்தைக் கூட ஒற்றுமையால் மடுபோலாக்கி வெற்றிவாகை சூடியவர்கள். பொருளாதாரச் சிக்கல்களைக் கூட மிகச் சாதுர்யமாகச் சமாளித்த பொருளாதார மேதைகள் கொண்டு இன்று வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது கூட்டப்புளி.


தொகுப்பு:செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment