எனக்கு 32 வயது. பனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?--கே. நிலானி நல்லூர்
பதில்:- பித்த வெடிப்புப் பிரச்சனை என்கிறீர்கள். பாதங்களில் அதிலும் முக்கியமாக குதிக்காலிலும் அதன் ஓரங்களிலும் ஏற்படும் தோல் வெடிப்புகளையே பித்த வெடிப்பு என்கிறோம். உண்மையில் இந்த வெடிப்பிற்கும் பித்தத்திற்கும் (Bile) எந்தவித தொடர்பும் கிடையாது. எனவே பித்த வெடிப்பு என்பது தவறான சொல்லாகும். குதிக்கால் வெடிப்பு (Heel fissures) என்பதுதான் சரியான பதமாகும். ஆனால் எல்லோருமே பித்த வெடிப்பு என்றே பேச்சுவழக்கில் சொல்லி வருகிறோம்.
பித்த வெடிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வரும் என்றில்லை. சிலருக்கு குதிக்கால் ஓர சருமம் சொரசொரப்பாக இருக்கும். அதில் வெடிப்புகள் போன்ற அடையாளங்கள் மட்டுமே இருக்கும். பலருக்கு வெளிப்படையான வெடிப்புகள் இருக்கும். ஒரு கத்தியால் வெட்டியது போன்ற ஆழமான வெடிப்புகள் வேறு சிலருக்கு ஏற்படுவதுண்டு.
இது பெரும்பாலும் ஒரு அழகியல் பிரச்சனைதான். பார்க்கும்போது கால்கள் அசிங்கமாக இருப்பதை மட்டுமே பாதிப்பாகச் சொல்லலாம். மாறாக ஆழமான வெடிப்புகள் சற்று வேதனையை அளிப்பதுடன் நடப்பதற்கு சிரமத்தையும் தரலாம். மிக அரிதாக அதில் கிருமித்தொற்று ஏற்பட்டு வேதனை அளிப்பதுடன் புண் போலவும் தோன்றலாம்.
இது ஏன் வருகிறது.
முக்கிய காரணம் சரும வரட்சிதான். மழை மற்றும் பனி காலங்களில் சூழலின் ஈரப்பத்தன்மை மாற்றங்களால் கால் கைகளிலுள்ள சருமங்கள் வரண்டு சொரப்பாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். பழைய காலங்களில் இதைத் தடுக்க இலுப்பெண்ணை பூசுவார்கள். இப்பொழுது பலவகையான ஈரலிப்பை ஏற்படுத்தும் கிறீம் வகைகளை (Moisturizing cream) பூசுகிறார்கள்.
இதைப் போன்றதுதான் குதிக்காலில் ஏற்படும் பித்த வெடிப்பும். மழை மற்றும் பனி காலங்களில் ஏற்படும் சரும வரட்சியால்தான் ஏற்படுகிறது. சருமம் வரட்சியாக இருக்கும்போது வெடிப்புகள் தோன்றுகின்றன. அதீத எடை மற்றும் நீண்ட நேரம் நிற்பதால் அல்லது நடப்பதால் குதிக்கால் சருமத்திற்கு ஏற்படுகிற அழுத்தமும் காரணம் என்று சொல்லப்படுகிறது. வெறும் காலுடன் நடப்பது மற்றும் பாதத்தை மூடாது அப்பகுதியை மறைக்காத செருப்பை மட்டும் அணிவதும் இதை மோசமாக்கும் எனகிறார்கள்.
இதற்கு என்ன
தீர்வு என்பது உங்கள் கேள்வி. இப்பொழுது உள்ளதைக் குணப்படுத்த வேண்டும். மீண்டும்
வராமல் தடுக்கவும் வேண்டும்.
முக்கிய விடயம் குதிக்கால் சருமத்தை வரட்சி இன்றி குளிர்மையாக வைத்திருப்பதே ஆகும். குளிர்மையாக வைத்திருப்பது என்பது தண்ணீருக்குள் காலை வைப்பது என அர்த்தப்படாது. ஈரப்பதமளிக்கும் கிறீம் (Moisturizing) வகைகளைப் பூச வேண்டும். அவ்வாறு பூசும்போது வெடிப்புகளின் இடைவெளிகளுக்குள் அவை புகுமாறு சற்று அழுத்திப் பூசுவது நல்லது.
லோசன்களை பூசுவதை விட கிறீம் அல்லது ஓயின்மென்டாக உபயோகிப்பது கூடிய பலனைத் தரும். காலையில் எழுந்தவுடனேயே பூசிவிடுங்கள். இரவு படுக்கப் போகும் போதும் பூசுங்கள். தேவை ஏற்பட்டால் மதியமும் பூசலாம்.
சாதாரண குளிர்மையூட்டும் கிறீம்களை விட குதிக்கால் வெடிப்பிற்கு என விசேடமாக தயாரிக்கப்பட்ட கிறீம்கள் உள்ளன. அவற்றில் யூறியா, சலிசிலிக் அமிலம் போன்றவையும் கலந்திருக்கும். இவை சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதுடன் படைபோல ஒட்டிக்கொண்டிருக்கும் இறந்த சருமப் படிவுகளை அகற்றி சொரசொரப்பின்றி மிருதுவாக்க உதவும்.
படிகக் கல் கொண்டு மென்மையாகத் தேய்ப்பது தடித்த சொரசொரப்பான குதிக்கால் சருமத்தை மிருதுவாக்க உதவும். அப்படித் தேய்க்கும் போது தோல் சருமம் ஈரலிப்பாக இருக்க வேண்டும். குளித்தபின் அல்லது கால்களைக் கழுவிய பின்னர் தேய்க்கலாம். ஆயினும் நீரிழிவு நோயுள்ளவர்கள் படிகக் கல்லால் தேய்ப்பது நல்லதல்ல. பிளேட் கத்தி போன்றவற்றால் சுரண்டுவது எவருக்கும் உகந்ததல்ல.
வெறும் காலுடன் நடக்காதீர்கள். எப்போதும் பாதணி அணிந்திருங்கள். செருப்பு, சண்டல்ஸ் போன்ற திறந்த பாதணிகள் நல்லதல்ல. குதிக்காலை மூடும்படியான சப்பாத்து போன்ற பாதணிகளே உகந்தது. காலுறை (சொக்ஸ்) அணிபவராயின் அது காற்றோட்டமுள்ளதாகவும் ஈரலிப்பைப் பேணுவதுமான பருத்தியிலான காலுறைகளான இருக்க வேண்டும்.
எடை அதிகமானால் அதைக் குறைப்பது அவசியம். அத்துடன் நீண்டநேரம் ஓரிடத்தில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு இருந்தால் குருதிப் பரிசோதனைகள் செய்து அது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எக்ஸிமா, சொரசிஸ் போன்ற சரும நோய்கள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை சரியாகச் செய்ய வேண்டும்.
நீண்ட நேரம் கால்கள் தண்ணீருக்குள் ஊறுவதைத் தவிர்க்க வேண்டும். கால்களைக் கழுவினால் ஈரத்தை உடனடியாக துணியால் ஒற்றி அகற்றவும். வாசனைகள் மற்றும் மருந்துகள் கலந்த சவர்க்காரங்களை உபயோகிக்க வேண்டாம். பேபி சோப் அல்லது ஈரப்பதமளிக்கும் சோப் (moisturizing soap) போன்றவையே நல்லது.
டொக்டர். எம்.கே.முருகானந்தன்-குடும்ப மருத்துவர்