எந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ, அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து, அந்த அத்தனை மொழிகளையும் பூண்டோடு அழித்து, அந்த இனங்களின் சுவடுகளை இல்லாமல் செய்வதென்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.
உதாரணமாக, அமெரிக்காவில் செவ்விந்தியர்
மொழிகளும்,
அவுஸ்திரேலியாவில்
சுதேசிகள் மொழிகளும் அழிந்து கொண்டு இருக்கின்றன. கையில் அதிகாரம் கொண்ட
சிறுபான்மையினர், கூட்டுப் பெரும்பான்மையான அதிகாரமற்ற
சமூகங்களின் அடையாளங்களை சுலபமாக அழித்தொழித்து விடுவர்.
பல இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் கொண்ட, பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த பெரு நிலப்பரப்பு ஒன்றை, தம் ஆயுத பலத்தால் வென்றெடுத்து ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களுடைய அரச நிர்வாக வசதிக்காக, ஒரு நாடு என்ற அமைப்பில் வைத்து நிரவகித்து வந்தனர். ஆனால், அவர்கள் விட்டுச் செல்லும்போது, நாட்டைப் பழையபடி பிரித்துக் கொடுக்காது, 'இந்தியா' என்ற பெயருடன், முழு சனத்தொகையில் 39% மட்டும் இந்தி மொழி பேசும் இனத்திடம், மிகுதி 61% பல மொழி பேசும் இனங்களை ஆளும்படி விட்டுச் சென்றுள்ளார்கள். (உண்மையில் சுமார் 25% இந்தி, 14% உருது மொழி பேசுபவர்கள்).
ஆங்கிலேயர்கள், மதராஸில் உள்ள தமது கிழக்கிந்திய வர்த்தக கொம்பனி மூலம் பெருமளவில் மதராஸைக் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கூடுதலாகத் தமிழர்களையே பிஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு வேலை நிமித்தம் அழைத்துச் சென்றார்கள். இப்பொழுது பாருங்கள் எல்லா நாடுகளிலும் 'இந்தி' ய நாடு தனது அதிகார பலத்தினால், அங்கெல்லாம் வழக்கிலிருந்த தமிழை ஒழித்து, இந்தியை மட்டும் நிலை நாட்டி இருப்பதை. சிங்கப்பூரில் பலமுறை முயன்றும் சிங்கபூரிடம் இவர்கள் சூழ்ச்சி வெற்றியடையவில்லை. இலங்கை மலையகத் தமிழரிடமும் கை வைக்க முடியவில்லை.
இந்த இந்தி மொழி என்பது என்ன? எந்த ஒரு பகுதியிலும் ஒரு 150 வருடங்களுக்கு முன் உருப்படியாகப் பேசப்படவில்லை. வட பிராந்தியத்தில், சில இடங்களில் பேசப்பட்ட உருது மொழியின் பாரசீக, அரபுக் கலப்புகளுக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தைக் திணித்து, தேவநாகரி வரிவடிவத்தைக் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு மொழி. இந்த மொழி எந்த ஒரு வரலாற்றுச் சிறப்புகளோ, இலக்கிய படைப்புகளோ அற்ற ஒரு பின்தங்கிய ஒன்று. எந்தவிதமான அறிவியல் நூல்களோ, வாழ்வியல் தத்துவ சித்தாந்தங்களோ ஒன்றுமற்ற வெற்று மொழி.
ஆனால், தமிழ் மொழியோ பல்லாண்டு காலமாக வேற்று மொழிக் கலப்பு எதுவுமில்லாது, செழுமையும் தொன்மையும் கொண்ட செம்மொழி. பல்வேறு துறைகளிலும் பல்லாயிரக் கணக்கான நூல்களை உள்ளடக்கிய அறிவுப் பொக்கிஷம். தமிழரின் பண்டைய நாகரீகச் சான்றுகளையெல்லாம் இந்திக்காரர்கள் மூடி மறைத்து நம்மை ஓரம் கட்டுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள்.
ஏன் தமிழர்கள் கட்டாயம் இந்தி கற்கவேண்டும் அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. எத்தனை தமிழர்கள் இந்தி மாநிங்களில் வேலை செய்கிறார்கள்? வேலை செய்யப்போகிறார்கள்? அப்படி வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பெரும் பதவியில், ஆங்கில சார்பு ஸ்தாபனங்களில்தான் வேலை செய்வார்கள். இந்தி மாநிலத்தவர் (கூடுதலாக) படிப்பதில் பின் தங்கியவர்கள். பிள்ளைகளைப் பெறுவதில் முன் நிற்பவர்கள். ஆதலால் , பஞ்சம் நிமிர்த்தம் குடுப்பத்தில் அரைவாசியினர் தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு கண்ட, நின்ற வேலைகளுக்கெல்லாம் வந்து விடுவார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள், தமிழர் இந்தி படிக்க வேண்டுமா அல்லது அவர்கள் தமிழ் படிக்க வேண்டுமா?
இந்தியைப் படித்தாலும், எந்த உயர் படிப்பு படிக்கவேண்டும் என்றாலும் அதை ஆங்கிலத்தில்தான் அவர்களோ, நாங்களோ படிக்க வேண்டும். இந்த இந்தியை படித்தால் வீட்டில் நிற்கும் கூர்க்காவுடனும், மார்வாடிக் கடையில் நிற்கும் வேலை ஆளுடனும், அங்காடிக் கடைக் காரனிடமும், பனி பூரி விற்பவனுடனும் மட்டும்தான் கதைக்க இயலும். இவர்களுக்கும் கூடக் கதைக்க மட்டும் தெரியுமே ஒழிய எழுத, வாசிக்கத் தெரியாமல் இருக்கும். கதைக்கும் இந்தியும், எந்த வட்டார இந்தியோ அல்லது உருதுவோ யாருக்குத் தெரியும்? இவர்களுக்காகவா தமிழ் நாடு முழுவதும் பெயர்ப் பலகைகள் இந்தியிலும் இருக்க வேண்டும்?
'இந்தி' ய அரசாங்கம், இந்தி
மொழி பேசும் தங்கள் மாநிலங்களுக்குச் 'சிறப்பு கவனிப்பு' செய்து
வந்தாலும் அவர்களின் முயற்சி இன்மையால் பொருளாதாரத்தை மிகவும் பின் தங்கியே
இருக்கின்றன.
முதன்முதலாக இந்தி பொறிக்குள் விழுந்த
பீஹார் போஜ்புரி, மைத்திலி
முதலிய மொழிகளை இழந்து இன்று ஒரு பின்தங்கிய மாநிலம். உத்தர பிரதேச தாய்மொழி பிரஜ், பந்தேல்கண்டி, போஜ்புரி, பிரதாப்கர், ஆதி, கண்னோஜி
என்பனவும்,
உத்தராகண்ட்டின்
கடுவாலி, குமோவ்னி, ஹரியானாவின், ஹரியான்வி மொழிகளும், ராஜஸ்தானின்
ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி
என்பனவும்,
மத்தியபிரதேசத்தின்
உருது,மால்வி,நிமதி,அவாதி,பாகேலி
என்பனவும்,
காஷ்மீரின்
காஷ்மிரி மற்றும், ஜம்முவின்
டோக்ரி,பாடி, லடாக்கின், சட்டீஸ்கரின்
சட்டீஸ்கரி,கோர்பா, மேலும்
ஜார்கன்டின் ஜார்கன்ஷி, சந்த்தேலி மற்றும் பீஹாரி, உத்தரி, ஓடியா, மெதுவாக மராத்தி, பஞ்சாபி என்று ஏற்கனவே அழித்து
ஒழிக்கப்பட்ட தாய் மொழிகளில் ஒரு சிலவே.
மொத்தத்தில், 70
வருட காலத்தில்,
1,260 பேசப்பட்ட மொழிகளில் 520 மொழிகள் ஏற்கனவே முற்றாக
அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியிருப்பவை இறந்து கொண்டு இருக்கின்றன. திட்டமிட்ட
இந்தித் திணிப்பு, திரைப்படத்
திணிப்பு, ஊடகத்
திணிப்பு, வேலை
வாய்ப்பு மறுப்பு என்று பலவிதமான கலாசார சீரழிவுகள் மூலம் பொது மக்களின்
வரிப்பணத்தினை விரயமாக்கி ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் பரப்புதலில் எவ்வளவோ
வெற்றி கண்டுவிட்டார்கள்.
சுதந்திரத்தின் முன்னர் டெல்லியைச் சுற்றி ஒரு சிறு வட்ட பிராந்திய மொழியாய் இருந்த இந்த இந்தி இப்போது அசுர வேகத்தில் எவ்வளவு தேசத்தை ஆக்கிரமித்து விட்டது என்று மேலுள்ள இரு படங்களின் மூலம் கண்டுகொள்ளலாம். (நன்றி: 'கோரா')
தமிழரின் ஆங்கில மோகம் ஒரு பக்கத்தில் தமிழை
கொன்று கொண்டு இருக்கிறது. தாய் மொழியில் தமிழர் கொண்டுள்ள அக்கறையீனத்தினை தமிழரின் ஒரு பலவீனமாக இந்திய அரசு எண்ணி இலகுவாக இந்தியை திணிக்கலாம் என எண்ணுகிறது. இந்தி வந்தால் தமிழுக்கும் அதோ கதிதான், சங்கூத
வேண்டியதுதான்!
ஆங்கிலம் படித்தால் உலகம் எங்கும் செல்ல
இயலும் என்பது உண்மைதான். அதற்காக தமிழை ஒதுக்கிவிட்டு என்று அர்த்தமில்லை.
தமிழ்தான் எங்கள் மூச்சு, அடையாளம். தமிழ் ஒரு கலப்படமில்லாத மொழி.
தென்னிந்த மற்றைய மொழியினர் வேண்டுமானால் இந்தப் பொறி வலைக்குள் விழுந்து கொள்ளட்டும்.
அந்த மொழிகள் ஏற்கனவே சமஷ்கிருதம் கலந்தவைதான். அவற்றினுள் உள்ள வேற்று மொழிச்
சொற்களை எடுத்துவிட்டால் மிஞ்சி இருப்பது ஒரு அர்த்தமுள்ள மொழிகளாய் இருக்காது.
அதற்குள் இந்தி கலப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆனால் தமிழ் மொழி அப்படியானது
அல்ல!
ஆங்கிலம் சோறு போட உதவும். இந்தி தொட்டுக்க
ஊறுகாயும் தருமோ என்பது ஐயமே! இந்திப் பக்கம் வேலைக்குப் போனால், அங்கு
இந்தி தேவையாய் இருந்தால் அப்போது அவர்கள் மட்டும் பழகிக் கொள்வது கஷ்டமாய்
இருக்காது. அப்படியான அந்த ஓர் இருவருக்காக தமிழ் பிள்ளைகள் அனைவரையும் சிறு
வயதிலிருந்தே,
உருப்படி
இல்லாத ஒரு மொழியை, இந்தியாவின் வடக்கே ஒரு சிலர் பேசும் ஒரு
மொழியை படி என்று கட்டாயப்படுத்துவது என்பது ஒரு மூர்க்கத்தனமான சர்வாதிகாரமாகும்.
தமிழ் நாடு ஒரு மொழிவாரி மாநிலம். தமிழ்
மொழிக்கான மாநிலம் மட்டுமே. இந்தியா எல்லா மாநிலங்களின் கூட்டமைப்பே ஒழிய
இந்தியா 'இந்தி'(யா)
இல்லை. இங்கு இன்னொரு மாநிலக்காரன் வந்து தனது மொழியைப் படிக்குமாறு கட்டளை இட
முடியாது.
சுதந்திரத்தின்போது பாக்கிஸ்தான்
பிரிக்கப்பட்டதை இட்டு இப்பொழுது பாகிஸ்தானியர் கவலை கொள்ள்கின்றார்கள். ஏனென்றால்
ஒன்றாய் இருந்திருந்தால், முஸ்லிம்களின் சனப்பெருக்கத்தின் மூலம் முழு
இந்தியாவையே வெகு விரைவில் முஸ்லீம் நாடு என்று அறிவித்து இருக்கலாம் என்பதால்.
அப்படி நடந்திருந்தால், பிற சமயத்தவர்களுக்கு எந்த உரிமைகளும்
இருந்திருக்காது என்பது உண்மை. அந்த ஆதிக்கத்தில் இருந்து இந்தியர்கள் - நாம் இந்துக்கள்
என்று நம்பி இருந்தவர்கள் - அனைவரும்
காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்காமல்
பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்து நாடு என்று நினைத்து ஏற்றுக்
கொண்டிருக்கும்போது, ஏமாற்றி இந்தியைத் திணிக்கும்போது, தமிழ் நாடு என்று தனியான ஒரு
தேசத்தை கேட்டு எடுக்காமல் விட்டதன் விளைவு
இப்பொழுது தெரிகிறது. இந்திக்காரனின் ஆதிக்கத்தின்கீழ், மொழி
அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாழவேண்டி இருக்கின்றது.
மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான பரீடசைகள்
இந்தியிலும்,
ஆங்கிலத்திலும்
நடத்துகின்றார்கள். இதனால், இந்தி பேசாதவர்கள் மிகவும் மோசமாகப்
பாதிக்கப்படுவார்கள். இந்தியை முதல் மொழியாக உள்ளவர்களுடன், ஆங்கில மற்றும் இந்தியை
இரண்டாவது,
மூன்றாவது
மொழியாகப் படிப்பவர்கள்
போட்டி போடவேண்டுமாம்! என்ன அக்கிரமம்!
தமிழ் மாநில மத்திய இலக்காக்கள், வங்கிகள்
எல்லாவற்றுக்கும் தமிழே தெரியாத இந்திக்காரர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
ஆனால், வடக்கில்
மட்டும் தமிழன் போனால் இந்தி தெரியவேண்டுமாம்.
முந்தநாள் முளைத்த ஒரு மொழி படிப்படியாக பல பிராந்திய மொழிகளை தின்று
ஏப்பமிட்டு,
இப்பொழுது
பல்லாயிரம் ஆண்டுகளாக அழிக்கப்பட முடியாது, இன்னமும் செழித்து நிற்கும் நம்
தமிழ் மொழியை பூண்டோடு அழிக்க, சாணக்கியமான முறையில் பலவிதமான யுக்திகளுடன்
படை எடுத்துக்கொண்டு வருகின்றது. இதற்கு, சில சோரம் போன கூலிப்படையினரும்
நம்முள் உதவுகிறார்கள்.
இந்த இந்தியை அடியோடு வேண்டாம் என்று ஒதுக்கி
வைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
இல்லாவிடில்,
தமிழ் விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும்!
✍சந்திரகாசன் ,செல்வதுரை
தமிழ் இல்லாத அரசியல், நிர்வாகம், கல்வி, தொலைக்காட்சி, திரைப்பட, இசை மற்றும் தொழில் துறைகளில் ஏற்கனவே தமிழைத் தமிழனே அழித்துக்கொண்டுதானே இருக்கிறான். இனி இந்திக்காரன் வந்தாலென்ன, சீனாக்காரன் வந்தாலென்ன; தமிழ் அழிகிறது, அழிகிறதுதான்! ஒன்றும் செய்ய இயலாது!
ReplyDeleteதமிழை வைத்து பிழைப்பவர்களும் மேடையில் தமிழ்,தமிழ் என்று முழங்குவர்,பின் பிள்ளைகளுடன் ஆங்கிலமே பேசுவர் ,முழு தமிழ் உலகமே தமிழை அழிக்க தயாராகிவிட்டது.இடையில் ஈழம் கூக்குரல்கள்.அது யாருக்காக என விளங்கவில்லை
ReplyDelete