வைரஸ் காலத்தின் உணவுமுறை



வைரஸ் தொற்று பரவும் இந்த சூழலில், நான் சொல்லும் உணவு பழக்கத்தை,  பின்பற்றினால் நல்லது. சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை, ஏதோ விடுமுறை கிடைத்து விட்டது என்ற மனநிலையில், பலர் இருந்ததை பார்க்க முடிகிறது. பிரியாணி போன்ற விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம் என்று இருக்கின்றனர்; இது மிகவும் தவறு.

இஞ்சி:
காலையில் வெறும் வயிற்றில், கட்டை விரலின் நகம் அளவிற்கு, தோல் சீவிய இஞ்சியை, சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம். இஞ்சி நல்லது என்பதற்காக, நிறைய சாப்பிட வேண்டாம். தினமும் காலையில் சிறிய துண்டு சாப்பிட்டால், படிப்படியாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி நல்லது என்று இடித்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தோல் சீவி, சிறு துண்டுகளாக பயன்படுத்த வேண்டும். இடித்து போட்டு, அதன் சாறு இறங்கினால், நஞ்சாகி விடும்.

காபி:
இந்த நேரத்தில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'காபி குடிக்காமல் என்னால் இருக்க முடியாது... தலைவலி வரும்' என்று சொல்பவர்கள், பால் சேர்க்காமல், கருப்பு காபி குடிக்கலாம். டீ குடித்தால் நல்லது. ஆனால், பாலில் டீ துாளை சேர்த்து கொதிக்க வைக்காமல், டீ டிக்காஷன் போட்டு, கொஞ்சம் பால் சேர்த்து குடிக்கலாம்.
அதேபோல, கிரீன் டீ. நிறைய, 'ஆன்டி ஆக்சிடென்ட்' இருக்கிறது என்று, ஒரே நாளில் நான்கு, ஐந்து முறை குடிக்க கூடாது; அதிகபட்சம், இரண்டு முறை தான் குடிக்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால், இந்த நாட்களில் தவிர்க்கவும்; அது, அவ்வளவு ஆரோக்கியமான உணவு கிடையாது.

கஞ்சி:
வீட்டிலேயே இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக இருக்கும். எனவே, காலை அல்லது இரவு உணவு சிறுதானியத்தில் செய்த கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்று, ஆவியில் வேக வைத்த உணவு சாப்பிடலாம். உளுந்து கஞ்சிக்கு, கருப்பு உளுந்து பயன்படுத்துவது நல்லது.
மதிய உணவில், மிளகு, சீரகம் என, ஏதாவது ஒரு ரசம் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பருப்பு அதிகம் சாப்பிடக் கூடாது; 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும்.
கண்டந்திப்பிலி, வேப்பம் பூ கிடைத்தால், வாரம் ஒருமுறை ரசம் செய்து சாப்பிடலாம். இந்த சமயத்தில், தினமும் ரசம் சேர்த்துக் கொள்வது நல்லது.

துவையல்:
இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும். எந்த துவையலாக இருந்தாலும், அரைத்த மூன்று மணி நேரத்தில் சாப்பிட்டு விட வேண்டும். காலை அரைத்ததை இரவு சாப்பிடுவது, ப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்துவது என கூடாது. எந்த துவையலாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பின் கெட்டு விடும்.
சமையலில் காய்ந்த மிளகாய்க்கு பதில், மிளகு சேர்த்துக் கொள்வது அவசியம். மிளகையும், குழம்பு கொதிக்கும் போது போடாமல், அடுப்பை அணைத்த பின், எவ்வளவு காரம் தேவையோ, அந்த அளவு மிளகை இடித்து சேர்த்து, கலந்து கொள்ளலாம்.
வேக வைத்த காய்கறிகள் மட்டும் சாப்பிடவும். வறுத்த, பொரித்த காய்கறிகள் கூடாது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் பாசிப்பருப்பு சுண்டல் சாப்பிடலாம். தினமும் கீரை சாப்பிட்டால், சளியை அதிகப்படுத்தும்; 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும். முட்டையை தவிர்க்கலாம். பால், பால் பொருட்களை நேரடியாக சாப்பிட வேண்டாம். பிரியாணி, புளியோதரை இரண்டையும் தொடவே கூடாது.
வெண்டைக்காய், காலிப்ளவர், அப்பளம் இந்த சமயத்தில் சாப்பிடவே வேண்டாம். தக்காளியின் பயன்பாட்டை, முடிந்த வரை குறைத்துக் கொள்ளலாம். தயிரை தவிர்த்து மோர் குடிக்கலாம்.
அசைவ உணவுகள் ஜீரணத்தை மந்தப்படுத்தும் என்பதால், இந்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மது, சிகரெட்டை தவிர்ப்பதும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மது கார்த்தீஸ் -சித்த மருத்துவர் [9994493887]

No comments:

Post a Comment