"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்!"

"மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே
மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல்? 
மனதை பறிக்குதே காதல் கொட்டுதே 
மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை?"

"மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் 
மகத்துவம் பொருந்திய அழகு உடல் 
மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே
மலர் விழியால் ஜாடை காட்டுதே!"

"மறைப்பு கொடுத்த தாவணி விலக
மகிழ்வு தரும் வனப்பு மயக்க
மவுனமாய் திகைத்து நானும் நிற்க
மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின!"

"மருண்டு விழித்து நாணி குனிய
மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் 
மஞ்சர மாலையும்  ஒல்லி இடையும்
மஞ்சுளம் காட்டி காதல் வீசின!"

"மது உண்ட வண்டாக நானும்
மனம் கொண்டு மையல் கொண்டு
மன்மதன் போல் ஆசை கொண்டு
மன்றாடி அவள் தோளில் சாய்ந்தேன்!"

"மங்கல வாழ்வும் மங்காத உறவும்
மனங்கள் ஒன்றி மலர வேண்டுமென 
மனமார வாழ்த்தி தன்னையே தந்து
மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்!"

✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

1 comments:

  1. MANUVENTHAN SELLATHURAIMonday, August 31, 2020

    அருமையான கருத்துக்களுடன்,ஒவ்வொரு வரியும் ஓரெழுத்தினை ஆரம்பமாக கொண்டு ,கருத்துமுரண்பாடுகள் அற்ற இக்கவியின் முயற்சி,பாராட்டுக்கள்

    ReplyDelete