காளி ஆக்கினேன் அவளை


அன்று காலங்களில் அவள் வசந்தம்,
இன்று  ஒடிந்திடிந்து போனதும்
அன்று கலைகளிலே அவள் ஓவியம்
இன்று  உருக்குலைந்து விட்டதும்
அன்று மாதங்களில் அவள் மார்கழி
இன்று சூடேறிக் கொதிப்பதும்
அன்று மலர்களிலே அவள் மல்லிகை,
 இன்று வன்முறை ஆனதுவும்

அன்று பறவைகளில் அவள் மணிப் புறா,
இன்று காட்டேரி ஆகுவதும்
அன்று பாடல்களில் அவள் தாலாட்டு,
இன்று ஒப்பாரி வைப்பதும்
அன்று கனிகளிலே அவள் மாங்கனி,
இன்று வேம்பாய்க் கசப்பதும்
அன்று காற்றினிலே அவள் தென்றல்
இன்று சூறாவளி ஆனதும்

அன்று பால்போல் சிரிப்பதில் பிள்ளை,
இன்று பேயாய் கதறுவதும்
அன்று  பனிபோல் அணைப்பதில் கன்னி,
 இன்று யமனாய் உதைப்பதும்
அன்று கண்போல் வளர்ப்பதில் அன்னை,
இன்று கொடுமையாய் கடிப்பதும்
அன்று கவிஞன் ஆக்கினாள்  என்னை,
  இன்று காளி ஆக்கினேன் அவளை

எவ்வாறு? எனின்,

பொல்லாத குடியாலும் இல்லாத வசையாலும்
எல்லாமே, எல்லாமே என்னால்தான் - என்
பொல்லாத காலம் காதல்தனை மறந்து
சொல்லாத பொய் ஒன்றும் இல்லை - எனக்கு
நல்லாக குணமொன்றும் இல்லை - ஐயையோ
எல்லாமே, எல்லாமே என்னால்தான்

எல்லாமே, எல்லாமே என்னால்தான்

-செல்வதுரை,சந்திரகாசன் 

0 comments:

Post a Comment