பெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா?


                     

ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் அடிமைகளாகவே நடாத்தப்பட்டுள்ளமை சில வருடங்கள் வரையில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி,வாக்களிப்பு முதல்கொண்டு,இன்று தொடரும்  பல உதாரணங்கள் கூறலாம்.  பிறத்தகத்தில் ஆண்பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி,விளையாட்டுகளில் வளர்ந்து செல்ல, பெண்கள் வீட்டிற்குள் மாடுகள் போல் உழைகின்ற காலம் இன்னும் ஓயவில்லை. உணவிலிருந்து அனைத்தும் ஆண் பிள்ளைகளுக்கு விசேடமாக கிடைக்கும் வகையில்   பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிலை இன்னும் கனியவில்லை. பெண்களுக்கு    திருமணம் என்று வந்துவிட்டால் மாப்பிள்ளைக்கு பெரும் சீதனம் வழங்கியே, பெண் +சீதனம்=ஆண் எனும் கருத்தில்   ஆணுக்கு பெண் சமமல்ல என தம்மை  உயர்த்திக்கொள்வதாக காட்டும்  முதுகெலும்பற்ற  ஆண்வர்கத்தினருக்கு ஆதரவான  ஆண்களின் தாய்மாரின் கைகளும் இன்னும் ஓயவில்லை.

இந்தியாவில் கணவன் இறந்துவிட்டால், மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் 'சாரதா' தடைச்சட்டம் மூலம் தடுக்கப்பட்டது. சீதனக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது. இருந்தாலும் மறைமுகமாக சீதனம்   கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டுதான்  வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிறைவேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

கணவன் இறந்துவிட்டால் , மனைவி வெள்ளை புடவையுடுத்தி, தான் ஒரு  விதவை என சமுதாயத்தில் குத்திக் காட்டப் படுத்தலிலிருந்து , பொட்டு ,நகை ,உடை, நற்காரியங்களில் முன்னிற்றல் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமை சமுதாயத்தின் கையில் ஒப்படைக்கப் பட்டு அவள் ஓரங்கட்டப்பட்டு தனிமைப் படுத்தும் அதே வேளையில் , மனைவியை இழந்த ஆண் [-தபுதாரன் என்ற சொல்லே பாவனையில் இல்லாது மறந்துவிட்டது-] மட்டும் முழுமையான சுதந்திரப் பறவையாக வாழ்ந்திட இதே சமுதாயம்   ஏன் ,எப்படி அனுமதி அளித்தது என்ற கேள்வியும் இன்று எழாமலில்லை.

அடக்குமுறைகளிலும் , வன்முறைகளிலும் இருந்து பெண்களைப் பாதுகாக்கவே இந்தியா உட்பட உலக நாடுகளிலெல்லாம், அந்த,அந்த நாட்டு அரசுகள் பல்வேறுவகையான சட்டங்களை கொண்டுவந்தன. அவைமூலம் பெண்கள் ஓரளவு பாதுகாப்பினையும் , சம உரிமையும் பெற்றனர் என்பது நல்ல செய்திதான்.

ஆனால், பெண்களுக்காக வந்த சட்டங்களே இன்று பெண்களின் வாழ்க்கைக்கு எமனாகிவிட்டதா? வாழ்க்கைக்காக வந்த சட்டங்கள் , சட்டங்களுக்காக வாழ்க்கை என்று ஆகிவிட்டதா? சட்டம் என்பது வேறு, நடைமுறை வாழ்க்கை என்பது வேறு என்பதனை பெண்கள் உணரத்தவறினார்களா?

 மனிதனுக்கு மனிதன் கருத்துவேறுபாடுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன.அது மனித இயல்பு. அது வெவ்வேறு குறிகள் கொண்ட கணவன் மனைவிக்கிடையில் இன்னும் அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் தமிழரைப் பொறுத்தவரையில் படித்துவிட்டால் ஒரு கர்வம் வருவது இயல்பு.[அதை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.] அது இருவருக்கும் இருக்கும்போது கருத்து வேறுபாடுகள் அதிகம் வர வாய்ப்பு உண்டு.

 திருமண பந்தத்தில் இணையும் மண மகனுக்கு ஈடாகவே  மணமகள் படித்தவள், வேலைக்கு சென்று மணமகனைப்போல் சம்பாதிப்பவள் மட்டுமல்ல   அவளுக்கு என்று குழந்தைகள்  பாரம் கூட இருக்கப்போகிறது. அதற்காக அவள் பல தியாகங்களையும்  கடக்கவேண்டியுள்ளது. எனவே அவளின் பெற்றோரிடம் சீதனம் பற்றி பேசுவதே நியாயமில்லை என்பதனை மணமகனின் பெற்றோர் உணரவேண்டும்.

மேலும்  திருமணத்தின்பின் , மனைவியும் ஒரு மனித இனம் , அவளும் தன்னைப்போல் வேலைக்கு சென்று வருகிறாள்,அவளுக்கும் தன்னைப்போல் களை இருக்கும், அவளுக்கும் தன்னைப்போல் வேலையில் சிரமங்கள் இருக்கும், போதாது என்று வீட்டிலும் வந்து வேலை செய்கிறாள், அவளது உணர்வுகளை மதிக்கவேண்டும் ,தானும் ஏதாவது உதவி வீட்டில் செய்யவேண்டும் என்ற உணர்வு கணவனிடம் எழவேண்டும்.

இருவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதற்காக , யார் கருத்துக்களையும் யாரும் முறித்து நிராகரித்தலோ அல்லது வாயை  மூடு என்று நெஞ்சில் சொல்லால் அடித்தலோ பேச்சு சுதந்திரமாகாது.

சட்டம் என்பது மக்களை ஒழுங்குபடுத்தவே அமுலாக்கப்படுகிறது. அதில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதை பாவித்து தம் வாழ்க்கையினை தாமே சீரழித்துக்கொள்வதற்கு அல்ல. எடுத்ததெற்கெல்லாம் சுதந்திரம் என்று பேசிக்கொண்டு உனக்கும்,எனக்கும் இனி  சரிவராது என்று, சட்டத்தினை தனக்கு சாதகமாக்கி , விவகாரத்தினை  விவாகரத்தில் சென்று முடிப்பது  வாழ்க்கையல்ல, விவகாரத்தினை வென்று கடப்பதே வாழ்க்கை என்று  என்று பெண்கள் உணரவேண்டும். அதுவரையில் விவாகரத்துகள் விளைந்துகொண்டுதான் இருக்கும்.

👉செ.மனுவேந்தன்


1 comment:

  1. தாய்மை உணர்வுகொண்ட பெண்கள் சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து முடிவுகளுக்கு செல்லமாட்டார்கள்,வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அதில் இருவர் இணைந்ததே வாழ்க்கை,ஆணோ,பெண்ணோ தனித்து வாழ்ந்திடல் கடினம் ,பிரிபவர்கள் மேலும் சிக்கல்களையே சந்திக்கின்றனர்.

    ReplyDelete