[The belief and science of the sleep]
நாம் உறங்கும் பொழுது
எமது மனம் உண்டாக்கும் கதைகளும் உருவங்களும் [stories and images] தான் கனவு ஆகும். அவை தெளிவானவையாகவும்,
அவை உங்களுக்கு மகிழ்ச்சியாகவோ,
சோகமாகவோ, பயமாகவோ இருக்கக் கூடியதாகவும்,
அவை குழப்பமானதாகவோ அல்லது முற்றிலும் அறிவுக்கு
ஏற்புடையதாகவோ கூட தோன்றலாம். பொதுவாக,
உறக்கத்தின் போது எந்த நேரத்திலும் கனவுகள் ஏற்படலாம்.
என்றாலும் உங்கள் கூடுதலான தெளிவான
கனவுகள் உறக்கத்தின் விரைவான கண் இயக்கம் [REM] கட்டங்களில் தான் நடைபெறுகின்றன. இந்த கட்டங்களில் தான்
உங்கள் மூளையும் மிகவும் சுறுசுறுப்பாக
இயங்குகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், இந்த கனவுகள் உங்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது
உங்களை குழப்பும் அம்சமாகவோ அல்லது உங்களுக்கு வினோதமானதாகவோ இருக்கலாம். அடுத்த
நாள் அதை நினைவில் கொள்ளாவிட்டாலும் கூட, நாம் அனைவரும் கனவு காண்கிறோம் என்பது உண்மை. பொதுவாக ஒரு
நாளில் இரண்டு மணித்தியாலம் கனவு காண்கிறோம். கனவின் உண்மையான நோக்கம் எமக்கு
தெரியாது. என்றாலும் கனவு காண்பது உங்கள் உணர்ச்சிகளை செயலாக்க உதவலாம் [dreaming
may help you process your emotions]. உதாரணமாக, உங்களின் முதல் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் உங்களின்
எண்ணங்களில் ஊடுருவுகிறது. மேலும் மன அழுத்தம் அல்லது பதட்டத்தால் [stress
or anxiety] பாதிக்கப்பட்ட மக்கள்,
அதிகமாக பயமுறுத்தும் கனவுகள் காணலாம். சிலர் கனவுகளை
நிறத்திலும் சிலர் கருப்பு வெள்ளையிலும் காணலாம்.
ஒரு தலைவி,
தன் தோழியை பார்த்து: "என் தோழியே உன்னை
வாழ்த்துகிறேன், என் இரவு
உறக்கம் இனிய கனவுகளுடன் கழிந்தது, எனது பகலும் எமது அலங்காரிக்கப்பட்ட வீட்டில் நல்ல
சகுனத்துடன் கழிந்தது, எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. என் தலைவன்
வருவானா? இப்படி
ஒரு சங்க தலைவி தனது உணர்ச்சிகளை கனவில் தானே செயலாக்கி,
அது நடை பெறவேண்டும் என்ற அவாவில் தோழியிடம் கேட்பதை
அகநானூறு 141 அழகாக;
"அம்ம வாழி, தோழி !
கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய: நனவும்
புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது"
என்று பாடுகிறது.
எனவே உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது, நினைவுகள், கோட்பாடுகள் மற்றும் விருப்பங்கள் ஆகும் என ஊகிக்கலாம்.
கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தான் எமக்கு தோன்றுகின்றன.
அவை உண்மையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்! அவை
ஒன்றையும் எதிர்வு கூறவில்லை. அதைத்தான் குறுந்தொகை 30
, மிக அழகாக,
அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத்
தழுவினான்.மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன்.விழித்துப் பார்த்தபோது நான்
படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன் என்று தன் ஏக்கத்தை,
'வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து, சாய்ந்து
ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்"
என்று தோழிக்கு,
கனவு மெய்ப்பதில்லை என்று நாசுக்காக கூறுகிறாள்
"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"
நீங்கள் உறக்கத்தில்,
கனவு காணும் ஒரு சந்தர்ப்பத்தில்,
அந்த கனவின் நிகழ்வை உண்மை என்று கருதி,
அதற்கு ஒரு எதிர்தாக்கலை அல்லது பதிலை கொடுக்க நீங்கள்
முயலலாம், அப்படி
ஒரு சூழ்நிலையில், நீங்கள் எனோ உடலை நகர்த்த முடியாமல் போகலாம்? இதன்
பெயர் தான் உறக்க அல்லது துயில் முடக்கம் [துயில் வாதம் / sleep
paralysis ] ஆகும். இங்கு உங்கள்
உடல், ஒரு கண்ணுக்கு
தெரியாத எடை உங்கள் மீது இருப்பதைப் போல உணர்வுகளுடன் முடங்கிப்போகிறது. அதாவது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். இதனால்,
உங்கள் கைகளையோ கால்களையோ, உடல்களைளோ மற்றும் தலையையோ நகர்த்த முடியாமல் போகலாம்.
அப்பொழுது நீங்கள் சுவாசிக்கலாம், சிந்திக்கலாம், ஆனால், நீங்கள் பேச முடியாமல் போகலாம். அப்பொழுது உங்களால் கண்ணைத்
திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க
முடியாது. இந்த முடக்கம் ஒரு சில வினாடிகள் அல்லது சில நிமிடங்கள் மட்டுமே
நீடிக்கும். பின்னர் அது மறைந்துவிடும், அதன் பின் நீங்கள் மீண்டும் நகர முடியும். அப்பொழுது
எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று
திகைப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய் என்று ஊரார் கதை கட்டி கூறுவார்கள்.
இதையும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. இந்த துயில்
முடக்கம் ஒரு வித பிரமைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். அந்த உறக்க கனவில் நீங்கள்
உண்மையில் எதையாவது பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள் என்று நீங்கள் நம்பலாம்.
உங்களுடன் அறையில் வேறு யாரோ அல்லது ஏதோ இருப்பதாக கூட நீங்கள் நினைக்கலாம். சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும்
உங்கள் உடல் உறங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ,
பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்த கோளாறு உறக்கத்தில்
ஏற்படும் இடையூறினால் வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் உறக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும்
இதற்கும் தொடர்புகள் உண்டு. மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும்.
சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல கூட தோன்றும். இப்படியான கனவையும் பொதுவாக
கொடுங்கனவு [nightmare] என்றும் கூறுவார். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?
கொடுங்கனவு என்பது ஒருவரைத் உறக்க வட்டத்திலிருந்து
இடைநடுவே எழுப்பி பயம் போன்ற எதிர்மறை உணர்வை தோற்றுவிக்கின்ற ஒரு வகைக் கனவு
எனவும் வரைவிலக்கணப்படுத்த முடியும்.
போதுமான உறக்கமின்மையே இதயநோய்,
சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல் நலக்குறைவிற்கு காரணமாவதுடன்
உறக்கத்தில் நடக்கும், 'துயில் நடை' [sleepwalking] நிகழ்வுகளுக்கும் வகை செய்கிறது. இது பரசொம்னியா (parasomnia)
எனப்படும் உறக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில்
அடங்கும். படுக்கையில் எழுந்து இருத்தல், படுக்கை அருகே நடந்து திரிதல்,
குளியலறைக்கு நடந்து போதல், ஏதாவது பொருட்களை சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத
செயற்பாடுகளாக அல்லது உயிராபத்தை
ஏற்படுத்தக் கூடிய உறக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக
அல்லது சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில் நடை புரிவோருமாக இதன்
செயல்கள் இருக்கலாம். துயில் நடை புரிவோருக்குத் தாம் உறக்கத்தில் என்ன
செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் தம் சொந்த
அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும்
வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 வினாடிகளில்
இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம் சமீபத்தைய ஆய்வுகளில் இது கனவில்
ஏற்படுவது அல்ல என்பது நிருபணம் ஆயிற்று. கனவு உறக்கத்தின் விரைவான கண் இயக்கம் [REM]
பொழுதே
உருவாகக்கூடியது, ஆனால் துயில்நடை ஏற்படுவதோ உறக்கத்தின் விறைவற்ற கண்
இயக்கம் [non - REM] பொழுதே ஆகும்
துயில்நடையை மையமாக வைத்து பல நாடகங்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. பிரபல பிரித்தானிய
எழுத்தாளரான சேக்ஸ்பியரின் மக்பெத்தில் லேடி மக்பெத் துயில் நடை புரிவது
குறிப்பிடத்தக்கது
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 06 தொடரும்.... வாசிக்க அழுத்துக Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக :Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01
0 comments:
Post a Comment