உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02


[The belief and science of the sleep]


ஒரு மனிதனின் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்று உறக்கமாகும். மனித ஆயுட்காலத்தில் இது பொதுவாக ஒரு கால் முதல், மூன்றில் ஒரு பங்கு வகுக்கிறது. அது மட்டும் அல்ல, உணவு மற்றும் நீர் போன்ற உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது போல, சரியான நேரத்தில் போதுமான அளவு உறக்கம் கொள்வது மிக மிக இன்றியமையாதது ஆகும்.எனினும், உதாரணமாக, நெப்போலியன், புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் மார்கரெட் தாட்சர் [Napoleon, Florence Nightingale and Margaret Thatcher] போன்றோர், ஒரு நாளைக்கு நாலு மணித்தியாலமே உறங்கினார்கள் என கூறப்படுகிறது, மேலும் தாமஸ் எடிசன் [Thomas Edison], இது நேரத்தை வீணடிப்பதாகக் கூறினார். அப்படி என்றால் நாம் ஏன் உறங்குகிறோம்? ஒன்று மட்டும் உண்மை நாம் உறங்குவதால் ,பெரிதாக எந்த ஆற்றல் அல்லது சக்தி ஒன்றையும் நாம் சேமிக்கவில்லை, உதாரணமாக, எட்டு மணி நேரம் உறங்குவதன் மூலம், நாம் சேமிப்பது மிகச்சிறியதாகும், ஒரு பாண் துண்டின் ஆற்றல் அளவு மட்டுமே [about 50 kCal, the same amount of energy in a piece of toast]

பொதுவாக மனதையும் உடலையும் மூடும் [shut down] காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம், அதாவது அவைகளின் தொழிற் பாட்டை நிறுத்தி வைக்கும் காலமாக கருதுகிறோம். ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, முக்கியமான பல செயலாக்கம், மறுசீரமைப்பு, மற்றும் பலப்படுத்துதல் ஏற்படுகிறது [a lot of important processing, restoration, and strengthening occurs].சுருக்கமாக கூறினால், இது உகந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்றவற்றிற்கு [optimal health and well-being] மிகவும் தேவையான செயல் பாடு எனலாம். உறக்கத்தின் முக்கிய பாத்திரங்களில் [vital roles] ஒன்று நினைவுகளை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நமக்கு உதவுவதாகும்..உதாரணமாக, ஒவ்வொரு நாளும் எம் மூளை பெருவாரியான தகவல்களை உள்வாங்குகிறது. அவைகளை நேரடியாக பதிவு செய்யப்படுவதை விட , இந்த உண்மைகளும் அனுபவங்களும் [facts and experiences] முதலில் சீரமைப்பு செய்யப்பட்டு சேமிக்க வேண்டும் [need to be processed and stored].இவைகளின் பெரும் பகுதி, நாம் உறங்கும் பொழுதே நடைபெறுகிறது. அது மட்டும் அல்ல, எமது உடலை மீட்டெடுத்து புத்துயிர் கொடுக்கவும், தசையை வளர்க்கவும், திசுக்களை சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை ஒருங்கிணைக்கவும் [in order to restore and rejuvenate, to grow muscle, repair tissue, and synthesize hormones] எமக்கு ஒரு நீண்ட உறக்கம் தேவைபடுகிறது.

இதற்கு மாறாக, நாம் சரியாக உறக்கம் கொள்ளவில்லை என்றால் [உறக்கமின்மை], அது  கடுமையான விளைவுகளை எம்மேல ஏற்படுத்துகிறது. உதாரணமாக, மனநிறைவில்லா தன்மை, தடுமாற்றம், எரிச்சல், மற்றும் மறதி [grumpiness, grogginess, irritability and forgetfulness] ஏற்படுவதுடன், ஒன்றில் கவனம் செலுத்துதல் கடினமாகிறது அல்லது கவனத்தை தொடர்ந்து வைத்திருக்க முடியாமல் போகிறது. உறக்கமில்லா நபர் ஒருவர், விரைவாக மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரிசெய்ய முடியாமலும் மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியாமலும் போகலாம். உதாரணமாக , உலகளாவிய ரீதியில், 1989 ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் எண்ணெய் கசிவு [The Exxon Valdez oil spill]. இந்த விபத்துக்கான ஒரு காரணம் போதிய உறக்கமின்மை, அதாவது சோர்வு மற்றும் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக சரியாகக் கையாள முடியவில்லை [The third mate failed to properly maneuver the vessel, possibly due to fatigue or excessive workload.] என்பதாகும். மேலும் உறக்க இழப்பு உடல் பருமனை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன.

1950 இக்கு முன் உறக்கம் என்பது ஒரு செயலற்ற அல்லது மந்தமான செயல் [a passive activity] என்றும், இதன் போது உடலும் மூளையும் செயலற்றதாக இருப்பதாகவும் கருதினர். என்றாலும் இன்றைய ஆய்வுகள் மூளை வாழ்க்கைக்குத் தேவையான பல செயல்களில் ஈடுபடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. உங்கள் உறங்கும் நேரம் முழுவதும், உங்கள் மூளை மீண்டும் மீண்டும் இரண்டு வெவ்வேறு உறங்கு நிலைக்கூடாக சுழற்சிக்கு உள்ளாகிறது. அவை மூன்று நிலைகளை கொண்ட விரைவு அற்ற விழியியக்க நிலை மற்றும் விரைவு விழியியக்க நிலை [non-REM sleep and REM (rapid-eye movement) sleep] ஆகும். மனித உடல் உறங்கும் பொழுது, முதலில்  வருவது விழி அசைவற்ற உறக்கம் ஆகும். இதனின் முதல் நிலை நீங்கள் உறங்கிய உடனேயே நிகழ்கிறது. ஆனால் இது மிகவும் குறுகிய கால அளவை கொண்டது, பொதுவாக பத்து நிமிடம் வரை இந்த நிலை இருக்கும். இது லேசான உறக்கத்தை உள்ளடக்கியது, எனவே இதில் இருந்து நீங்கள் எளிதாக விழித்துக் கொள்ளலாம். இரண்டாவது நிலை ஒரு 30 இல் இருந்து 60 நிமிடம் வரை எடுப்பதுடன், உங்கள் தசைகள் மிகவும் தளர்வாக [relaxed] இருப்பதுடன், மெதுவான டெல்டா மூளை செயல்பாடும் ஆரம்பிக்கிறது. மூன்றாவது நிலையில், ஆழ்ந்த உறக்கம் ஒரு 20 இல் இருந்து 40 நிமிடம் வரைநடை பெறுவதுடன், விரைவான டெல்டா மூளை செயல்பாடும் [delta brain activity increases] ஆரம்பிக்கிறது. அத்துடன் அந்த நபருக்கு சில உடல் அசைவுகள் இருப்பதுடன், அந்த நபரை எழுப்புவது மிகவும் கடினம் ஆகும்.   

மனிதனின் மூளை கோடிக்கணக்கான நரம்பணுக்களால் (neurons) உருவாக்கப்பட்டது. நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று மின் சைகைகளைப் (signals) பரிமாறிக் கொள்ளும் போது 'brain waves' எனப்படும் மூளை அலைகள் உருவாகின்றன. மூளை அலைகள் பல வகைப்படும். அவைகளில் ஒன்று டெல்டா அலைகள் [delta brain waves] ஆகும். ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள விழிப்புணர்வு [பிரக்ஞை] நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக விரைவு விழியியக்க நிலை ஏற்படுகிறது. இது முன்னையதை விட ஆழமானது, இங்கு கண்கள் மற்றும் கண் இமைகள் படபடக்கின்றன, அத்துடன் சுவாசம் ஒழுங்கற்றதாக இருப்பதுடன், பெரும்பாலான கனவுகள் இந்த நிலையில் தான் ஏற்படுகின்றன. ஆனால் மூளை உங்கள் தசைகளை முடக்குகிறது, அதனால் தான் நீங்கள் கனவுகளைச் செயல்படுத்துவதில்லை, அதாவது கனவில் காணும் காட்சிக்கு பதில் அல்லது பதில் நடவடிக்கை செய்வதில்லை. இந்த முழு சுழற்சியும் ஒருவரின் உறக்கத்தில் நாலு ஐந்து தடவை நடைபெறுகிறது. ஒரு வயது வந்தோர் கூடிய நேரத்தை விரைவு அற்ற விழியியக்க நிலையிலும் [NREM], குழந்தைகள் இரண்டு நிலைகளிலும் சமமாகவும் செலவிடுகிறார்கள். கற்றல் மற்றும் நினைவகம் [learning and memory] போன்றவற்றிற்கு, விரைவு விழியியக்க நிலை தான் முக்கிய பங்கு வகுக்கிறது என முன்பு நம்பியிருந்தாலும், புதிய ஆய்வுகள் விரைவு அற்ற விழியியக்க நிலை இதற்கு முக்கியம் என்பதை சுட்டிக்காட்டுவதுடன்,உறக்கத்தின் ஓய்வுக்குகந்த கட்டமாகவும் மற்றும் மறுசீரமைப்பு கட்டமாகவும் இது [the more restful and restorative phase of sleep] தொழிற்படுவது தெரிய வந்துள்ளது.  

மேலும் ஆய்வாளர்களின் முடிவின் படி, இரண்டு முக்கிய செயல்முறைகள் ஒருவரின் உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. அவை சர்க்காடியன் தாளங்கள் [ரிதம்] மற்றும்  உறக்க உந்தல் [circadian rhythms and sleep drive] ஆகும். சர்க்காடியன் தாளங்கள் 24 மணி நேர சுழற்சியில் உடல் செயல்பாடு, மன மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் அனைத்து மாற்றங்களையும் பின்பற்றுகின்றன. மூளையில் உள்ள குறிப்பிட்ட  சில இயற்கையான காரணிகளால் கட்டுப்படுத்தப்படுவதைத் தவிர, இந்த சர்க்காடியன் தாளம் பொதுவாக ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழலில் ஒளி நிலைகளால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் சர்க்காடியன் தாளங்கள் உறக்க சுழற்சிகள், ஹார்மோன் உற்பத்தி, உடல் வெப்பநிலை மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. உதாரணமாக அனைவருக்கும் பொதுவாக ஒரு நிலையான தினசரி உள்ளது. இந்த வழக்கம் கொஞ்சம் மாறினால், அதன் தாக்கத்தை நாள் முழுவதும் உணர முடியும். உதாரணமாக, நீங்கள் வழக்கத்தை விட தாமதமாக எழுந்தால், நாள் முழுவதும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். உங்கள் செயல்பாடுகள் உங்கள் உடலின் உயிரியல் அட்டவணை அல்லது மணிநேரங்களைப் பின்பற்றாததால் இது நிகழ்கிறது. இதுவே  உங்கள் உடலின் இயற்கையான தாளம் ஆகும். உறக்கத்தை தூண்டும் செயல் பாட்டையே உறக்க உந்தல் என்கிறோம். உணவுக்காக உடல் பசிப்பது போல உங்கள் உடலும் உறக்கத்திற்கு ஏங்குகிறது. அந்த ஏக்கமே உறக்க உந்தல் ஆகும். நீங்கள் பசியாக இருக்கும்போது சாப்பிட உங்கள் உடல் உங்களை கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது, ​​அது தானாகவே உங்களை உறங்க வைக்கும். அந்த செயல் தான் உறக்க உந்தல் ஆகும். உதாரணமாக,  நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தாலும் அல்லது உங்கள் காரை செலுத்திக்கொண்டு இருந்தாலும் கூட, அது உங்களை உறக்கத்தில் ஆழ்த்திவிடும். மேலும் நீங்கள் உறக்க மின்மையாலோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சோர்வு அடைந்தால், நீங்கள் ஒரு சில நொடிகள் நுண்உறக்கத்துக்கு (microsleep) போகலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் வேளையிலே, கணப்பொழுதுகள் நீடிக்கும் மிகச் சிறிய உறக்கத்துக்கு நீங்கள் உள்ளாகலாம்.  இது ஒரு நொடி முதல் அரை நிமிடம் வரை நீடிக்கலாம். ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். ஆகவே ஒழுங்கான போதுமான உறக்கம் மிக மிக அவசியம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 03 தொடரும் ..... வாசிக்க அழுத்துக ; Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03: 
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக: Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01



No comments:

Post a Comment