ஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்


கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில்,  'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' தொடங்கி, தற்போது சூர்யாவின் 'சூரரைப் போற்று', விஜய் சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து,  அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.  ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள  இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது.
🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞 
அறிமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் நாயகியாக மிகப்பெரும் வரவேற்பு பெற்ற மேகா ஆகாஷ்,
அசோக் செல்வனின் அடுத்த காமெடி டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார். 
 🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தொடரான குயினை ஒளிபரப்பத் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞
2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார். . இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்து தனது கெட் அப்பை மாற்றியுள்ளார். இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது  சாய்பல்லவிதான். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ்  மொழி, வெள்ளித்திரை, ராவணன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடைசியாக அவர் நடித்த நேரடி தமிழ்ப்படம் காவியத்தலைவன். அந்த படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 🎥-தொகுப்பு:செ.மனுவேந்தன் 

தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுபிடிப்பு என்ன?



மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாத நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் பழமை குறித்த முந்தைய கருத்துகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாயின. தவிர, தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் அகழ்தெடுக்கப்பட்டன.

கீழடி நாகரீகத்தின் காலம் என்ன?

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என்ற முடிவுக்கு மாநிலத் தொல்லியல் துறை வந்தடைந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தொடங்குவதாக கருதப்பட்டுவந்தது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்தடைந்தது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் ஒரு பானை ஓட்டில் எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்திருக்கலாம்; ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்கக்கூடும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்தது.

இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், கீழடி அகழாய்விலும் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்தன.

மேலும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்தன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்தன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.

கீழடியின் முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்கள் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் கட்டடத் தொகுதிகள் கிடைத்திருப்பதால், நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கீழடி வெளிப்படுத்தியது.

சிந்துச் சமவெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்கள், சிந்துசமவெளிக்கும் கீழடிக்கும் இடையில் தொடர்பு இருக்கக்கூடுமென்றே கருதுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் எந்தவொரு தொல்லியல் களத்தையும்விட கீழடி, பல்வேறு செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்

உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05



[The belief and science of the sleep]
நாம் உறங்கும் பொழுது எமது மனம் உண்டாக்கும் கதைகளும் உருவங்களும் [stories and images] தான் கனவு ஆகும். அவை தெளிவானவையாகவும், அவை உங்களுக்கு மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, பயமாகவோ இருக்கக் கூடியதாகவும், அவை குழப்பமானதாகவோ அல்லது முற்றிலும் அறிவுக்கு ஏற்புடையதாகவோ கூட  தோன்றலாம். பொதுவாக, உறக்கத்தின் போது எந்த நேரத்திலும் கனவுகள் ஏற்படலாம். என்றாலும்  உங்கள் கூடுதலான தெளிவான கனவுகள் உறக்கத்தின் விரைவான கண் இயக்கம் [REM] கட்டங்களில் தான் நடைபெறுகின்றன. இந்த கட்டங்களில் தான் உங்கள் மூளையும்  மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், இந்த கனவுகள் உங்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது உங்களை குழப்பும் அம்சமாகவோ அல்லது உங்களுக்கு வினோதமானதாகவோ இருக்கலாம். அடுத்த நாள் அதை நினைவில் கொள்ளாவிட்டாலும் கூட, நாம் அனைவரும் கனவு காண்கிறோம் என்பது உண்மை. பொதுவாக ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் கனவு காண்கிறோம். கனவின் உண்மையான நோக்கம் எமக்கு தெரியாது. என்றாலும் கனவு காண்பது உங்கள் உணர்ச்சிகளை செயலாக்க உதவலாம் [dreaming may help you process your emotions]. உதாரணமாக, உங்களின் முதல் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் உங்களின் எண்ணங்களில் ஊடுருவுகிறது. மேலும் மன அழுத்தம் அல்லது பதட்டத்தால் [stress or anxiety] பாதிக்கப்பட்ட மக்கள், அதிகமாக பயமுறுத்தும் கனவுகள் காணலாம். சிலர் கனவுகளை நிறத்திலும் சிலர் கருப்பு வெள்ளையிலும் காணலாம்.

ஒரு தலைவி, தன் தோழியை பார்த்து: "என் தோழியே உன்னை வாழ்த்துகிறேன், என் இரவு உறக்கம் இனிய கனவுகளுடன் கழிந்தது, எனது பகலும் எமது அலங்காரிக்கப்பட்ட வீட்டில் நல்ல சகுனத்துடன் கழிந்தது, எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. என் தலைவன் வருவானா? இப்படி ஒரு சங்க தலைவி தனது உணர்ச்சிகளை கனவில் தானே செயலாக்கி, அது நடை பெறவேண்டும் என்ற அவாவில் தோழியிடம் கேட்பதை அகநானூறு 141 அழகாக;

"அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய: நனவும்
புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது"

என்று பாடுகிறது. எனவே உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது, நினைவுகள், கோட்பாடுகள் மற்றும் விருப்பங்கள் ஆகும் என ஊகிக்கலாம். கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தான் எமக்கு தோன்றுகின்றன. அவை உண்மையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்! அவை ஒன்றையும் எதிர்வு கூறவில்லை. அதைத்தான் குறுந்தொகை 30 , மிக அழகாக, அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான்.மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன்.விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன் என்று தன் ஏக்கத்தை,

'வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து, சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்"
என்று தோழிக்கு, கனவு மெய்ப்பதில்லை என்று நாசுக்காக கூறுகிறாள்       

"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"

நீங்கள் உறக்கத்தில், கனவு காணும் ஒரு சந்தர்ப்பத்தில், அந்த கனவின் நிகழ்வை உண்மை என்று கருதி, அதற்கு ஒரு எதிர்தாக்கலை அல்லது பதிலை கொடுக்க நீங்கள் முயலலாம், அப்படி ஒரு சூழ்நிலையில், நீங்கள் எனோ உடலை நகர்த்த முடியாமல் போகலாம்?  இதன் பெயர் தான் உறக்க அல்லது துயில் முடக்கம் [துயில் வாதம் / sleep paralysis ] ஆகும். இங்கு உங்கள் உடல், ஒரு கண்ணுக்கு தெரியாத எடை உங்கள் மீது இருப்பதைப் போல உணர்வுகளுடன் முடங்கிப்போகிறது. அதாவது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். இதனால், உங்கள் கைகளையோ கால்களையோ, உடல்களைளோ மற்றும் தலையையோ நகர்த்த முடியாமல் போகலாம். அப்பொழுது நீங்கள் சுவாசிக்கலாம், சிந்திக்கலாம், ஆனால், நீங்கள் பேச முடியாமல் போகலாம். அப்பொழுது உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. இந்த முடக்கம் ஒரு சில வினாடிகள் அல்லது சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். பின்னர் அது மறைந்துவிடும், அதன் பின் நீங்கள் மீண்டும் நகர முடியும். அப்பொழுது எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய் என்று ஊரார் கதை கட்டி கூறுவார்கள். இதையும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. இந்த துயில் முடக்கம் ஒரு வித பிரமைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். அந்த உறக்க கனவில் நீங்கள் உண்மையில் எதையாவது பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள் என்று நீங்கள் நம்பலாம். உங்களுடன் அறையில் வேறு யாரோ அல்லது ஏதோ இருப்பதாக கூட நீங்கள் நினைக்கலாம்.  சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் உறங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்த கோளாறு உறக்கத்தில் ஏற்படும் இடையூறினால் வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் உறக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல கூட தோன்றும். இப்படியான கனவையும் பொதுவாக கொடுங்கனவு [nightmare] என்றும் கூறுவார். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ? கொடுங்கனவு என்பது ஒருவரைத் உறக்க வட்டத்திலிருந்து இடைநடுவே எழுப்பி பயம் போன்ற எதிர்மறை உணர்வை தோற்றுவிக்கின்ற ஒரு வகைக் கனவு எனவும் வரைவிலக்கணப்படுத்த முடியும்.

 போதுமான உறக்கமின்மையே இதயநோய், சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல் நலக்குறைவிற்கு காரணமாவதுடன் உறக்கத்தில் நடக்கும், 'துயில் நடை' [sleepwalking] நிகழ்வுகளுக்கும் வகை செய்கிறது. இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் உறக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்கும். படுக்கையில் எழுந்து இருத்தல், படுக்கை அருகே நடந்து திரிதல், குளியலறைக்கு நடந்து போதல், ஏதாவது பொருட்களை சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக  அல்லது உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய உறக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக அல்லது சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில் நடை புரிவோருமாக இதன் செயல்கள் இருக்கலாம். துயில் நடை புரிவோருக்குத் தாம் உறக்கத்தில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் தம் சொந்த  அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும் வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 வினாடிகளில்  இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம் சமீபத்தைய ஆய்வுகளில் இது கனவில் ஏற்படுவது அல்ல என்பது நிருபணம் ஆயிற்று. கனவு உறக்கத்தின் விரைவான கண் இயக்கம் [REM] பொழுதே  உருவாகக்கூடியது, ஆனால் துயில்நடை ஏற்படுவதோ உறக்கத்தின் விறைவற்ற கண் இயக்கம் [non - REM] பொழுதே ஆகும்  துயில்நடையை மையமாக வைத்து பல நாடகங்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சேக்ஸ்பியரின் மக்பெத்தில் லேடி மக்பெத் துயில் நடை புரிவது குறிப்பிடத்தக்கது 

                              [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 06 தொடரும்....  வாசிக்க அழுத்துக Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக :Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01

மார்பக புற்றுநோய்- "தேனீக்களின் விஷம்" - கண்டுபிடிப்பு



தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.

ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவை, மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தேனீக்களின் விஷத்தில் மெலனோமா போன்ற சில புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான குணம் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம், நேச்சர் பிரசிஷன் ஆன்காலஜி என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?

300க்கும் மேற்பட்ட தேனீக்கள் மற்றும் பெரு வண்டுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

"தேனீக்களில் இருந்து எடுக்கப்பட்ட நஞ்சு, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய 25 வயது ஆய்வாளரான சியாரா டஃபி.
நஞ்சின் ஒரு செறிவு, வெறும் ஒரு மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவையாக இருந்தது. அதுவும் அவை மற்ற செல்களுக்கு பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நஞ்சு அதிக அளவில் கொடுக்கப்படும் போது, அதன் விஷத்தன்மை அதிகரித்தது.

மேலும் மெலிட்டின் என்ற பொருள், புற்று நோய் செல்கள் வளர்வதை தடுப்பதிலும், அவற்றை அழிக்கவும் உதவியதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாவே தேனீக்களின் விஷத்தில், இந்த மெலிட்டின் காணப்படும் அல்லது அதனை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.

மார்பக புற்றுநோய்களில் மிகவும் மோசமானது ட்ரிப்பிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தலாமா?

இந்த ஆய்வை "பிரமிக்கத்தக்கது" என்று விவரித்துள்ளார் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

"புற்றுநோய் செல்கள் பரவி வளர்வதை மெலிட்டின் எப்படி தடுக்கிறது என்பதை இந்த ஆய்வு காண்பிக்கிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் எவ்வாறு மனித நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது" என்று பேராசிரியர் பீட்டர் தெரிவித்தார்.

ஆனால், இதனை பெரிய அளவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்க உதவும் என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி:பி.பி.சி தமிழ்