….
நம்மவர் சிலர், புதுமணத் தம்பதியர்களையும், காதலர்களையும் வாழ்த்தும்போது பழைய
இலக்கியங்களில் உதாரண புருஷர்கள் என்று வர்ணிக்கப்படும் நாயகர்கள் / நாயகிகள்
சிலர் போல என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துவது வழக்கமாக இருக்கின்றது. இப்படிக்
கூறும்போது அவர்கள் ஒழுக்கத்தோடும், சீரும் சிறப்போடும் நீடூழி
வாழவேண்டும் என்று வாழ்த்துவதாகத்தான் எண்ணுகின்றார்கள். இவர்கள், எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டவர்களின்
வாழ்க்கை வரலாறுகளை சரியாக அறிந்திருப்பவர்களாக இருந்திருந்தால் , இவர்கள் இடுவது சாபமே ஒழிய வாழ்த்து அல்ல
என்பதைப் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.
இந்த வாழ்த்தின் மூலம் அவர்கள் தம்மை
அறியாமலேயே உண்மையில் என்ன மாதிரியான ஆசீர்வாதம்(?) செய்கின்றார்கள்
என்பதை கீழே சில எடுத்துக்காட்டுகள் மூலம்
விளக்குவோம்:
இராமன் - சீதை போல:
பெண்ணே!
மணம் முடிய,
காட்டினுள்
சீரழிந்து,
கடத்தப்பட்டு, சந்தேகப்படப்பட்டு, கர்ப்பிணியாய்
நாட்டை விட்டுக் கலைக்கப்பட்டு, காலம் எல்லாம் கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன்
வாழ்வாயாக!
கண்ணன் - ராதை போல:
பெண்ணே! சிறு வயதிலிருந்தே பலபெண்களுடன், காம, லீலா
வினோதம் செய்யும் மன்மதக் கணவனைப் பெறுவாயாக!
அமராவதி - அம்பிகாவதி போல:
மணமகன், உயரிய
குலம் இல்லாததால் மணமகள் தந்தையால் வஞ்சகமாகக் கொலை செய்யப் படுவதாக! உடனே
மணமகளும் இறப்பாய் ஆக!
கோவலன் - கண்ணகி போல:
மணம்
ஆனதும் கணவன் பிரிந்து விலை மாதருடன் செல்வானாக! திரும்பி வந்ததும் அவன் கொல்லப்பட, நீயும்
இறப்பாயாக!
நளன் - தமயந்தி போல:
மணமானதும், கணவனுக்குச்
சனி பிடித்து,
சூதில்
தோற்று, உருவம்
குலைந்து, மனைவியைப்
பிரிந்து ஒழிந்து வாழ்க!
அரிச்சந்திரன் - சந்திரமதி போல:
மணம் முடியிழந்து, சொத்திழந்து, அடிமையாகி, இழிதொழில்
செய்து, மனைவி பிள்ளைகளைப் பிரிந்து
வாழ்வாய் ஆக!
லைலா - மஜ்னு போல:
காதலில்
வெல்லாது, பெண்ணே, நீ
இன்னொருவனைக் கட்டாய மணம் செய்த பின்னரும், காதலனை
மறக்க முடியாமல் இறப்பாய் ஆக! காதலனும் இறப்பான் ஆக!
ரோமியோ - ஜூலியட் போல:
இரகசியமாகத்
திருமணம் செய்து, இரு பக்கக் குடும்பப் பகையால் ஒன்றாய்
வாழமுடியாது,
விஷம் அருந்தி நீங்கள் இருவருமே இறப்பீராக!
மும்தாஜ் - ஷாஜகான் போல:
கணவனின் 7 மனைவிகளுள்
4வது
மனைவியாக வாழ்க்கைப்பட்டு 14வது பிள்ளை பெறும்போது இறப்பாயாக! துயரம்
கொள்ளாதே, கணவனுக்கு
உன்தங்கை இருக்கிறாள் இன்னொரு மணம் செய்ய!
சலீம் - அனார்கலி போல!
பெண்ணே! நீ
தாழ் குலம் என்பதால் உன்னைக் காதலனின் தந்தை கல்லறையுள் இட்டுக் கொல்ல, அங்கு
ஆணும் சென்று இறப்பான் ஆக!
இப்பொழுது சொல்லுங்கள்! இவை எல்லாம்
வாழ்த்துக்களா? இல்லவே! "நீங்கள் நாசமாய்ப் போக"
என்று கூறுவது போல அல்லவா தோன்றுகின்றது?
அன்புடன்:செல்வத்துரை சந்திரகாசன்
"கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் "
ReplyDeleteஇந்த பாடல் வரி தான் எனக்கு ஞாபகம் வருகிறது.அதாவது கல்லால் செய்யப்பட்ட நாயை கல்லென பார்த்தால் அங்கு நாயை காணமுடியாது.அதையே நாயேன பார்த்தால் கல்லை பார்க்க முடியாது என்பதாகும்.
இங்கு எடுத்து கொண்ட விடயம் அல்லது விவாதிக்கப்படும் விடயம், திருமண தம்பதியருக்கான வாழ்த்து.அதாவது அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் இன்று போல் என்றும்-வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் அன்பு/காதல் செலுத்தி வாழ-அதற்கு உதாரணமாக -அவர்களுக்கு இலகுவாக மனதில் பதிய கூடியதாக -சரித்திர அல்லது காவிய காதலர்களை நினைவூட்டி வாழ்த்துதல் ஆகும்.
ஆகவே நாம் இங்கு பார்க்க வேண்டியது அவர்கள் இருவருக்கிடையில் உறவாடிய காதலின் சிறப்பை/வலிமையை மட்டுமே.அதைவிட்டு புற சூழலை பார்க்கும் போது அந்த காதல் தெரியாது.மேலும் புற சூழலில் பல அந்த காலத்தில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே என்பதையும் கவனிக்க.உதாரணமாக பலதார திருமணம்,பல பிள்ளை பெறுதல் போன்றவை ஆகும்.அது மட்டும் அல்ல காதலின் வலிமையை எடுத்து காட்டவே சிலவேளை சில இக்கட்டான சூழ்நிலைகள் சந்தர்ப்பங்கள் கையாளப்படுகின்றன .அதன் மூலம் அந்த காதலின் சிறப்பை இலகுவாக உணர்த்த முடியும் என்பதால். அப்படி உணர்ந்தவர்களுக்கு அதில் ,அந்த காதலில் ஒரு நம்பிக்கை வரும் என்பதால்.
எது எப்படி இருப்பினும் ,இப்ப நாம் சொல்லி வாழ்த்தும் சில காதலர்கள் /தம்பதியினர் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.[உதாரணம்: இராமன் - சீதை]அவர்களை நாம் தவிர்த்து ஏற்புடைய காதலரை/தம்பதியர்களை மட்டும் சொல்லி வாழ்த்துவோம்.
எந்த தம்பதியருக்கும் ,எம்மைப்போல் வாழ்க என்று கூற தைரியம் வந்ததில்லை.ஏனெனில் யாருமே மனிதர் திருப்தியாக வாழ்வதாக உணர்ந்ததில்லை. ஆனால் தாம் பெருவாழ்வு வாழ்வதாக வாய் அளவில் தம்பட்டம் அடிப்பார்கள்.
ReplyDelete