எம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"



"பொன்னான இதயம் இன்று நின்றதோ
உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ
பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ
நாளைய உன் பிறந்தநாள் நினைவானதோ"

"நினைவுகள் பொன்னானவை யார் சொன்னது
உண்மையாக கூட அது இருந்தாலும்
எமக்கு நினைவுகள் வேண்டவே வேண்டாம்
எமக்கு நீ மட்டுமே வேண்டும் வேண்டும்"

"ஆதரவும் உழைப்பும் உன்வாழ்வு என்றாய்
குடும்பமே உன்முதல் பெருமை என்றாய்
அனைவரையும் அணைத்து முடிந்ததைச் செய்தாய்
இப்ப நாம் அந்தநினைவில் வாழ்கிறோம்"

"உன்படுக்கைக்கு அருகில் தினம் அமர்கிறோம்
எம் இதயங்கள் நசுக்கப்பட்டு புண்ணாகிவிட்டன
எம்மால் முடிந்தவரை உனக்காக போராடினோம்
ஏமாற்றம் தான் இறுதியில் எம்மை தழுவியது"

"நீங்கள் பிரிவதை எம்கண்ணீருடன் பார்த்தோம்
நீங்கள் மறைந்துபோவதை ஏக்கத்துடன் பார்த்தோம்
எங்கள் இதயங்கள் உடைந்து போயிருந்தாலும்
இனிஉன்னை வேதனைவாட்டாது என்று அமைதியடைந்தோம்"

"உன் பாசங்களை உதடுகளால் பேசமுடியாது
உன் கருணையை இதயங்களால் காட்டமுடியாது
எம் தவிப்பை கட்டாயம்நீ அறிவாய்
நாம் பலராயினும் நீஇல்லாதது தனிமையே"

"உன் அழகியஉடல் மட்டுமே எரிந்துசாம்பலாகிற்று
உன் எண்ணங்களும் ஆசைகளும் எரியவில்லை
எம்இதயத்திற்குள் நீ என்றும் இருக்கிறாய்
எண்ணங்களையும் ஆசைகளையும் நீ இயக்குகிறாய்"

"பலஆண்டுகளாக பகிர்ந்த பிறந்தநாள் கொண்டாட்டம்
நினைவுகளாகி கண்ணீரும் கவலையுமாய் நிற்கிறது
நாளைஉங்கள் பிறந்தநாள் இனிமையாக கொண்டாடுவோம்
அழகழகாய் உங்கள் எழில்காண கனவுகாண்கிறோம்"

"ஒவ்வொரு நிகழ்விலும் எம்முடன் வாழ்ந்தும்
எம்மூச்சு காற்றுக்குள் என்றும்நிற்கும் உன்னுயிரே
புத்தாடை  அணிந்து எம்அருகே மீண்டும்வா
எம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment