அம்மான்னா சும்மா இல்லேடா..! அவ இல்லேன்னா யாருமில்லேடா..! என்ற பாடல் திரையிசை ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ராமராஜனுக்காக இளையராஜா மெட்டமைத்த இந்தப் பாடலை “அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா தமிழ் சினிமா இல்லேடா” என்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருப்பு வெள்ளைக் காலத்திலிருந்தே வண்ணமயமானதாகவும், கண்ணீர் வழிந்தோடும் சோகச் சித்திரமாகவும் இருந்து வந்திருக்கிறது. அதிர்ச்சியூட்டும் அம்மா காதாபாத்திரம் ஒன்றைக் காட்டி, ரசிகனின் மரபார்ந்த சினிமா அம்மா பார்வையைக் கட்டுடைக்க பாலா என்ற புதிய தலைமுறை இயக்குனர் வந்து நந்தா என்ற படத்தை இயக்க வேண்டியிருந்தது.
மகன் எஞ்னியரிங் படிக்க இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற காரணத்துக்காகச் சத்துணவுக் கூடத்தில் தன்னையே தீவைத்து மாய்த்துக்கொள்ளும் ஜென்டில்மேன் அம்மா என்றாலும் சரிஉ அப்பனைக் கொன்று சிறை மீண்ட பிறகும் அடங்காத மகனை ஒரு கைப்பிடிச் சோற்றில் விஷம் வைத்துக்கொள்ளும் நந்தா அம்மா என்றாலும் சரிஉ அம்மாக்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள். வெள்ளித்திரையில் மிக ஆபூர்வமாக முதன்மைப் பாத்திரமாக முக்கியத்துவம் பெரும் அம்மாக்களைத் தொலைகாட்சித் தொடர்கள் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதும், அம்மாக்களைக் கொடுமைக்கார மாமியார்களாகச் சித்தரிப்பதும் தனிக் கதை.
இன்று தமிழ்த் திரையில் நிழலாடும் அம்மாவின் படிமத்துக்கும் தமிழ் சினிமாவின் மரபார்ந்த அம்மாவின் படிமத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. இந்த மாற்றம், தமிழ்ச் சமூகத்தின் மாற்றத்தின் வெளிப்பாடு என்று சொல்வதை விட, தமிழ்ச் சினிமாவைத் தீர்மானிக்கும் சக்திகளின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் புரிந்துகொள்ளத் தமிழ் சினிமாவின் அம்மா வரலாற்றை நாம் சுருக்கமாகப் பார்க்க வேண்டும்.
தாய் தெய்வ வழிபாட்டையே சமயமாகக் கொண்டாடும் தமிழ்ப் பண்பாட்டு மரபில், ஒரு ஆண்மகன் எத்தனை பெரிய வீரன் என்றாலும், ஆயிரம் யானைகளைக் கொன்ற அசகாய சூரன் என்றாலும் ‘அம்மா’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அங்குசம் கண்டு அடங்கிய யானையைப் போல அமைதியாகிவிடுவான் என்பதை உணர்ச்சிகரமாகச் சித்தரித்த முதல் தமிழ்ப் படம் என்று, கலைஞரின் கதை, வசனத்தில் உருவான மனோகராவைச் சொல்லிவிடலாம்.
அந்தப் படத்தில் வேலைக்காரியாக வந்து அரசனை மயக்கி, இளவரசன்
மனோகரனைச் சிறையில் அடைத்துவிடுகிறாள் வில்லி வசந்தசேனை. முதலில் அரசனின் இழிவை எதிர்க்கும் தனது மகன் மாவீரன் மனோகரனை, கள்ளக் காதலியிடம் சிக்கியிருந்தாலும், கணவனை எதிர்க்கக் கூடாதே என்று நினைத்துப் “பொறுமையாக இரு” என்ற இரண்டு வார்த்தைகளால் அவனைக் கட்டிப்போடுகிறாள் தாய். பிறகு கணவனையும் சிறையில் தள்ளிய பிறகு பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆணை பிறப்பிக்கிறாள் அம்மா!
“மகனே, பொறுத்தது போதும், பொங்கியெழு!” என்று அவள் ஆணையிட்டபிறகு மனோகரனின் வீரத்துக்கு முன்னால் அதர்மம் தூள் தூளாகிச் சிதறிப் போகிறது. மகன் மனோகரனாக நடிகர் திலகமும் அன்னையாகக் கண்ணாம்பாவும் கலக்கிய மனோகரா திரைப்படம் திராவிட இயக்க வளர்ச்சிக்கான பிம்பங்களை உருவாக்கிய படங்களின் வரிசையில் முக்கியமானது.
இந்தப் படத்துக்குப் பிறகு தெய்வீகத் தன்மை கொண்ட வலிமையான அம்மா காதாபாத்திரங்கள் சிவாஜிக்கு கைநழுவிப் போய்விட (வசந்த மாளிகையில் சிவாஜி குடிக்கு அடிமையானதற்கு நவீன வாழ்க்கை முறை கொண்ட மேல்தட்டு அம்மாவே காரணம் என்ற சித்தரிப்பு), எம்.ஜிஆரும், அவருக்குப் பிறகு ரஜினியும், ரஜினிக்குப் பிறகு விஜய்யும், இது பெண் ரசிகைகளின் இதயம் கவரும் உளவியல் சூத்திரம் என்பதை உணர்ந்து வசமாகப் பிடித்துக்கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். குறிப்பாக அம்மா கதாபாத்திரத்திரங்களை நம்பியே தனது கதாபாத்திரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கதாநாயகன் கைகூப்பித் தொழும் தெய்வமாகவே தனக்கான சினிமா அம்மாவை வடிவமைத்துவந்தார். பாத்திரமாக இருந்தபோதும் தனது பல படங்களுக்கு, தாய்க்குத் தலை வணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே! தாயின் மடியில்உ! தாயைக் காத்த தனயன் என்று தாஅம்மா செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் வலுவாகக் கட்டமைக்கப்பட எம்.ஜிஆரின் படங்கள் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கின்றன. கதாநாயகன் முதன்மைப் யைப் படத்தின் தலைப்பிலேயே முதன்மைப்படுத்தும் போக்கு இருந்தது. எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு அடுத்து தமிழ்ச் சினிமாவின் இரண்டாவது சூப்பர் ஸ்டாராக எம்.ஜி.ஆர் உருவெடுத்ததில் அவரது செல்லுல்லாய்ட் அம்மாக்களுக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த ரஜினியும் தன்
படங்களிலும் அம்மா செண்டிமெண்டைக் கச்சிதமான விகிதத்தில் கலந்து கொடுத்தார். ரஜினியின் தொடக்க காலப் படங்களான தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தீ போன்றவை அம்மா செண்டிமெண்டைப் போர்த்திக்கொண்டிருக்கும் ஆக்ஷன் படங்களாக வெளிவந்ததன. மிஸ்டர் பாரத்தில் தாயைத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழாவெட்டி ஆக்கிய அப்பாவுக்கு எதிராகச் சவால் விட்டு ஜெயிக்கும் நாயகனாகச் சீறி எழுந்த ரஜினி, மன்னனில் பக்கவாதத்தால் கை கால் விளங்காமல் போன அம்மாவைப் பராமரிக்கும் நாயகனாக உருக்கினார். திருமணத்துக்கு முந்திய கர்ப்பம் காரணமாகப் பிறந்ததும் கைவிடப்பட்டு, பின்னாளில் தன் அம்மா யார் என்பதைக் கண்டுகொண்டு அம்மாவைத் தூரத்தில் இருந்து பார்த்து உருகும் மகனையும், அந்த மகன் கிடைத்துவிட மாட்டானா எனத் தேடிக்கோண்டே இருக்கும் தாயையும் ரஜினியின் அம்மா செண்டிமெண்ட் இமேஜை மனதில் வைத்தே தளபதி படத்தில் சோகச் சித்திரமாக வரைந்து காட்டினார் மணிரத்னம். கூடவே தாய்மை மீதான தமிழ் சினிமாவின் உன்னதத்தை உடைக்கும் விதமாக, திருமணத்துக்கு முன்பு விரும்பியோ விரும்பாமலோ ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்வதும், அதன் பலனாகக் கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெற்றுக்கொள்வதும், அதை மறைக்க முயல்வதுமான கதாபாத்திரத்தைக் கதாநாயகனின் அம்மாவாகப் படைத்துக் காட்டிவிட்டார்.
எம்.ஜி.ஆர், ரஜினி, இன்று விஜய் என்று பெருந்திரளான ரசிகர்களைக் கொண்ட மாஸ் கதாநாயகர்களின் படங்களில் அம்மா செண்டிமெண்ட் கட்டுடைக்கப்படாமல், அம்மா என்பவள் மரியாதைக்குரியவளாக, தாய்மையின் இலக்கணமாகச் சித்தரிக்கப்படுவதில் தேர்ந்த வெற்றிச் சூத்திரத்துக்கான உளவியல் ஒளிந்திருக்கிறது. அம்மாவுக்காக உருகும், அவள் பேச்சைக் கேட்டு நடக்கும் கதாநாயகர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்கும் தாய்மார்கள், தனது பிள்ளைகளிடம் “அம்மாக்காக என்னெவெல்லாம் செய்றான் பார்த்தியா” என்று ஆற்றுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. ரஜினி, விஜய் படங்களில் அம்மாவுக்குத் தரப்படும் உன்னதமும் முக்கியத்துவமும், இந்த ஹீரோ நல்ல மனிதர் என்னும் பிம்பத்தை பெண்களின் மனதில் படிப்படியாக உருவாக்கிவிடுகிறது.
தமிழ் வெகுஜன சினிமாக் களத்தில் ரஜினிக்கு இணையாக ஆனால் அவரது
பாணிக்கு எதிர்நிலையில் இயங்கிவரும் கமல், தனது பல படங்களில் அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் படைத்துக் காட்டியிருக்கிறார். இந்த வகையில் அம்மா கதாபாத்திரத்தைப் பாலியல் தொழிலாளியாகச் சித்தரித்த அவரது குணா படம் முக்கியமான முன்னுதாரணம். ஓய்வுபெற்ற பாலியல் தொழிலாளியின் மகனாகவே கமல் இதில் தன்னைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். வேசியின் மகன் என்ற கொச்சையான சொல்லாடலையே சகித்துக்கொள்ள முடியாத யதார்த்தத்தில், தன்னை ஒரு பாலியல் விடுதியில் வளர்ந்த ஒருவனாகவும், அதே நேரம் பாலியல் தொழிலாளி என்ற போதும் பாசத்துக்குக் குறை வைக்காத தாயாக அம்மாவையும் காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
அம்மாவைக் கொண்டாடும் ஹீரோக்களின் வரிசையில் ராஜ்கிரணும், ராமராஜனும் ரசிகர்களை லிட்டர் கணக்கில் அழ வைத்திருக்கிறார்கள்.
இவர்களது வெற்றிக்கு அம்மா செண்டிமெண்ட்டைத் தனது இசையால் உயிரூட்டித் தந்தவர் இளையராஜா. இன்றும்கூட அம்மாவை முன்னிலைப்படும் கதையென்றால், அது இளைய தலைமுறை மிஷ்கின் என்றாலும் அவரது படத்தின் தாய்மைக்கு இசை மூலம் உயிரூட்டித் தர இளையராஜாதான் தேவைப்படுகிறார். அரண்மனைக் கிளி படத்தில் தாயின் எரிந்து அடங்கிய சிதையில் விழுந்து புரண்டு, அம்மாவின் அஸ்தியை ராஜ்கிரண் பூசிக்கொள்ளும் காட்சி, அம்மாவைத் தாய் தெய்வமாகக் கருதும் தமிழ் மரபின் தொடர்ச்சியாகவே இருந்தது. ராஜ்கிரண் தொடர்ந்து
அம்மாவை பிடித்துக் கொண்டு விடமறுத்தார் என்றாலும், அவர் ஹீரோவாக நடிக்காமல் குணசித்திர கதாபாத்திரத்துக்கு மாறிய பிறகு, பாசமான அம்மாக்களுக்கான இடம் விஜய் படங்களுக்கு இடம் மாறியது. விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில், ஊரிலிருந்து தொடர்ந்து மகனுக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கும் அம்மாவைக் கடைசிவரை காட்டாமலேயே அம்மா உளவியலை நிகழ்த்திக் காட்டியிருப்பார் இயக்குநர் எழில்.
இன்று யதார்த்த அலையால் நிரம்பி வழியும் தமிழ்ப் படங்களில் அம்மாக்களின் புனிதம், தெய்வீகம் நிரம்பிய சித்தரிப்பை உதறிவிட்டு, ரத்தமும், சதையுமான நிஜ அம்மாக்களைப் படைத்துக் காட்டும் போக்கு அதிகரித்துவிட்டது. கிராமம், நகரம் எனக் களம் எதுவானாலும் அம்மாக்களை வாழ்க்கைச் சூழலில் சிக்கிக்கொண்ட சாதாரண மனுஷிகளாக காட்டப்படுவது, மரபார்ந்த அம்மா செண்டிமெண்டை இனி யாரும் கையில் எடுக்க முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது. யதார்த்த அம்மாக்களைச் சித்தரிக்கத் தொடங்கிய போக்கு 90களில் மெல்லத் தொடங்கியது என்று சொல்லலாம். ஆர். மாதேஷ் இயக்கிய சாக்லேட் படத்தில் , தனது மகள் மீது உள்ள அதீத உரிமை கோரல் காரணமாக, அவள் தன் காதலனுக்குத் தரும் உரிமையைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் ஒரு தாயைச் சித்தரித்திருந்தார். இந்தப் பொறாமையால் மகளுக்கும் காதலனுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்யும் உளவியல் கோளாறு கொண்ட ஒரு கதாபாத்திரமாக சுஹாசினியின்கேரக்டர் சித்தரிக்கப்பட்டது. இதேபோல ஒரு தோற்றம் கொண்ட அம்மா கதாபாத்திரமாகவே சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் படத்தில் ரேகாவின் கதாபாத்திரமும் அமைந்தது.
விஜய் மரபார்ந்த அம்மா செண்டிமெண்டையே இறுகப்
பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது போட்டியாளரான அஜித் படங்களில் அம்மா காதாபாத்திரங்கள் கட்டுடைக்கப்பட்ட நிலையிலேயே பல படங்களில் சித்தரிக்கப்படுவதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக ரெட் படத்தில், மூன்று வயதுச் சிறுவனாக இருக்கும் அஜித்தை அவர் அம்மா அநாதையாக ஊரின் தேரடியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவது போலவும், அந்தத் தேரின் நிழலிலேயே அஜித் வளர்வது போலவும் காட்டியிருப்பார்கள். அஜித் என்ன காரணத்துக்காக அம்மாவால் கைவிடப்பட்டார் என்பதைச் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். பிள்ளையைப் பெற்றுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விட்ட அம்மா என்பதாகவே ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள். அம்மா பற்றிய இந்தச் சித்தரிப்பு, அந்தப் படத்தில் நாயகன் மீது பரிதாபம் ஏற்படக் காரணமாக அமைந்தது. அடுத்து அமர்க்களம் படத்தில் அஜித்தின் அம்மா அப்பா இடையிலான கடுமையான ஈகோ மோதல் காரணமாக அப்பா வேறொரு பெண்ணையும் அம்மா வேறொரு ஆணையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அஜீத் வளர்ந்து ரவுடியாகப் பெற்றோர்களின் இந்தப் பிரிவே காரணமாக இருக்கிறது. அஜித்தின் மற்றொரு படமான வில்லனில், தங்களுக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் மனவளம் குன்றியவனாக இருப்பதை அவமானமாக கருதும் பெற்றோர்கள் அவனை வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள்.. ஆனால் உடன்பிறந்த சகோதரன் அவனை ஏற்றுக்கொண்டு அவனை முழு மனிதனாக்க முயற்சித்து வெற்றி பெறுகிறான். இப்படி மெல்ல மெல்லக் கட்டுடைக்கப்பட்ட அம்மாக்கள் இன்று அவர்களுக்கே உரிய பலம், பலவீனங்களோடு சித்தரிக்கப்படும் யதர்த்த அம்மாக்களாகக் காட்டப்படுவது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
இன்று தமிழ் சினிமாவின் அதிகாரபூர்வமான யதார்த்த அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் ஆரம்பித்து சரண்யா யதார்த்த அம்மாக்களின் பிரதிநிதியாக ஒவ்வொரு அம்மா கதாபாத்திரத்திலும் தனது தனித்துவமான நடிப்பால் மிளிர்ந்துவிடுவதோடு, ஒவ்வொன்றுமே வேவ்வேறு அம்மா கதாபாத்திரங்கள் என்பதைச் சாதித்துக் காட்டிவிடுகிறார். அமீர் இயக்கிய ராம் படத்தில் தனது மகன் உளவியல் பிரச்சினை கொண்டவன் என்று தெரிந்தும் அவனைப் பேணிப் பாதுகாக்கும் தாயாகவும், பக்கத்து வீட்டுப் பையன் போதைக்கு அடிமையாவதைக் கண்டுபிடித்ததும் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அவனைக் கண்டிக்கப் போய் கொலையாவதுமான அம்மா பாத்திரம் சித்தரிக்கப்பட்டது. இதுவும் மரபார்ந்த அம்மா பிம்பத்தினின்று விலகிய சித்தரிப்புத்தான்.
எம்டன் மகன் படத்தில் கல்லூரியில் படிக்கும் மகனைத் தனது தொழிலிலும் ஈடுபடுத்தி அவனை வாட்டும் கணவனிடமிருந்து மகனைத் தேற்றிக்கொண்டே இருக்கும் அம்மா கதாபாத்திரம் காட்டப்படுகிறது. ராணுவ அதிகாரியைப் போன்ற கணவனின் கண்களில் படாமல் இவர் செய்யும் லூட்டிகளும் “டேய் எம்டன் வந்துடாண்டா..” என்று கணவனையே ஒருமையில் குறிப்பிட்டு மகனுக்கும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்வதுமாகக் கணவனைச் சமாளித்து மகனைப் பாதுகாக்கும் அம்மாவாகக் கலக்கினார். இந்த அம்மாவும் பதி பக்தி போன்ற மரபான அம்மா பிம்பத்திலிருந்து விலகியவள்தான்.
விகரம் கே. குமார் இயக்கத்தில் வெளியான யாவரும் நலம் படத்தில் மாதவனின் அம்மாவாகச் சரண்யா வருகிறார். மெகா சீரியல் மீது பைத்தியமாக இருக்கும் அம்மா இவர். ஒரு காட்சியில் மாதவன் சுவற்றில் ஆணி அடிக்கும்போது கையில் அடித்துக்கொண்டு ரத்தம் கொட்ட, அவசரமாக அந்தப் பக்கமாக ஓடிவரும் அம்மா, இவ்வளவுதானா என்று கேட்டுக் கொண்டே டிவியை நோக்கி ஓடுவார். அம்மாவின் இடத்தில் மாதவனின் மனைவியே பதறியடித்து ஓடி வருவார்.
களவாணி படத்தில் தன் மகன் என்ன செய்தாலும் அவனை நியாயப்படுத்தும் கண்மூடித்தனமான பாசம் கொண்ட அம்மாவாக வந்தார் சரண்யா. குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூணாகவும் மகன் விஷயத்தில் மட்டும் பலவீனம் கொண்ட பாசப் பிழம்பாகவும் விளங்கும் அம்மாவை இதில் யதார்த்தமாகச் சித்தரிந்திருந்தார் இயக்குநர் சற்குணம்.
சமீபத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் வீரமும் பாசமும் மிக்க மண் மணம் மாறாத இளம் விதவைத் தாயாக வாழ்ந்து காட்டியிருந்தார் சரண்யா. மகன் மீது பாசம் இருந்தாலும் தன் பேச்சை மீறி, குடும்பக் கட்டுப்பாடுகளை மீறி அவன் சென்றால் அவனையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டும் அம்மா தமிழுக்குப் புதியது. அதே அம்மா, உன் மகனின் உயிர்தான் எனக்கு முக்கியம், அவனைக் கல்யாணம் செய்துகொள்வது அல்ல என்று அவன் காதலி சொல்லும்போது அவளது ஆழமான அன்புக்கு மரியாதை கொடுத்து அவளைத் தன் மருமகளாக ஏற்கிறாள். அம்மா என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற ஆகிவந்த பிம்பங்களை இந்தக் கதாபாத்திரம் அனாயாசமாக உடைத்தது. தமிழ் சினிமாவின் மரபார்ந்த அம்மாவுக்குள் இருந்த யதார்த்த அம்மாவைச் சித்தரித்த அற்புதமான கட்டுடைப்பு என்று இதைச் சொல்லலாம்.
உழைப்பதற்கு அஞ்சாமல் புழுதி நிலத்தை ஏர் பிடித்து ஒர் ஆண்மகன் போல உழவு செய்வதில் தொடங்கி, மகன் மீதிருக்கும் நம்பிக்கையால் அவனைக் கேட்காமலேயே திருமணம் பேசி முடிப்பது, மகனைக் காதலிப்பவள் அவனை உண்மையாகக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் உடனே அவளை ஏற்றுக்கொள்வது, மகனைத் தாக்க வரும் ஆட்களைத் தனியொரு ஆளாக எதிர்த்து நின்று அவர்களோடு சண்டை போட்டுக் கத்திக் குத்து வாங்கிக்கொண்டு, குத்துப்பட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல் இருக்க ஒரு துண்டை இறுக்கிக் கட்டிக்கொண்டு தானே மருத்துமனையில் போய்ச் சேர்ந்துகொள்வது, தன்னைத் தாக்கியவர்களைப் பழிவாங்கக் கிளம்பும் மகனை தட்டிக்கொடுத்து அனுப்பாமல், பழிவாங்கும் உணர்ச்சியை நிறுத்தச் சொல்லிவிட்டு இறந்துபோவது என்று மகனின் வாழ்வை பற்றிய நம்பிக்கையுடனும், பெருங்கவலையுடனும், வீரத்துடன் போராடி மகனுக்காக உயிரையும் கொடுக்கும் யதார்த்த தாயாகக் காட்டப்படிருக்கிறார்.
இனி வழக்கமான அம்மா செண்டிமெண்டுகளைக் காட்சிப்படுத்த மாஸ் ஹீரோக்களே பயப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்
-நன்றி ஜெ யந்தன்
No comments:
Post a Comment