கேள்வி:-
ஒரு நாளைக்கு 6
லீற்றர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால்
, அதிகமாக
தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படும் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?
ம.
கங்கா கொழும்பு
பதில்:-
ஒரு நாளுக்கு 6
லீற்றர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்ற கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள் எனத்
தெரியவில்லை. அது சரியான கூற்று என்று சொல்ல முடியாது.
ஒருவர்
ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று பொதுப்படையாக சொல்வது சிரமமானது.
ஏனெனில் இது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவரது உடல் நிலை எவ்வாறானது. அவர் செய்யும்
வேலை என்ன?
அவர்
குளிர்மையான பிரதேசத்தில் வாழ்கிறாரா அல்லது மிகுந்த வெக்கையும் வேர்வையும்
சேர்ந்த சூழலில் வேலை செய்கிறாரா, அவரது மலம் நீராக வெளியேறுகிறதா காய்ந்து
வெளியேறுகிறதா போன்ற பல விடயங்களில் தங்கியுள்ளது.
எனவே
தினசரி அருந்த வேண்டிய நீரானது ஆளுக்கு ஆள் வேறுபடும்.
பொதுவாக
தினசரி 6
முதல் 8
கிளாஸ் நீர் அருந்த வேண்டும் என்ற கருத்தே நிலவுகிறது. இது கிட்டத்தட்ட 2
லீட்டர் அளவாக இருக்கும். தினசரி நீர் தேiவாயனது ஆண், பெண், குழந்தை, சிறுவர்கள்
என பலவிதத்தில் மாறுபடும். நீர் என்ற சொல்லும்போது அது வெறும் நீராக இருக்கலாம்.
அல்லது நீர் சேர்ந்த பானமாகவும் இருக்கலாம். பழச் சாறுகள், இளநீர்.
தேநீர், கோப்பி, மென்பானங்கள்
போன்ற ஏதாவது பானமாக இருக்கலாம். ஆனாலும் சில வகை பானங்களை இட்டு அவதானமாக இருக்க
வேண்டும்.
மதுபானத்திலும்
நிறைய நீர் இருக்கிறது. அதற்கான மதுபானம் அருந்துங்கள் என்று சிபார்சு செய்ய
முடியாது. அது போதையும் ஈரல் முதலான உறுப்புகளுக்கான பாதிப்புகளையும் ஏற்படும்
என்பது நாம் அறிந்ததே.
கோப்பி
தேநீர் போன்ற பானங்களிலும் நீர் இருந்தாலும் அவை அதிகளவு சிறுநீரை வெளியேற்றுவதால்
உடலில் சேரும் நீரின் அளவு குறைவாகவே இருக்கும். ஆயினும் அவற்றை அளவோடு
அருந்துவதில் தவறில்லை. மென்பானங்களிலும், போத்தலில் அடைக்கப்பட்டு
விற்பனையாகும் பழச் சாறுகளிலும் சீனியின் அளவு அதிகம் என்பதால் அவை நல்ல தேர்வு
அல்ல.
இவற்றைத்
தவிர நாம் உண்ணும் பழவகைகளிலிருந்தும் காய்கறிகளிலிருந்தும் கணிசமான அளவு நீர்
உடலுக்கு கிடைக்கறது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
பால்
நல்லதொரு நீராகாரமாகும். ஏனெனில் அது மெதுவாகவே உடலால் உறிஞ்சப்படுகிறது. அத்துடன்
மெதுவாகவே சிறுநீராக வெளியேறுகிறது. அத்தோடு அதிலுள்ள சோடியம் பொட்டாசியம் போன்ற
கனிமங்கள் வியர்வையால் வெளியேறும் கனிமங்களை ஈடு செய்கின்றன. அதே போல இளநீரிலும்
உடன தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும் கனிமங்களும் விற்றமின்களும் அடங்கியுள்ளன.
ஒருவர்
தனது உடற் தேவைக்கு சற்று அதிகமாக நீர் அருந்தினால் பாரிய பிரச்சனை எதுவும்
ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக அது குறுகிய நேரத்திற்குள்
அதீதமாக நீர் அருந்தினால் சிறுநீரகத்தால் அதை முகாமைத்துவப்படுத்துவது
முடியாததாகிவிடும்.
நாம்
குடிக்கின்ற நீரின் பெரும்பகுதி சிறுநீராக வெளியேறுவது நாம் அறிந்ததே. பொதுவாக
சிறுநீரகத்தால் 500 மிலி அதாவது அரை லீட்டர் சிறுநீரை மட்டுமே
வெளியேற்ற முடியும். அதீதமாக அருந்தினால் அந்த நீர் உடலில் மேலதிகமாகச்
சேர்ந்திருக்கும். இதனால் எமது குருதியில் உள்ள சோடியம் கனிமத்தின் செறிவு
திடீரெனக் குறைந்துவிடும். இந்த
சேடியம் தான் எமது உடற் கலங்களில் உள்ள நீரின் அளவை நெறிப்படுத்துகிறது.
அதீத
நீர் அருந்தும் போது சோடியம் செறிவு குறைவதால் குருதியில் உள்ள நீரானது கலங்களின்
உள்ளே கூடியளவாக உறிஞ்சப்படுகிறது. முளையின் கலங்களுக்குள் அவ்வாறு அதிக நீர்
புகுந்தால் அது ஆபத்தாகிவிடும். வலிப்பு ஏற்படலாம். அவர் மயக்கமடையவும் கூடும்.
ஆயினும்
இது அடிக்கடி ஏற்படும் ஆபத்து அல்ல. இருந்தபோதும் மிக அதிகமாக லீட்டர் லீட்டராக
நீரைக் குறுகிய நேரத்திற்குள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கமால்
நீர் அருந்துவதைத் தவிர்த்தால் இத்தகைய ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை.
இறுதியாக
சொல்வதானால் 'அதிகமாக
தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினை ஏற்படுமா' என்று
கேட்டிருந்தீர்கள். அதீதமாக அதாவது அளவுக்கு மீறி அருந்தினால் சிறுநீரகத்தால்
அதைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். சிறுநீரகம் பாதிப்படைவதற்கு முன்னர்
வலிப்பு மயக்கம் போன்ற உயிராபத்தான நிலைகள் ஏற்பட்டுவிடும்.
ஆனால்
இது ஒரு சில கிளாஸ் தண்ணீரை அதிகமாக குடிப்பதால் அல்ல லீட்டர் லீட்டராக குறுகிய
நேரத்தில் குடிப்பதால் மட்டுமே நிகழும் என்பதை ஏற்கனவே கூறினோம். இது போட்டிக்கு
நீர் குடிப்பது போன்ற அசாதாரண சந்தர்பங்களில் மட்டுமே நிகழும் என்பதால் சற்று
அதிகமாக குடிப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விடயம் அல்ல.
டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0 comments:
Post a Comment