மத மாற்றமும் மன மாற்றமும்


கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் இலங்கை, இந்தியாவின் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து மதமாற்றம் செய்கின்றன என்று சமூக வலைத் தளங்களில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு மதமாற்றம் செய்யும் சுயாதீன திருச்சபைகளுக்கு எதிராக விமர்சனங்கள் பலவாறு இந்துவாதிகளால் முன்வைக்கப்படுகின்றன.


மத மாற்று வாதிகள் மக்களின் எவ்விதமான பலவீனங்களை ,தங்களுக்குச் சாதகமாக உபயோகித்து மக்களை அணுகி மூளைச் சலவை செய்கிறார்கள் என உணர்ந்து  இந்துமதவாதிகள் அவற்றினைத்  தீர்ப்பார்களானால் இப்படியான மத மாற்றங்களுக்கு சூழ்நிலையே எழுந்திருக்காது, எழாது, என்பது எமது கருத்து.

 மத மாற்றங்களுக்கு அனுகூலமாக இருப்பது வறுமை , அறியாமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பன என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

1.வறுமை :-தமது மக்களின் வறுமையையும் அறியாமையையும் இல்லாமல் செய்வதற்கு எத்தனை இந்து அறக்கட்டளைகள் நம் மத்தியில்  உண்டு? எத்தனை இந்து ஆலயங்கள் நம் மத்தியில்  உண்டு?

2.அறியாமை :-தமது மக்களை ஆன்மிகத்துறையில் வளர்த்தெடுக்க எந்த ஆலயம் முயற்சி எடுத்தது? மதமாற்ற வாதிகளின் முன் நிமிர்ந்து கதைக்கும் ,ஆன்மிக அறிவு வல்லமையினை எந்த ஆலயம் தம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது?

3.சாதி ஏற்றத்தாழ்வுகள்:-எல்லோரும் ஒருகுலம் என செயற்படும்  இந்து ஆலயங்கள் எங்கு உண்டு? சாதி காரணமாக வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்க எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு?

 குறிப்பிட மக்கள் ஆலயத்தினுள் பிரவேசிக்கக் கூடாது, தேர்வடத்தில் முட்டக்கூடாது என்ற அறிவித்தல்களினால்  ஏற்பட்ட முரண்பாடுகளினால் ஆலயங்கள் திருவிழாவின்றி மூடப்பட்டும் காணப்படுவது , இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் பல லட்ஷம் மக்கள் கொல்லப் பட்ட பின்னரும், இந்து ஆலயங்களின்  எண்ணங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலைக்குரிய செய்திகளாகவே மக்களால் கணிக்கப்படுகின்றன.

2009 யுத்த முடிவுக்குப் பின் இலங்கையின் தமிழ் பகுதிகளில் பழைய கோயில்கள் பெருப்பிக்கப்படுகின்றன. இடிந்த கோவில்கள் மீளக் கட்டி எழுப்பப்படுகின்றன. கோபுரங்கள் வான் வரை வளர்ந்து நிற்கின்றன. சிறிய பெரிய கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு புது வண்ணம் பூசப்பட்டு ஜொலித்துக் கொண்டு தெரிகின்றன. யுத்தத்தின் முன் புளிய மரத்தின் கீழ் இருந்த வைரவ சூலம் மட்டும் இருந்த வணக்கத்துக்குரிய பகுதிகூட இன்று ஆலயமாக வளர்ந்து நிற்கிறது. இவ்வாறு கோவில்களைக் கட்டுவதற்கு செலவழிக்கப்படும் பணம்  முழுவதும் தமிழர் புலம் பெயர் தேசங்களிலிருந்தே வருகிறது.

அதேசமயம் இலங்கையின்  உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களாக விதவைகள், அனாதைப் பிள்ளைகள் ஊனமுற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் நெருக்கடியுள் வாழ்ந்திருந்தும்  அவர்களுக்கு எந்த விதமான உதவிகளும், சில தனிப்பட்ட அமைப்புகளைத் தவிர  இந்து அமைப்புகளாலோ அல்லது இந்துஆலய சபைகளினாலோ கிடைப்பதில்லை என்ற கருத்துக்களும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

எனவே , வறுமை , அறியாமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பன நீக்கி மக்கள் சேவை மகேசன் சேவை என மன மாற்றம் ஏற்படும் வரை ,விமர்சனத்துக்குரியவர்களாக நாம் இருந்துகொண்டு மதமாற்ற முயற்சிகளை எதிர்ப்பதில் பயனில்லை.
⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪செ .மனுவேந்தன்



0 comments:

Post a Comment