செயற்கை இனிப்புகள் ஆபத்தற்றவையா?


அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையானது acesulfame potassium, aspartame, saccharin, sucralose, neotame, and advantame ஆகிய செயற்கை இனிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் பல இலங்கையிலும் கிடைக்கின்றன.

நீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும். அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.


இவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.

எனவே பல நோயாளர்கள் தாங்களாகவே அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் அத்தகைய செயற்கை இனிப்புகளை உணவு மற்றும் நீராகாரம் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா?

இந்த செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா என்பதுதான் பலரின் மனத்தை அரிக்கும் சந்தேகமாகும்.?

சில காலத்திற்கு முன் வந்த சில ஆய்வுகள் சிகப்பு சமிக்கை காட்டின.

கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு இது ஆபத்தாக முடியலாம் என்றது ஒரு ஆய்வு. காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் எனவும் அஞ்சப்பட்டது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது அதிகளவில் செயற்கை இனிப்புகளை உண்பதால் சுண்டெலிகளில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன் நீரிழிவு தோன்றுவதற்கான சாத்தியமும் அதிகம் என்றது.

ஆயினும் இந்த ஆய்வுகளை மனிதர்களில் இதுவரை செய்து நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சந்தேகங்களைத் தெளிவிப்பதற்காக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையானது (European Food Safety Authority) அத்தகைய இனிப்புகளின் பாதுகாப்புத்தன்மை பற்றிய ஒரு மீள் ஆய்வை ஆரம்பித்தது.

அதன் பலனாக சிகப்பு ஒளி மங்கத் தொடங்கியது.

இனிப்பான முடிவுகள்

மேற்படி மீள்ஆய்வு இன்னமும் தொடர்கிறது என்றபோதும் அஸ்பார்டேம் (aspartame)  என்ற செயற்கை இனிப்புப் பற்றிய அறிக்கை 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 40 மிகி அளவைத் தாண்டாத அஸ்பார்டேம் இனிப்பை உட்கொள்வதால் ஆபத்துகள் ஏதும் இல்லை என அது முடிவு கூறியுள்ளது.

பிரான்சில் செய்யப்பட்ட மற்றொரு (Agency for Food, Environmental and Occupational Health & Safety)  ஆய்வும் பச்சை விளக்குக் காட்டின.

செயற்கை இனிப்புகளை உட்கொள்வதால், இனிப்புச் சுவைக்கு பழக்கப்பட்டு அதனால் மேலும் மேலும் இனிப்பபுப் பண்டங்களை தேடி உண்ணும் பழக்கம் ஏற்படுவதும் இல்லை என்கிறது. அதாவது இனிப்பு சுவைக்கு அடிமையாவது (addiction) இல்லையாம். செயற்கை இனிப்புகளை குழந்தைப் பருவத்தில் உண்பவர்கள் வளரும்போதும் அதையே நாடுவார்கள் என்ற பரவலான கருத்திற்கு ஆதாரம் இல்லை என்று மேலும் சொல்கிறது.

எடையைக் குறைப்பதற்கு கலோரி வலுக் குறைந்த இத்தகைய செயற்கை இனிப்புகள் உதவும் எனப் பலரும் நம்புகிறார்கள். அதே நேரம் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்கிறன சில ஆய்வுகள்.

எது உண்மையா?

பிரான்சில் செய்யப்பட்ட அந்த ஆய்வானது எடை அதிகரிப்பதற்கோ அல்லது எடை குறைப்பிற்கோ செயற்கை இனிப்புகள் காரணம் அல்ல என்கின்றது.

இந்தச் செயற்கை இனிப்புகள் குருதியில் குளுக்கோசின் அளவை அதிகரித்து அதன் காரணமாக உடலில் இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாக நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை செயற்கை இனிப்புகள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். ஆனால் அது தவறு என்கிறது பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வு. இந்தச் செயற்கை இனிப்புகள் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என்பது தெளிவாகிறது.

கர்ப்பணிகள் இவற்றை பாவிப்பதால் கருப்பையில் வளரும் சிசு குறை மாதத்தில் பிறப்பதற்கு அல்லது வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை.

செயற்கை இனிப்புகள் நிணநீர் தொகுதியில் lymphoma எனப்படும் ஒரு வகைப் புற்று நோயை ஏற்படுத்தலாம் என முன்னர் ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வானது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்கிறது.

இருந்தபோதும் இது பற்றி மேலும் ஆய்வு செய்வது நல்லது என்கிறது அதே பிரான்ஸ் அறிக்கை.

-முருகானந்தன் கிளினிக்

0 comments:

Post a Comment