உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01



[The belief and science of the sleep] 

இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படும் சொற்களான 'தூங்குதல்', 'தூக்கம்',  'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சமஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். உதாரணமாக திருவள்ளுவர், தனது குறளில், ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்று உறக்கம் என்ற சொல்லை கையாளுகிறார். மேலும் அவர் இன்னும் ஒரு குறளில் ‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்’ என்பதன் மூலம் தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளில் கையாளுகிறார். என்றாலும் இன்று திரைப்படத்தில் ‘தூங்காதே தம்பி, தூங்காதே!’ என்றும், ‘தூங்காத கண்ணொன்று உண்டு’ என்ற வரிகளை கண்டாலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ என்ற கர்ணன் படப் பாடல்வரி ஒரு ஆறுதலை கொடுக்கிறது. உறக்கம், துயில், துஞ்சுதல் எனும் சொற்களின் வரிசை பிழைத்து எப்படி  தூக்கம் வந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. பால காண்டத்தில், கவியரசர் கம்பன் அழகாக 'உறங்கும்' சொல்லை பயன் படுத்தி உள்ளதுடன், பலவகையான உறங்கல் செய்திகளையும் வரிசைப் படுத்துகிறான்.

"நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை"

அதாவது, சங்குகள் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருக்கும்; எருமைகள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருக்கும்; வண்டுகள் மலர் மாலைகளிலே உறங்கிக்கொண்டிருக்கும்;  திருமகள் தாமரை மலரிலே உறங்குவாள்; ஆமைகள் சேற்றிலே உறங்கும்; முத்துச் சிப்பிகள் நீர்த் துறைகளிலே உறங்கும்; அன்னங்கள் நெற்போரிலே உறங்கிக் கிடக்கும்; மயில்கள் சோலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும் என்ற ஒரு நீண்ட உறங்கல் செய்தியை சொல்கிறான். மேலும் அவன் யுத்த காண்டத்தில்,

"உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற தின்று காண், எழுந்திராய், எழுந்திராய்!
கறங்கு போன்ற விற்பிடித்த கால தேவர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!’"

என்கிறான். அதாவது,உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய மாய வாழ்க்கை இன்றோடு வீழ்ச்சி அடையத் தொடங்குகிறது; இதனை எழுந்து நீ பார்ப்பாயாக; காற்றாடி போல வில் பிடித்த எம தூதர்களின் கையில் நிரந்தரமாகக் கிடந்து இனி உறங்குவாயாக என்கிறார். எனவே, பண்டைய தமிழில், தூங்குதல், தூக்கம் போன்ற சொற்கள் உறக்கம் என்ற பொருளில் காணப்படவில்லை. ஆகவே நாமும் இயன்றவரை அப்படியான சொற்களை தவிர்ப்போம்.

'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் பகுதியாக நிராகரிக்கும் அல்லது தள்ளி போடப்படும் உறக்கத்தின் முக்கியத்தை எல்லோர் காதிலும் உரக்கச்சொல்ல இது ஒரு அரிய வாய்ப்பாக எமக்கு அமைகிறது. உதாரணமாக, உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், மனிதனுக்கு உறக்கம் இன்றியமையாததாக உள்ளது. குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல்] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என "நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்" என்கிறது. மேலும் ‘பசிக்கு ருசி வேண்டாம், உறக்கத்திற்கு பாய் வேண்டாம்’ அல்லது 'பசி ருசி அறியாது உறக்கம் சுகமறியாது' போன்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது உறங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது.

உதாரணமாக, பிரகாசமான இரவு வானம் இல்லாததும் வேட்டையாடும் விலங்குகளின் அச்சுறுத்தலும் எமது புதிய கற்கால மூதாதையர்களை [Neolithic ancestors]  சாயங்காலம் ஓரிரு மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்லவைத்தது. அவர்கள், முன்பு எமது பழையகற்கால மூதாதையர்கள் [Paleolithic predecessors during the Stone Age] வைக்கோலின் குவியல்கள் [The heaps of straw] மேல் படுத்ததை, மேலும் விரிவு படுத்தி, தமது படுக்கையை  உயர்த்தப்பட்ட மேற்பரப்புகளால் மாற்றி அமைத்தார்கள். இதன் மூலம் அவர்கள் தமது படுக்கை இடத்தை ஒரு குடியிருக்கத்தக்க அல்லது வாழக்கூடிய பகுதியாக [bedtime space more habitable] மாற்றினார்கள். 
இன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய உறங்கும் உறைவிடங்களை கண்டு பிடித்துள்ளனர், ஆனால் அவை இன்றைய படுக்கைகளை விட அதிகமாக வட்டமாகவும் கூடுகள் போலவும் இருப்பதை கண்டனர் [were circular and more like nests than beds]. இந்த தற்காலிக படுக்கைகளின் வட்ட வடிவம் எமக்கு எடுத்து காட்டுவது, கரு [fetal - a posture characteristic of a fetus, with the back curved forwards and the limbs folded in front of the body ] ஒன்றிற்குள் எப்படி குழந்தை ஒன்று கை, கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கிறதோ, அப்படித்தான் இவர்களும் படுத்துள்ளார்கள் என்பதேயாகும். பின்பு காலப் போக்கில், உதாரணமாக மத்தியகாலத்தில் [middle ages], சுகாதாரம் ஒரு முக்கிய பிரச்சனையாக வந்து, அடைத்த மெத்தைகளுடன் கூடிய படுக்கை சட்டங்கள் பொதுவானவையாக வழக்கத்திற்கு வந்தன [Bedframes with stuffed mattresses became common]. மேலும் சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரி அந்த காலத்திலேயே உறங்கும் முன்பு, வசதியாக படுக்க, இரவி உடை [nightie] அணியும் மரபு இருந்ததை, மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் என்பதன் மூலம் எடுத்து காட்டுகிறது.

அன்றில் இருந்து இன்று வரை நாம் தினமும் உறங்குகிறோம், விடுமுறை நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் உறங்கி மகிழ்கிறோம். உறங்குவது என்பது ஆனந்தமான விடயம் தான். ஆனால் நாம் ஏன் உறங்குகிறோம் என்று தெரியுமா? உறக்கம் நமக்கு ஏன் அவசியம் என்று தெரியுமா? உறக்கம் பற்றிய நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் விளக்கங்கள் கட்டாயம் நாம் அறிய வேண்டும். அப்போதுதான் நாம் உறக்கத்தை ஒரு சீராக்கவும், உறக்கமின்மையை தவிர்க்கவும் முடியும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 02 தொடரும்

No comments:

Post a Comment