கந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..




கந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு  ஆறாத ஏக்கம், கவலை. 17 வயசில் விட்ட ஒரு சின்ன தவறினால் தான் கனவு கண்டபடி கல்வியைத் தொடர முடியாமல் போய் விட்டதே என்று அவர் வேதனைப்படாத நொடிகளே இல்லை.

'அக்கௌன்ட் கிளார்க்' ஆக 40 வருடங்கள் வேலை செய்து, இளைப்பாறி 40 வருடங்கள் ஆன பின்னரும் இந்தக் கவலை தொடர் கதையாகவே  இருந்து, அவரை வேதனைப் படுத்திக் கொண்டிருக்கிறது.
 
சிறு வயதில் இருந்தே அவர் ஒரு சிறந்த டொக்டர் ஆகிவிடவேண்டும் என்ற கனவு, ஒரு சின்னக் கவனக் குறைவினால், பல்கலைக் கழகம் கிடைக்காது, தனது படிப்பை 12ஆம் வகுப்புடனேயே நிறுத்தி, அவர் ஆசை நிறைவு பெறாமல் போனதையிட்டு அவர் வாய்விட்டு அழுதும் இருக்கிறார்.

* * * * *

கந்தசாமி ஒரு நல்ல சிறுவன். அவன் விடியுமுன் எழுந்து ....... (3ஆம் வகுப்பு பால போதினி - 1960).

சிறு வயதில் இருந்தே ஆரம்ப பாடசாலையில் எப்போதும் வகுப்பில் முதல் தர மாணவன்தான். ஆறாம் வகுப்பு முடிந்ததும் இவனின் சாத்திரத்தை ஐயனார் சாத்தியாரிடம் காட்டியபோது, அவர் மிகவும் தெளிவாகச் சொன்னார், "இவன் நல்லாய் படிச்சு பெரிய டாக்குத்தர் ஆவன்" என்று.  அத்தோடு அவர்களின் குடும்ப ஜோசியர் 'வெள்ளைக் குடைச் சாத்திரியார்' அடித்துக் கூறினார் "இவன் நல்லாய்ப் படிப்பான்; நினைச்சபடி பெரிய டாக்குத்தர் ஆவான்" என்று.

" எதற்கும் செவ்வாய் கிரகத்தை ஏழு நாட்கள் தீப வழிபாடு செய்தபின்னர், ஒரு நல்ல பாடசாலைக்கு படிக்க அனுப்புங்கோ" அவரின் அறிவுரை.

அவர் சொன்னபடியே, பூசைகள் எல்லாம் முறைப்படி செய்து கந்தசாமியை யாழ்ப்பாணத்தின் இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரச்சனையே இல்லை; அந்தப் பெரிய கல்லூரியிலும் படிப்பில் முதல் மூன்று பேர்களுக்குள் கட்டாயம் வந்துவிடுவான். படிப்பில் புலிதான்.

ஒவ்வொரு வருடமும்  வெள்ளைக் குடைச் சாத்திரியாரிடம் போய், குறிப்பைக் காட்டி, செய்ய வேண்டிய பூசைகள், வழிபாடுகள் என்று செய்து கொள்ளுவார்கள். ஒவ்வொரு முறையும் "உவன் டாக்குத்தர் தான்" என்று அவர் உறுதிப்படுத்துவது ஊர் முழுவதும் பரவிவிட்டது.

பெற்றோர்களுக்கும், ஊர் மக்களுக்கும் 'இவன் டாக்குத்தர்தான், இவன் டாக்குத்தர்தான்'  என்று கூறிக்கூறி, 8 ஆம் வகுப்பிலிருந்து இன்று வரை கந்தசாமி டொக்டர் என்ற பட்டம், பெயருடன் இணைந்துவிட்டது. கந்தசாமி என்று அழைப்பதைவிட 'டொக்டர்' என்றே ஊரில் அதிகமாக அழைப்பர்.

வெள்ளைக் குடைச் சாத்திரியாரின் அறிவுரையினால்,  வியாபாரத்தில் முதலீடு செய்து பல மடங்கு வருமானம் பெற்ற காலியில் இருக்கும்  சிங்கள செல்வந்தர் ஒருவர், அவருக்கு காலியில் ஓர் ஆச்சிரமம்  அமைத்துக் கொடுத்து, அங்கு வந்து தொழில் செய்யுமாறு விட்ட அழைப்பை ஏற்று. சாத்திரியார் அங்கு செல்ல ஆயத்தம் ஆகினார்.

9 ஆம் வகுப்பு படிக்கும்போதே, 10 ஆம் வகுப்பு விஞ்ஞான பாடங்களைத் தெரிவு செய்ய, சாத்திரியார் போகும் முன் அவரிடம்  பலன்களை கேட்டு அறிந்து தேவையான வழிபாடுகளைச்  செய்தனர். அத்தோடு அவரும் காலிக்குப்  போய் அங்கேயே தங்கிவிட்டார்.

கந்தசாமி வழக்கம்போல் படிப்பில் முன்னிலையில் எப்பொழுதும் திறமையான சித்தியுடன் பாடங்களை பாஸ் பண்ணுவதால், பாடசாலையிலும் அவனுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை எல்லோரும் கொடுத்தார்கள்.

"கந்தசாமி டாக்குத்தர் ஆகாமல் வேறு ஆர் வரமுடியும்?" இதுதான் எங்கும் பேச்சு. இது அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்து விட்டது.

இறுதிப் பரீடசை வந்தது, சிறிது கவனக்குறைவுடன் சில கேள்விகளுக்கு பதில் எழுதியதால் தேவையான புள்ளிகள் கிடைக்கவில்லை.

இந்த வேளை தந்தையார் இறக்க, அவர் செய்துவந்த நில அளவு மற்றும் நிலப் புரோக்கர் வேலை வருமானமும் இல்லாது போய்விட்டது. ஒரே பிள்ளை; தாயைக் கவனிக்கும் பொறுப்பு அவன் தலைமேல் விழுந்துவிட்டது.

திரும்பவும் பரீடசை எடுக்குமாறு ஆசிரியர்கள் எல்லோரும் கூறியபடியால் அடுத்த வருடமும் இன்னும் ஊன்றிப் படித்து பரீடசை எழுதியும், கஷ்ட காலம், முடிவு இன்னும் மோசமாக இருந்தது.

வீட்டில் பணக் கஷடம்.  இனி, எப்போது  படிப்பது; எப்படிப் படிப்பது, நம்பிக்கை அறவே போய்விட்டது. உடனடியாகப் பணம் தேவை, .பேசாமல் ஏதாவது வேலை தேடும் பணியில் இறங்கினான்..

அதிஷ்டவசமாக, விண்ணப்பித்த முதல் வேலை, அக்கௌண்ட் கிளார்க் ஆக, ஊரிலேயே யாழ்ப்பாணம்  பெரிய ஆஸ்பத்திரியில் கிடைத்தது. தடுமாற்றம் எதுவுமின்றி கிடைத்த வேலையை  ஏற்றுத்  தன் தாயை நன்று பராமரித்தான்.

ஐந்து வருடங்கள் கழிந்தன.

வேலையில் சில பயிற்சி பெரும் பொருட்டு கொழும்பு சென்றவிடத்து, அவனின் அறை நண்பன்,

"அப்பிடியே சரியாய்ச் சொல்லுறார் அப்பா" என்றான்.

"ஏன்,  என்ன? யார் என்ன சொல்லுறார்?"

"அந்தக் காலிச்  சாத்திரியார்; சொன்னது அப்பிடியே சரி, நான் நேற்று போய் சந்திச்சனான்"

கந்தசாமிக்குப் பளிச்சென்று தட்டியது, தன்னுடைய சாத்திரியாரைப் பற்றித்தான் அவன் கதைக்கிறான்  என்று.

"என்ன? வெள்ளைக் குடைச் சாத்திரியாரோ?"

"ஓம், ஓம் அவரைத் தெரியுமோ உனக்கு?"

"ஓம், அவர்தான் எங்கடை சாத்திரியார்; நானும் ஒருக்கால் அவரைப் பாக்கவேணும்"

சனிக்கிழமையே கந்தசாமி காலிக்குப்  புறப்பட்டான்.

"அப்பாடா, எவ்வளவு கூட்டம்!" வியப்பில் ஆழ்ந்தான்.

இவன் முறை வந்ததும் உள்ளே செல்ல, வெள்ளைக் குடைச். சாத்திரியார் உடனே அவனைக் கண்டு,

"வா கந்தசாமி, எப்படி வேலை எல்லாம் போகுது? அப்பா செத்த பிறகு அம்மா எப்பிடி இப்ப இருக்கிறா?"

"நல்லாய் இருக்கிறோம்; இதை நீங்கள் ஒருக்காய் பார்க்க வேணும்" என்று சாத்திர புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.

சாத்திரியார் அதை வாங்கி ஆழ்ந்த கணக்குப் போடலானார். எல்லாவற்றையும் மனத்துள் எடுத்ததும் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு,
 
"அது சரி நீ எங்கை இப்ப வேலை செய்கிறாய்?"

"யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலை ..."

"சரி, நான் சொன்னேன்தானே நீ எப்படியும் டொக்டர் ஆவாய் என்று"

"இல்லை ஐயா நான் ஆஸ்பத்திரியிலை சாதாரண .."

"கந்தசாமி, கவலைப் படாதை.  ஜாதகம் உனக்கு ஓஹோ என்று இருக்கு. எல்லோரும் தொடக்கத்தில் சாதாரண டொக்டர் ஆகத்தான் தொடங்குவது. ஐந்து வருசத்திலை நீ ஒரு தலைமை வைத்தியராய் வருவாய், பயப்பிடாதை"
.
" ஐயையோ, இல்லை ஐயா நான் ஆஸ்பத்திரியிலை டொக்டர் இல்லை. வேறு வேலை; எக்கௌண்ட் கிளார்க் ஆகத்தான் வேலை செய்கிறேன்"

" , நம்ப முடியேல்லையே, நீ அப்போ டொக்டருக்குப் படிக்கேல்லையோ?"

"இல்லை ஐயா, போதிய மார்க்ஸ் எடுக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. அதுதான் வேறை வேலையிலை சேரவேண்டியதாய் போய் விட்டது" கந்தசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"என்ன, அப்படி இருக்க முடியாதே! தா உந்த ஜாதகத்தை, என்ன நடந்தது என்று பார்ப்போம்" குறிப்பை திரும்பவும் வாங்கி ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்த கிரக நிலைகளை எல்லாம் ஆராய்ந்தார்.

"மேஷ ராசியில் சூரியன்  பலம் பெற்றிருக்கிறார்; செவ்வாய் பார்வையும் நல்லாய்த்தான் இருக்குது"

மேலும் ஊன்றிப் பார்த்துவிட்டு,

"பாபக் கிரகம் கேதுவால் சூரியன்  பார்க்கப்படுகிறார், அது சரி, கேதுவுக்கு கிரக சாந்தி பரிகார பூசை செய்து, விநாயகருக்குக் அபிஷேகமும் செய்தனீங்கள்தானே?"

கந்தசாமி,
"இல்லையே, செவ்வாய்க்குத்தான் நீங்கள் சொல்லிச் செய்தனாங்கள். கேதுவுக்குச் செய்யவில்லை"

"இல்லை, இல்லை செவ்வாய் டொக்டர் பாவிக்கும் கத்திரிக்கோல் போன்ற ஆயுதங்களுக்கு அதிபதி. மருத்துவப் படிப்புக்கு சூரியன்தான் அதிபதி. அவர் உச்சம் பெற்றுத்தான் இருந்திருக்கிறார். கேதுவின் கெட்ட பார்வையினைச் சாந்தப்படுத்தி இருக்கவேணும். விநாயகரும் அதற்கு உதவி செய்திருப்பார். ஏன் செய்யாமல் விட்டனீங்கள்?"

"எங்களுக்கு தெரியாது"

"தெரியாட்டில் என்னைக் கேட்டிருக்கலாம்தானே? நான் ஓரிடமும் ஓடவில்லை இங்குதான் இருந்தேன். ஒரு கடிதம் எழுதி போட்டிருக்கலாம்தானே?"

".........", கந்தசாமியால் ஒன்றும் பேச முடியவில்லை.

"அப்பா, அம்மா அவர்களுக்கும் அந்த அறிவு இருக்கவில்லையா? வீணாக  ஒரு சின்ன கவனக் குறைவால் பெரிய ஒரு வாழ்க்கையையே தொலைச்சுப்போட்டு இருக்கிறீயளே!"

" என்ன கஷ்ட காலமோ, நேரமோ எங்களுக்கு அது தெரியாமல் போய்விட்டதே, எனி  நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியேல்லை"  ஓ வென்று கதறி  அழுதான்.

"சரி, சரி,  நடந்தது நடந்துவிட்டது;  இனி ஒன்று செய்யேலாது"

அவரே தொடர்ந்தார், "பார்த்தியா? செவ்வாயும், சூரியனும் தங்கள் வேலையை ஓரளவுக்குச் செய்ய முனைப்பட்டிருக்கினம். உன்னை டொக்டர் வேலை செய்யும் ஆஸ்பத்திரியிலேயே சேர்த்து விட்டிருக்கினம். ஆனால், பரிகார பூசை செய்யாதபடியால் சூரியன் வலுவிழந்து போய் இருந்திருக்கிறார். ஒரு கொஞ்சத்திலை  நழுவி விட்டது. சீ ..., கோட்டை விட்டுவிட்டு வந்து நிற்கிறியே கந்தசாமி. சுத்த முட்டாள்களாக  இருந்திருக்கிறியளே!"

கந்தசாமியின் இதயத்தில் பெரியதோர் சம்மட்டியால் அறைந்தது போல இருக்கவே, உரத்த சத்தத்தில் அழுதபடியே வெளியே வந்தவன்,

**************
இன்றுவரை, அந்த கவனக்குறைவால் தான் டொக்டர் ஆகாமல் போனதைக் குறித்து தினமும் அழுது கொண்டுதான்  இருக்கிறார்.

பாவம் கந்தசாமி, அடுத்த பிறப்பில் என்றாலும் அவரது ஆசை நிறைவேற வேண்டும்.

செல்வதுரை , சந்திரகாசன் 

0 comments:

Post a Comment