மறைந்த கலைஞர் ஏ. எல். ராகவன் ஒரு பார்வை





ஏ. எல். இராகவன் (A. L. Ragavan; 1933 - ஜூன்19, 2020), தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம். என். இராஜம் ஆவார். இவர்களுக்கு  பிரம்மா என்ற மகனும், நளினா என்ற மகளும் உண்டு.

ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காக பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு எங்கிருந்தாலும் வாழ்க..., சீட்டுக்கட்டு ராஜா..., என்ன வேகம் நில்லு பாமா..., அங்கமுத்து தங்கமுத்து... உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ஏ. எல். இராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து, 'நாடோடி நாடோடி...' என்ற திரைப்பாடலுக்கு நடனம் ஆடினார். 

1965ல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்களில் கலை நிகழ்ச்சி நடத்தும் குழுவிலும் ராகவன் இடம்பெற்றிருந்தார். முகாம்களில் இரவுதான் நிகழ்ச்சிகள் நடக்கும். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் முன்பாக அன்றைக்கு அறிமுக நடிகையான ஜெயலலிதா, `வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் சுசீலா பாடிய `கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல’ பாடலுக்கு நடனம் ஆடினார். ஏ.எல்.ராகவன் `பகைவனுக்கு அருள்வாய்’ எனும் பாரதியாரின் பாடலைப் பாடினார். குடியரசுத் தலைவர் உட்பட எல்லோரையும் உணர்ச்சிவசப்படவைத்து கண்களில் கண்ணீரை வரவைத்தது.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரின் மறைவையொட்டி ஜூபிடர் பிக்சர்ஸின் பூமிபழதாசா எழுதிய `உலக மகான் காந்தி’ எனும் பாடலை ஏ.எல்.ராகவன் பாடினார். அன்றிலிருந்து இந்தப் பாடலை தன் வாழ்நாள் முழுவதும் மேடைதோறும் பாடி காந்திக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஏ.எல்.ராகவன்.

நகைச்சுவை நடிகர் நாகேஷின் பாடல் காட்சிகளுக்கு குரல்கொடுத்து சிறப்பித்த பெருமையும் ஏ.எல்.ராகவனுக்கு உண்டு.

பிற்காலத்தில் அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இராகவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இவருக்கு கொரோனா வைரசு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் 2020 ஜூன்  19 இறந்தார்.

📂தொகுப்பு:செ.மனுவேந்தன்.


No comments:

Post a Comment