வளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]

                       
                             

 






                                                                                                                                                                                   -04.07.2020-

அன்புள்ள தங்கைச்சிக்கு
 நாம் நலம்.அதுபோல் உனது சுகமும் ஆகுக! உனது கடிதம் கிடைத்தது.யாவையும் அறிந்தோம்.
தங்கைச்சி, உனது பக்கத்து வீட்டில் , ஏற்பட்ட சிறு சச்சரவு ,வாக்குவாதமாக மாறி வெட்டுக்கொத்து ,ஒரு உயிரையும் பலிகொண்டதாக மிகவும் கவலையுடன் எழுதியிருந்தாய், இப்படிப் பல புதினங்கள் தாயகத்திலிருந்து நாம் கேள்விப்படுகின்ற போது , கிட்டதட்ட 40 வருடத்திற்கு முன்னோக்கிச் சிந்திக்கிறேன்.

அப்பொழுது  பல உறவுகளின் குடிகள் அயலவீடுகளாக நெருக்கமாக இருந்ததோடு , குடிகள் மட்டுமல்ல , உறவுகளும் நெருக்கமாகவே பழகிவந்தோம். எமக்குள் சில பிரச்சனைகள் வந்தாலும் அது சொற் பிரயோகங்களுடன் முடிந்து சில காலம் கோவித்துக்கொண்டு இருந்தாலும் எப்போது எம் வீட்டில் அல்லது அவர் வீட்டில் கொண்டாட்டம் வரும் எனக் காத்திருந்து ஒன்றாகிவிடுவோம்.

ஆனால் இன்று பெரும்பாலான வீட்டில் இடம்பெறும் கொண்டாட்டங்கள் ஏற்கனவே கோவித்தவர்கள் இரத்த உறவாக இருந்தாலும் ,அவர்களுக்கு அழைப்பு விடாமலேயே நிறைவேறுகின்றன. இது அவர்களுக்கிடையில் மேலும் விரிசலையே உருவாக்குகின்றன. இதற்குக் காரணம் வெளிநாட்டு பணத்தின் நடமாட்டம் எனக் கூறுவோரும் உண்டு.

தங்கைச்சி, மேலைநாடுகளில் ஒருவனுக்கு ஒருவன்  தவறினை செய்துவிட்டால், இருவரும் நண்பர்கள் ஆவதற்கு ஒரு 'sorry' [மன்னிக்கவும்] என்ற வார்த்தை போதும் . நாம் செய்யும் தவறினை ஒத்துக்கொள்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உலகில் தவறு செய்யாதவன் எவனும் இல்லை. தவறு செய்தவன் அதனை ஒத்துக்கொள்வதால் மேலும் பிரச்சனைகளுக்கு இடமில்லாது போய்விடும்.

ஆனால் எமது சமுதாயத்தில் நான் யார், நீ யார் என்ற செருக்கு தலைக்குமேல் ஏறிக்கொண்டதாலேயே எங்கு பார்த்தாலும் குழப்பமும்,பிரிவுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

அவன் யார் எனக்கு சொல்ல? அவன் தலைமையில் நான் இருப்பதா? அவன் கூறி நான் செய்வதா? அவன் சொல்வதை நான் ஆமோதிப்பதா?. நான் இருக்க அவனுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு வருவதா? இப்படியான பல சிந்தனைகள் எம்மவர் மத்தியில் வளர்வதனை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவே இன்று வீட்டிலிருந்து, ஊர் அமைப்புகள் ,ஆலய நிர்வாகங்கள், அரசியல் வரைக்கும் பிணக்குகளுக்கும் ,பிரிவுகளுக்கும் மூர்க்கத்தனமாக   நின்று ஆட்சி புரிகிறது.

தங்கைச்சி, இப்படியான தரங்கெட்ட சிந்தனைகள் எழுத்துலகையும்  விட்டுவைக்கவில்லை. இவர் ஏற்கனவே தெரிந்தவராயின் -இவர்  எழுதுவதை நான் படித்ததாக காட்டிக்கொள்ளக்கூடாது. இவருடைய கருத்துக்களை   தான்  ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் இவருடன் ஒத்துக்கொள்ளக்கூடாது. , பாராட்டக்கூடாது. இவருக்கு எழுத்துலகில் மதிப்பு ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது. இப்படியான உணர்வலைகள் இன்று மனிதனை நோயாகப் பீடிக்க ஆரம்பித்துள்ளன.

தங்கச்சி, தமிழ் கவிப்படைத்த பாரதி அன்று அவரை அலட்சியம் செய்த மானிடரைப்பற்றி கவலையடையவில்லை. ''சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது'' என தன்னுடைய கவிக்கு தானே கருத்துக்கள் கூறினார். அக்கூற்றின்  உண்மை வடிவில் இன்றும்  தமிழுலகில் பாரதி உயர்ந்து  விளங்குகிறார்.


தங்கச்சி , ஒரு இழவு வீட்டில் கூட ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடாது எழுந்த வாய்த்தர்க்கம் , ஒருவர் மேல் ஒருவர் கழுத்தில் கத்தி வைக்கும் அளவுக்கு நமது சமுதாயம் சீர்கெட்டு போய்விட்டதை கவலையுடன் உனக்கு நினைவூட்டுகிறேன். அந்தக்காலத்தில் தமிழக திரைப்படங்கள் சண்டைக் காட்சியுடன் வந்ததுதான்.எமது முன்னோர்கள் எம் ஜி ஆர் மாதிரி வாள் பிடித்தா வாதம் பண்ணினார்கள்இன்று ஏன் இந்த அகோரமான சினிமாத்தனமான சிந்தனைகள், வன்முறைகள் எம்மத்தியில் என்பது புரியவில்லை.

தங்கச்சி, ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. ஆளும் வர்க்கம் நம்மை  அழிக்கவில்லை. நாம் தான் எம்மை அழித்துக்கொண்டு வருகிறோம்.

வேறு புதினங்கள் இல்லை. மீண்டும் உனது பதில் கடிதத்தினை எதிர்பார்த்தவண்ணமிருப்பேன். வணக்கம்.


இப்படிக்கு
அன்பின் அண்ணன்
செ.மனுவேந்தன்.   

       

2 comments:

  1. t.kanesalingamSunday, July 05, 2020

    நடப்பு நிகழ்வுகளை நியாயத்துடன் எடுத்துவந்து, காரணங்களையும் புரியவைத்து ,நற் கருத்துக்களுடன் உங்கள் கருத்துப்பதிவு கடிதமாக மலர்வது வரவேற்கத் தக்கது. நல்லது ,தொடரட்டும்.

    ReplyDelete
  2. தேவி, மனோகரன்Monday, July 06, 2020

    [தெளிவாக புரிகிறது. ஆளும் வர்க்கம் நம்மை அழிக்கவில்லை. நாம் தான் எம்மை அழித்துக்கொண்டு வருகிறோம்.-நிச்சயமாக,எங்களுக்கு ஒற்றுமை அறவே கிடையாது. எங்கும்,எதிலும் சச்சரவு . காரணமில்லாத வெறுப்புணர்வு,ஈகோ என பலப்பிரச்சனைகள்.திருந்த முடியாத இனமாகி விட்ட்னர் தமிழர்

    ReplyDelete