தாயகத்தில் பெருகும் கொடுமை!


அன்று சனிக்கிழமை ஆகையால் வானம் விடிவது உணர்ந்தும், படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி புரண்டு படுத்துக்கொண்டேன்.

இன்றும் என் அறையின் பக்கத்து அறையில் அதிகாலையில் வழக்கம்போல் கைபேசி அலறிக்கொண்டது. கட்டிலில் படுத்திருந்த பாட்டி முணுமுணுத்தபடி தொலைபேசியின் ஒலிபெருக்கிப்  பொத்தானை அழுத்திக்கொண்டார். நான் நினைத்தது சரிதான். வேறுயாருமல்ல,மறுமுனையில்  மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவேதான்.

பாவம் பாட்டியும் தாத்தாவும். கனடாவுக்கு வந்த நாளிலிருந்து பாட்டி அம்மாவுடனும், தாத்தா மாமாவுடனும் வாழ்ந்து கொண்டு பேரர்களை கவனிப்பதிலேயே இன்பம் என்று பிரிந்தும் ,பிரியாததுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் தாத்தா தனது உரையாடலை   பாட்டியுடன் கைபேசியில் காலையிலேயே ஆரம்பித்துவிடுவார்.

நானும் அவர்களின் உரையாடலை எனது அறையிலிருந்தே கேட்பதற்கு வார இறுதி நாட்களில் வழக்கம்போல் என் காதினை நீட்டிக்கொண்டேன்.

 '' என்ன பறுவதம்? என்ன புதினம்?''

அலுத்துக்கொண்ட பாட்டி ''என்னத்தை! நீங்க தான் சொல்லவேணும்?''

'' காலமைச் செய்தி கேட்டியே   பறுவதம்! இரண்டு 15 வயசு குமர்ப்பிள்ளையள் , டெலிபோனில சில நாட்கள் பழகின பொடியளை  நம்பி ஊரு விட்டு ஊர் பஸ்ஸில காதலரைச் சந்திக்கப் போனவையாம். அவங்கள் முதலே திட்டம் போட்டு மோட்ட சைக்கிளில்லை அவையளை ஏத்திக்கொண்டு போய் வேற பெடியளோட சேர்ந்து கெடுக்க முயற்சி செய்ய, ஒருத்தி தப்பிவந்து   போலீசில அறிவிச்சும் ,மற்றவளை காப்பாற்ற முடியாமல் போச்சுதாம்''

சீறிடும் புலியானாள் பாட்டி!

''தூ! இந்தப் பிள்ளைகளையும்  தாய் தகப்பன் தானே பெற்றது. அந்த பெற்றவையும் இவையளின்ர  எதிர்காலத்தைப்பற்றி எவ்வளவு கனவுகண்டு பிள்ளையள நோகவிடாமல்தங்கட உடலை வருத்தி உழைச்சு வளர்த்திருப்பர். நன்றிகெட்டவர்கள். பெத்தவையின்ர  வயித்தில நெருப்பை கொட்டி , தங்கட வாழ்வினையும் சுத்த-சூனியமாக்கின மகாபாவியள். அந்தக் காலத்திலதான் எங்களுக்கு அடுத்தவீட்டில நடக்கிறது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இன்டைக்கு  உலகத்தில் குறிப்பாக இலங்கை,இந்தியாவில நடக்கிற பெண்பிள்ளையள் மீதான வன்முறையள் எக்கச்சக்கம். அவையெல்லாம் இந்தக்காலத்தில் ஒவ்வொருவரும் அறியிறதிற்கு வாய்ப்புக்கள் ஏராளம் இருக்கு. அறிந்துகொண்டும் விட்டில் பூச்சிகள் போல நெருப்பில போய் வலிய விழுகினம் எண்டால்  இவையளப்போல  வடிகட்டின  முட்டாளுகள் வேற ஆர் உலகத்தில இருக்க முடியும்.  . பெண் குழந்தையளைக் கூட விட்டுவைக்காத கொடிய காமப் பசி கொண்ட இரண்டுகால் உயிரினங்கள் வாழுற  பூமியிது.''

''ஓம் பறுவதம் ,குழந்தையளையுமெல்லே கெடுவார்   விடுறாங்களில்லை. ஒருநாள்  8 வயது பெண்பிள்ளையை பேரன் ,பேத்தி பஸ் ஸ்டான்ட் இலை விட்டு கடையொன்றினுள் நுழைஞ்ச பிறகு  அப்பிள்ளையை ஒரு 15 வயதுப் பொடியன், குழறக் குழற இழுத்துச் சென்றானாம்.''

பாட்டி தொடர்ந்தார்.

''ம் , இப்பிடியெல்லாம் எவ்வளவோ அநியாயம்,அக்கிரமம் நாட்டில நடக்குது.உந்த குழந்தைப்  பிள்ளையை தனியா விட்டுவிட்டுப் போன பெரிய மனுஷருக்கு நாட்டில நடக்கிறது தெரியாதோ? கடையில என்ன களவெடுக்கவே போனவை? பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே!  ஏன் ,கண்ணை மூடிக்கொண்டோ திரியினம்.

கடவுளே எப்படியெல்லாம் இருந்த நாடு. முந்தி எங்கட  பெம்பிளைப்பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வந்து ரியூசன் போய் இரவு 9 மணிக்கு ரியூசன் முடிஞ்சு அவர்கள் வீடு வந்துசேர 10 மணிகூட ஆகும். பிள்ளையளுக்கு சாப்பாடு போட்டுக் குடுத்து , படுக்க வைச்சு பிறகு காலமை 4 மணிக்கு எழும்பி 5 மணிக்கு டியூசனுக்கு திரும்பவும் அனுப்பி ,எவ்வளவு சுதந்திரமாய் பெம்பிள்ளைப் பிள்ளையள் பயமில்லாமல் திரிஞ்ச நாடு எங்கட நாடு. எல்லாம் குட்டிச் சுவாராய் போச்சு.''


''அதுதானே  பறுவதம்!அந்தக் காலங்களை நினைச்சா ஆசை,ஆசையாய் இருக்கு பறுவதம். உரிமைப் போராட்டம் என்று துவங்கி இருந்ததையும் இழந்தெல்லே இருக்கிறம்.'' என்று பழைய நினைவுகளை  ஒருமுறை ஞாபகப் படுத்திப் பாட்டியின் கருத்துக்கு பலம் கொடுத்துக் கொண்ட தாத்தா மேலும் '' ஏன் பறுவதம் இந்த கிழமை செய்தியில் பார் கைபேசிக் காதலில தோல்வி எண்டு 23 வயசுப் பிள்ளை தனக்குத் தானே தீமூட்டி தற்கொலையாம்!!

கடவுளே! முன்னப் பின்ன தெரியாதவன்,இவன விட்டா வாழ்க்கையே முடிஞ்சிது தானே! பெற்றவை இல்லையோ? கூடப்பிறந்தவை இல்லையோ இவையளுக்கு! உலகத்தில வாழத்தெரியாத முட்டாலுகள.''

சரி,பறுவதம்! அவன் ஏமாத்தினாலும் கூட  ,நீ வாழ்ந்தெல்லா அவனுக்கு காட்டியிருக்கவேணும். அதை விட்டு அவனுக்கு சுதந்திரம் கொடுத்தெல்லோ நீ உன்னை அழிக்கிறாய்!  

''நல்லாச் சொன்னியள்இதுக்கு  முதலில பெண்களில மாற்றம் வரவேணும்.நாட்டில் நடப்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும். உருப்படியில்லாத வேட்டை ஓநாய்களோடஉந்த போனில நோண்டிற நேரத்தில ,பிரயோசனமாய் சுத்திவர நடக்கிறதை அறியலாமெல்லே!  உலகை உணரவேண்டும்படிக்கவேணும். பெண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட வேணும். தாங்களும் ஆண்களை எதிர்த்து நிக்கிற வல்லமை பெறவேண்டும். செயல்பாடுகள் எதுவும் இல்லாமல்  பெண்கள் உரிமைப்போராட்டம் என்று வீதியிலும் ,மேடையிலும் கோஷமிடுவதில பிரயோசனமில்லைப் பாருங்கோ!''


''அது மட்டுமில்லை பறுவதம்! உந்த காம வெறிபிடிச்சுத் திரியிற காட்டு விலங்குகளை கண்ட இடத்தில சுட்டுத்தள்ளவேணும் எண்டு சட்டம் வரவேணும்'' என்று தனது பங்குக்கு ஆத்திரத்தினை சூடாகவே   வெளிப்படுத்திக்கொண்டார்  தாத்தா.


''சரி,சரி மேள் வேலைக்கு வெளிக்கிடுறா,நான் பிறகு எடுக்கிறன் ''

''சரி  பறுவதம்!'' என்றதும் கைபேசி தொடர்பினை துண்டித்துக்கொண்டார் பாட்டி.

''என்னும் எழும்பேலையோ பிள்ளை ?'' என்ற அம்மாவின் குரல் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்த நான் காலைக்கடன்களுக்காக குளியலறை நோக்கி சென்றேன்.

ஆக்கம்:பேரன் செ.மனுவேந்தன்.  


3 comments:

  1. காலக் கொடுமை. தொழில்நுட்ப முன்னேற்றம் எல்ஸாவற்றையும் இலகுவாக்குவது போல் ஒழுக்குக்கேடானவர்களிற்கு தீனி போட்டு எங்கும் எல்லா இடமும் தீயவற்றை அறிந்து அழிக்கவும் அழியவும் உதவுகிறது. அக்ஷகாக இலக்கித்தின் மூலம் விழிப்புணர்வு கொண்டு வர முயலும் ஆசிரியருக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  2. kankesan sithamparanathanSaturday, June 27, 2020

    பொன்மகள் வந்தாள் -போன்ற திரைப்படங்கள் மட்டுமல்ல உங்கள் போன்ற எழுத்தாளர்களும் ,மீடியாக்களும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் வலுக்க வேண்டும்

    ReplyDelete
  3. T.மகேசன்Saturday, June 27, 2020

    உங்கள் பதிவுகள் பலவும் பிரமாதம்.அதில் பாட்டி,தாத்தா உரையாடல் சிந்திக்கவைக்கும் கருத்துக்களுடன் யாழ்ப்பாண தமிழினை எமக்கு கற்றுக்கொடுக்கிறது. அத்துடன் ஆய்வுக்கட்டுரைகள் ,சமய ரீதியான கட்டுரைகள், நகைச்சுவை வரை எல்லாமே பிரமாதம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete