2020 நாடாளுமன்ற தேர்தலும், களத்தில் கட்சிகளும்- ஒரு பார்வை






2019 நவம்பரில் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வசதியாக தனது கட்சிக்கும், அதன் ஆதரவு கட்சிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்வரும்  தேர்தல் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறார்.

2020 ஆகஸ்ட்  ஐந்தாம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க 16 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 இருந்தாலும் அவற்றில் பல கட்சிகள் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. 313 சுயேச்சை வேட்பாளர்களைக் கொண்ட குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 3652 பேரும், சுயேச்சை குழுவைச் சேர்ந்த வேட்பாளர்கள் 3800 பேருமாக, மொத்தம் 7,452 பேர் பதிவு செய்துள்ளனர்.


இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் 196 பேர் நாடு முழுவதிலும் உள்ள 22 தேர்தல் தேர்தல் மாவட்டங்களில் இருந்து  விகிதாசார முறைப்படியும்,  29 பேர் நாடு முழுவதும் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் விகிதாசார முறைப்படியும்  தெரிவுசெய்யப்படுவர்.

இலங்கையின் அரசியல் நிர்வாகத்திற்காக நாடு 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல தமிழ் மாவட்டங்களில் சனத்தொகை குறைவாக இருப்பதனால், தேர்தலுக்காக நாடு 22 தேர்தல் மாவட்டங்களாகப் கருதப்படுகிறது. வவுனியா,  முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மூன்று அரசியல் நிர்வாக மாவட்டங்களை சேர்த்து ஒரு வன்னி தேர்தல் மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அரசியல் நிர்வாக மாவட்டங்கள் இரண்டையும் சேர்த்து ஒரு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

வன்னித் தேர்தல் மாவட்டம் மூன்று அரசியல் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தாலும் அதுவே இலங்கையில் அதி குறைந்த பதியப்பட்ட வாக்காளர்களை கொண்ட தேர்தல் மாவட்டம் ஆகும். இங்கு பதியப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 287,024 ஆகும். அடுத்து குறைவான பதியப்பட்ட வாக்காளர்களை கொண்ட திருகோணமலை  மாவட்டத்தில் பதியப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 288,868 ஆகும்.

இலங்கையிலேயே அதி கூடிய பதியப்பட்ட வாக்காளர்களை கொண்ட மாவட்டமான  கம்பகா மாவட்டத்தில், பதியப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,785,964 ஆகும்.  இலங்கை முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கை 16,263,885  ஆகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும், இருந்து விகிதாசார முறைப்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அவைகள்  யாழ்ப்பாணம்-7, வன்னி-6, மட்டக்களப்பு-5, திருகோணமலை-4, திகாமடுள்ள[அம்பாறை]-7 ஆகும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 2,071,527 பேர்.   இது நாடு முழுவதும் வாக்களிக்க தகுதி பெற்றோரில் 12.73 வீதமாகும்.

வழமையான  ரணில் விக்கிரமசிங்க தலைமையாகக் கொண்ட UNP எனும்  ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலும்,  SJB எனும்  சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி  கட்சி அன்னம்  சின்னத்திலும் , மகிந்த ராஜபக்ச தலைமையில் SLPP எனப்படும் சிறிலங்கா பொது ஜன பெரமுனை கை சின்னத்திலும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.


தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு [வீடு], ஈழ மக்கள் ஜனநாயக கட்சி [வீணை], தமிழ் தேசிய மக்கள் முன்னணி [துவிச்சக்கர வண்டி] ] ஆகிய கட்சிகள் தொடர்ந்தும் களத்தில் இருக்க இம்முறை தமிழ் மக்களின் ஆணை கேட்டு புதிதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சி [மீன்] யும் களத்தில் குதித்துள்ளது.

மேலும் தமிழர் தரப்பில் பதியப்பட்ட  16 கட்சிகளும், 14 சுயேச்சை வேட்பாளரைக் கொண்ட குழுக்களும்  களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களில் கட்டுப்பணத்தினை இழந்தாலும் பரவாயில்லை, வாக்குகளைச் சிதறடிக்க வேண்டுமென   வந்தவர்களையும், ஏனையவர்களின் பலத்தினையும் அறிய, தேர்தல் முடிவு வரும்வரையில் காத்திருப்போம்.

👤தொகுப்பு:செ.மனுவேந்தன் 














0 comments:

Post a Comment