கடன் - பகுதி 03


[கி மு 3000 ஆண்டில் இருந்து] / DEBT [From 3000 BC]
அதிகமாக ஆலயம் மற்றும் அரண்மனை வளாகங்களால் சுமேரியன் பொருளாதாரம் அன்று ஆதிக்கம் செலுத்தியது. அங்கு ஆயிரக்கணக்கில் குருமார்கள், அதிகாரிகள், கைவினைஞர்கள், விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்கள் அல்லது இடையர்கள் [priests and officials, craftspeople who worked in their industrial workshops, farmers and shepherds who worked their considerable estates] வேலை செய்தார்கள். கி மு 3500 ஆண்டு அளவில் அவர்கள் சீரான கணக்கியல் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள். அவர்களின் அடிப்படை நாணய அலகு பழங்கால ஒருவகை வெள்ளி வகையாகும் [The basic monetary unit was the silver shekel] இதன் நிறை ஒரு குர் அல்லது ஒரு புசல் பார்லி [வாற்கோதுமை] ஆகும் [equivalent of one gur, or bushel of barley]. கடனை கணக்கிட ஆலய நிர்வாகிகள் இந்த அளவீடுகளை உண்டாக்கினார்கள். இதன் மூலம் வாடகை, கட்டணம், கடன்கள் ... [rents, fees, loans ... ] போன்றவை வெள்ளியில் கணக்கிட்டார்கள். எனவே வெள்ளி  நடைமுறையில் ஒரு பணமாக இருந்தது எனலாம். [Silver was effectively, money]. என்றாலும் வெள்ளி அதிகம் புழக்கத்தில் இருக்க வில்லை [silver did not circulate very much]. பெரும்பாலானவை ஆலயம் அல்லது அரண்மனை திறைசேரியிலேயே இருந்தன. ஏன் சில வெள்ளி, ஆயிரம் ஆண்டுகளாக அசையாமல், அங்கேயே இருந்தன. இதற்க்கு முக்கிய காரணம் கடன் வெள்ளியில் கணக்கிடப் பட்டாலும், அதை வெள்ளியில் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அதிகமாக பார்லியில் அதை திருப்பி கொடுத்தார்கள். மெசொப்பொத்தேமியா நகரின் சந்தைகள் கூட , விலைகள் வெள்ளியில் கணக்கிட்டாலும், அங்கு கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் படி, பெரும்பாலான பரிவர்த்தனைகள் கடன் அடிப்படையிலேயே நடை பெற்றன [prices were also calculated in silver,But even here, such evidence as we have suggests that most transactions were based on credit]. இங்கு, மரபுமுறை பொருளாதார கதையின் ஒவ்வொரு அம்சமும் முற்றிலும் மறுக்கப்படுவதை காணலாம்.

சங்க காலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறையும் மற்றும் சில பல வணிகங்களில் காசு கொடுத்து வாங்குதலும் இருந்ததை காண்கிறோம். இங்கு காசு தங்கத்திலும் செப்புவிலும் [தாமிரம் / Copper] பயன்படுத்தப் பட்டன.  உதாரணமாக கோவூர் கிழார் பாடிய புறநானூறு 33 இல்,

"கான் உறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
குளக் கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்" ,

காட்டில் வாழும் வாழ்க்கையினை உடைய வேடன், சினம் மிகுந்த நாயுடன் மான்கறியினை வட்டிலிலே கொண்டு வருவான். ஆயர் பாடியிலே இருக்கிற ஆயர் மகள் பானையிலே தயிரைக் கொண்டு வருவாள். அவ்வாறே இவ்வூர் உழவர் மக்களின் பெருங்குடி மகள் அவர்களுக்கு நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவனும்
ஆயர் குடிமகளும் தாம் தாம் கொண்டுவந்ததிற்குப் பதிலாக நெல்லைப் பெற்றுச் செல்வார்களாம் என்கிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய புறநானூறு 353 யிலும் மற்றும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படை 164 & 165 இலும் காசின் அல்லது நாணயத்தின் பாவனையை காண்கிறோம். முதலாவது,

"ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த
பொலஞ்செய் பல் காசு அணிந்த அல்குல்"

இதில், குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பல பொற்காசுகளைக் கொண்ட மேகலையை சுருங்கிய தனது இடுப்பில் அணிந்து கொண்டு செல்பவளை [made perfectly by a skilled goldsmith, many gold coins,wearing on the loins] என்கிறது. மெசொப்பொத்தேமியா நாகரிகத்திலும், இதே போல ஊர் நகரத்தின் அரச கல்லறைகளில் பெண்கள் அணியும் மெல்லிய பொன் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப் பாகைகளை காண்கிறோம். தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துப் படி, இது அலங்காரத்திற்கும் மட்டும் அல்ல, இது ஒரு சிறிய பணப்பெட்டியாகவும் இருந்தது என்கிறார்கள். பெண்கள் கடைகளுக்கு போகும் போது, தம்மை கவர்ந்த பொருட்களை வாங்க, அந்த தலைப் பாகையில் உள்ள பொன் தகடுகளை கழற்றி எடுத்து பணமாக பாவித்தார்கள் என்கிறார்கள். அது மட்டும் அல்ல, ஊர் நகரத்தின் அரச கல்லறை, பெண்கள் உருளை முத்திரைகள் வைத்திருப்பதை காட்டுகிறது. இவை அரச கையொப்பம் இட்ட முத்திரையாகவும் பண்டைய கால கடன் அட்டையாகவும் இருந்தன என்கிறார்கள். எனவே சங்க காலத்திலும் மேகலையில் தொங்கவிடப் பட்ட பொற்காசுகளை அதிகமாக அவ்வாறே பாவித்து இருக்கலாம் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இரண்டாவதில்,

"நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்,"

தான் நெய்யை விற்கும் விலைக்குக் கட்டியான பொன்னை வாங்காமல் அவ்விலைக்கு எருமையையும், நல்ல கர்ப்பிணி பசுக்களையும்  வாங்குவாள் என்கிறது [She does not buy gold with the money from the ghee she sells. She buys buffaloes and fine, pregnant cows]. ஆகவே சரியாக, கவனமாக பொருளாதார வரலாற்றை கி மு 3000 அல்லது கி மு 4000 த்தில் இருந்து ஆராய்ந்தால், கட்டாயம் எமக்கு தேவைப்படுவது கடனின் வரலாறே [history of debt] ஆகும். எது எப்படியாகினும் இது இன்னும் நடைபெறவில்லை. பின்னோக்கிய வரிசையில் வரலாற்றை மாற்றி அமைக்கவில்லை. அந்த குறைபாடு எதோ ஒரு நோக்கத்திற்காக அப்படியே இருக்கிறது. அவ்வாறே பொருளாதார வரலாற்றில் மற்றும் ஒரு குறைபாடாக அனைத்துலக நாணய நிதியம் [சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund]  மற்றும் உலக வங்கிகள் விளங்குகிறது எனலாம்.

மேற்கு நாடுகளிடம் கடன் வாங்கிவிட்டு, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டியை மட்டும் கட்டும் வளர்முக நாடுகள் ஏராளம்.உதாரணமாக, வளர்முக நாடுகளின் கடன்கள் 1986 களிலேயே ஒரு ட்ரில்லியன் டாலர்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு வட்டி. அதுமட்டும் அல்ல, மேற்கு உலக நாடுகள் கடனை ரத்து செய்வதில் பெரிதாக ஆர்வமும் காட்டுவதில்லை, இந்த நிலையில் தான் அந்த ஏழை நாடுகளுக்கு தாம் உதவி செய்வதாக கூறி, சர்வதேச பொருளாதார நிறுவனங்கள், உதாரணமாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி, அங்கு நுழைகிறது. ஆனால் இந்த அமைப்புகளின் பிரச்சனையானது அவர்கள் ஜனநாயகமற்ற மற்றும் ஏழை நாடுகளுக்கு எதிராக பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதும், சுற்றுச்சூழல் மற்றும் உழைப்பு பாதுகாப்புகளை மட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை இல்லாது தொழிற்படுவதும் மற்றும் அவர்களின்  "சிக்கனத் திட்டங்கள்" அல்லது இவை போன்றவையாகும்..

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 04 தொடரும்

No comments:

Post a Comment