கடன்- பகுதி 02




[கி மு 3000 ஆண்டில் இருந்து] / DEBT [From 3000 BC]


கடன் பற்றிய விவாதம் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக செல்வந்தனுக்கும் ஏழைக்கும் இடையிலான போராட்டம், உண்மையில் கடனாளர்களுக்கும் கடனாளிகளுக்கும் [creditors and debtors] இடையிலான மோதல்களின் வடிவத்தையே பெரும்பாலும் பெற்று இருந்தன. உதாரணமாக, வட்டி செலுத்துதலின் சரி, பிழைகள், கடனாளர்களுக்கு கடனாளி கடன் தள்ளுபடி ஆகும் மட்டும் வேலை செய்தல், பொது மன்னிப்பு, மீள் பெறுதல்,  இழப்பீடுகள், [கடன் திருப்பி கொடுக்கும் வரை] ஆடு மாடுகளை சட்டப்பூர்வமாக கவர்ந்து எடுத்தல் [ஆநிரை கவர்தல்], திராட்சைத் தோட்டங்களை பறிமுதல் செய்தல், கடனாளர்களின் குழந்தைகளை அடிமை ஆக்குதல், [arguments about the rights and wrongs of interest payments, debt peonage, amnesty, repossession, restitution, the sequestering of sheep, the seizing of vineyards, and the selling of debtors' children into slavery.] பற்றிய விவாதங்கள், மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதன் அடிப்படையிலேயே, கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க ஒழுங்கு முறைமைகள் மற்றும் பிரபலமான கிளர்ச்சிகள் [remarkable regularity, popular insurrections] தோன்றின எனலாம். இதன் விளைவாக, கடன் பதிவுகள்- முத்திரைகள், அல்லது அந்தந்த காலத்திற்கு ஏற்ப அவை எடுத்துக்கொண்ட வடிவங்களான நாணற்புல் தாள், பேரேடு [ papyri, ledgers] போன்றவற்றை ஒரு சடங்கு முறையில் அழிக்கப் பட்டன. பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்ற மோசஸ் ஃபின்லே (the great classicist  Moses Finley / born Finkelstein; 20 May 1912 – 23 June 1986), எல்லா புரட்சிகர இயக்கமும் ஒற்றை நிரல் ஒன்றையே கொண்டு இருந்தன என்றும் அது "கடன்களை ரத்துசெய் மற்றும் நிலத்தை மறுபகிர்வு செய்யுங்கள்" ["Cancel the debts and redistribute the land."] என்பதே என்றும் சுட்டிக் காட்டுகிறார். இந்த முரண்பாடுகளில் இருந்தே பல சமகால தார்மீக மற்றும் மத கோட்பாடுகள் அல்லது அறிவுரைகள் பரிணாமம் அடைந்தன என நாம் இலகுவாக தீர்மானிக்கலாம். உதாரணமாக ஆபிரகாமிய சமயங்களில் [Abrahamic religion] காணப்படும் தீர்ப்புநாள் [Day of reckoning] மற்றும் மீட்சி அல்லது பாவத்திலிருந்து விடுவித்தல் [Redemption] போன்றவை கணக்கிடுதல் [reckoning] மற்றும் ஒரு கடனை அழித்தல் [Redemption] என்ற பண்டைய கணக்கியலில் இருந்து நேரடியாக எடுத்தவையாகும். அகன்ற பார்வையில், குற்றம், சுதந்திரம், மன்னிப்பு, மற்றும் பாவம் கூட ["guilt," "freedom," "forgiveness," and even "sin."] இதில் அடங்கும். அது மட்டும் அல்ல,  'யார் உண்மையில் கடன்பட்டவர், என்ன, யாருக்கு' என்ற விவாதமே [Arguments about who really owes what to whom], எது சரி, எது பிழை என்பதனை தீர்மானிக்கும் அடிப்படை கோட்பாட்டிற்கும் வித்திட்டது எனலாம். 

பண்டைய வரலாற்றை உற்று நோக்கும் பொழுது, பணமும் கடனும் [money and debt] அதிகமாக ஒரே நேரத்தில் தோன்றியதாக தெரிகிறது. எமக்கு கிடைத்த உலகின் முதல் பதியப்பட்ட ஆவணம் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் முத்திரைகள் [Mesopotamia clay tablets] ஆகும். இது அதிகமாக கி மு 3200 ஆம் ஆண்டளவில், களிமண் பலகைகளில் (Clay tablets), கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கிய, சுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரத்தில் [Uruk], இன்றைய ஈராக்கில், வாணிக நடவடிக்கைகளை அல்லது கணக்கு வழக்குகளை பதிய முதல் முதல் தொடங்கப் பட்டது. ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் ஒரு ஊதியச் சீட்டு [the world's oldest payslip], களிமண் முத்திரையில் அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. இங்கு ஒரு மனித தலை கிண்ணத்தில் இருந்து சாப்பிடுவதை குறிக்கிறது. அதன் அருகில் உள்ள புனல் வடிவமான பாத்திரம், பியர் மதுவையும் [Beer] , ஒவ்வொன்றின் மீதும் உள்ள கீறல்கள் வேலையாட்களுக்கு கொடுத்த சம்பளத்தையும் குறிப்பதாக கருதுகிறார்கள். இந்த சம்பளம் மதுவாக அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆரம்பத்தில் அங்கு களிமண் பலகைகள் வரவுகள், பற்றுகள், ஆலயங்களால் வழங்கப்பட்ட பங்கீடுகள் [ரேஷன்கள்], கோயில் நிலங்களுக்கு வாடகை செலுத்த வேண்டிய பணம் [credits and debits, rations issued by temples, money owed for rent of temple lands] போன்றவற்றின் கணக்குகள் பதியவே பாவிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதிகள் குறிப்பாக தானியம் மற்றும் வெள்ளியில் [grain and silver] கணக்கிடப்பட்டன. இவற்றில் இருந்து நாம் அறிவது, கடனின் வரலாறு [A history of debt], பணத்தின் அல்லது நாணயத்தின் வரலாறு [a history of money] என்பதே ஆகும். எனவே மனித வாழ்வில் கடனின் பங்களிப்பை அல்லது அதன் பாத்திரத்தை [the role that debt has played in human society] புரிந்து கொள்ள எளிதான வழி, பணம் எடுத்த படிவங்களைப் பின்பற்றுவதும், பல நூற்றாண்டுகளாக பணம் பயன்படுத்தப்பட்ட விதத்தை பின்பற்றுவதும் ஆகும். பொதுவாக பணத்தின் தோற்றம் பற்றி பொருளாதார வல்லுநர்கள் பேசும் பொழுது, கடன் என்னவோ ஒரு பின் சிந்தனை [an afterthought] என்றே கூறுகிறார்கள். அவர்கள் முதல் பண்டமாற்று, அதன் பின் பணம், இவைகளுக்கு பின்பே கடன் வந்தது என்கிறார்கள் [First comes barter, then money; credit only develops later.] இதற்க்கு சாட்சியாக இன்று நடைமுறையில் உள்ள, பற்று அட்டை, கடன் அட்டை, பிட்காயின் அல்லது குறியாக்க நாணயம், மின்னணு நிதி பரிமாற்றங்கள் [debit card ,credit card, bitcoin or cryptocurrency, electronic fund transfers] போன்றவற்றை கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நாம் பொருளாதார வாழ்க்கை எப்படி சமூகங்கள் மற்றும் சந்தைகளில் நடத்தப்பட்டது என்பதை ஆராயும் போது, பண்டைய ஆரம்ப காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பல வழிகளில் கடன் பட்டு இருப்பதை காணலாம். அது மட்டும் அல்ல பெரும்பாலான பரிவர்த்தனைகள் நாணயம் பாவிக்காமல் நடைபெற்று இருப்பதை காணலாம்.

நாம் குழந்தைகளுக்கு பாடசாலை புத்தகத்திலும் மற்றும் அருங்காட்சியகத்திலும் [schoolbooks and museums], முன்னொரு காலத்தில் பண்டமாற்று உலகில் இருந்தது, அதாவது ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றிக் கொண்டார்கள், உதாரணமாக, ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்றார்கள் என,  "பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்" என்று (குறுந்தொகை 221.3-4) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க புலவர் முதுகூத்தனார் பண்டமாற்று பற்றி கூறுகிறார். இது தங்கு தடை இன்றி நடைபெற, இரு வர்த்தகருக்கும் இடையில், ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் பொருட்களில் வாங்கும் தேவை அல்லது நாட்டம் இருக்க வேண்டும் [a double coincidence of wants for trade to take place], அப்படி இல்லாவிட்டால் இது நடை பெறாது. எனவே இது கடினமான ஒன்று, எனவே மக்கள் நாணயத்தை [பணத்தை] கண்டு பிடித்தார்கள். இதை தொடர்ந்து நிதி நிறுவனமும் [வைப்பகமும்] கடனும் உருவாகின. இது அனைத்தும் ஒரு எளிய, நேரடியான ஒன்றில் இருந்து ஒன்று முன்னேறி உருவாகக் கூடிய ஒரு வரலாற்று பாதை போலவே எமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஆனால் நீங்கள் சரியாக வணிக வரலாற்றை அலசி ஆராய்ந்தால், இது இதற்க்கு முரணாகவே, அதாவது மிகச்சரியாக இதன் பின்னோக்கியதாகவே இருக்கும் [standard account of monetary history is precisely backwards]. அதாவது முதல் கடன் அல்லது மெய்நிகர் அல்லது மாய பணம் வந்தது [virtual money came first], நாணயம் மிகவும் பிந்தியே வந்தது, அதன் பயன்பாடு ஒரு சீரற்ற முறையில் பரவியதுடன், அது கடன் அமைப்பு முறையை முழுமையாக மாற்றிடு செய்யவில்லை. பண்டமாற்று ஒரு தற்செயலாக தோன்றிய ஒன்றே எனலாம். உதாரணமாக ஒன்று அல்லது பல காரணங்களால் அவர்களுக்கு நாணயம் கிடைக்க சந்தர்ப்பம் இல்லாததால் ஆகும். 

ஆரம்பத்தில், மனித சமுதாயங்கள்  சிறுசிறு குழுக்களாய் வாழ்ந்திருந்தபோது பண்டமாற்றுக்கள் நடப்பதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு குழுவின் உள்ளேயும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிரிக்கவே முடியாத குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பொருள்களும் சேவைகளும் அங்கு எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் கூடியே ஒன்றாக பகிர்ந்து கையாளப் பட்டன. ஆகவே அங்கு விலை அல்லது இலவசம் என்று  ஒன்றும் இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. எல்லாவற்றையும் பண அடிப்படையில் பொதுவாக மதிப்பு [value] கொடுத்து பழக்கப் பட்டவர்கள் இன்றைய சமுதாயம். எனவே பண்டைய கால வாழ்வையும் அப்படியே கற்பனை செய்கிறார்கள். இதில் தான் தவறு ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். அன்றைய பண்டைய காலத்தில் எளிமையாக வாழ்ந்த அவர்களுக்கு தேவைகளும் அப்படியே இருந்து இருக்கும், உதாரணமாக, கால்நடைகள், ஆடைகள், உணவு .. அவை அந்த சிறு குழுக்களுக்குள் பகிரப்பட்டு இருக்கும் என்று நம்பலாம்.

"நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே"

என்று புறநானூறு - 189 கூறியவாறு இரவு, பகல் பாராது, உறங்காது, விரைந்து செல்லும் விலங்குகளை வேட்டையாட பார்த்துக்கொண்டு இருக்கும் இவனுக்கும் உண்ணும் உணவு என்பது கால் படியளவுதான். (நாழி- கால்படி, நாழிகை) அணியும் ஆடையும் இரண்டே இரண்டுதான்.பண்டமாற்றங்கள் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் சில சந்தர்ப்பங்களில் நடைபெற்று இருக்கலாம். அது ஒரு வேளை கைமாற்று [கைக்கடன்] ஆகவும் இருந்து இருக்கலாம்?, ஆனால் கட்டாயம் அந்த பழைய சூழ்நிலையில் பெரிதாய் சொல்லும் அளவு பண்டமாற்று நடந்து இருக்காது. 

அதன் பின் பயிர்ச் செய்கை அதிகமாக மெசொப்பொத்தேமியாவில் ஆரம்பிக்கப் பட்டு விவசாய சமூகம் உருவாகியது. அங்கு தான் முதல் முதல் எழுத்தும் உருவாகியது. எனவே அங்கு கண்டு எடுக்கப் பட்ட களிமண் வில்லைகளின் படி, கி.மு.3000 களில் பணம் ஷே-கெல்  (shekel) என்கிற பெயரில் சுமேரியர்களின் பாவனையில் இருந்திருக்கிறது. இது இன்றைய போல ஒரு பணம் அல்ல. அதிகமாக ஒரு மாய பணம் [virtual money] எனலாம். ஷே (she) என்றால் வாற்கோதுமை [The name shekel was based on the Akkadian she, which was the early name for barley.]. கெல் (kel ) என்பது அளவுகோல் ஆகும்.ஆகவே அதை பண அளவுகோல் என்று சொல்லலாம். மேலும் உதாரணமாக ஒரு ஷே-கெல் என்பது  ஒரு மாத உழைப்பிற்கு சமமும் ஆகும்  [One month of labor was worth 1 shekel]. அறிஞர்களின் கருத்துப்படி, ஈரானில் உள்ள சுசா என்ற இடத்தில், கி மு 3300 இல் கண்டுபிடிக்கப் பட்ட  ஐந்து களிமண் டோக்கன்கள், உலகின் முதல் காசு என்கிறார்கள். ஒன்று ஒரு ஆட்டுக்கு சமம், மற்றது ஒரு ஜாடி எண்ணெய்க்கு சமம், அவ்வாறே மற்றவைகள் உலோகத்தின் ஒரு அளவு, தேனின் ஒரு அளவு மற்றும் வெவ்வேறு ஆடைகளுக்கான அளவு ஆகும் [Clay tokens, described by some scholars as the world's first money, found in Susa, Iran have been dated to 3300 B.C. One was equivalent to one sheep. Others represented a jar of oil, a measure of metal, a measure of honey, and different garments.]. அந்த பண்டைய காலத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், உதாரணமாக முழுக் குடும்பத்தையுமே பணயக் கைதிகளாக்கினார்கள். அது மட்டும் அல்ல, அடிமை வர்த்தகம் சர்வ சாதாரணமாக  நடந்தது. உதாரணமாக ஷே-கெல் அளவு கோலில் ஒரு அடிமை அவனின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, 10 க்கும் 20 இடையில் விற்கப் பட்டது [A slave sold for between 10 and 20 shekels] தெரிய வருகிறது. இவை அவர்கள் கடன் கொடுத்ததையும் அவையின் பெறுமதியையும் குறிக்கிறது எனலாம். என்றாலும் மக்கள் கடன் தொல்லையால் தொடர்ந்து அடிமையாக அல்லது வேலையாட்களாக கஷடப்படுவதை தவிர்ப்பதற்காக மன்னர்கள் கடன்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இல்லாமல் செய்து அவர்களுக்கு ஒரு நிவாரணம் அளித்தார்கள். எனவே கடன் அல்லது மாய பணமே முதலில் உருவானது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. என்றாலும் இன்னும் பொருளியல் புத்தகங்களைப் புரட்டினால், மனிதர்கள் தொடக்கத்தில் பண்டமாற்று செய்தார்கள், என்றாலும் அது எல்லா சந்தர்ப்பத்திலும் சரிவர செய்ய முடியாததால், பணம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள், அதை தொடர்ந்து கடன் நடவடிக்கைகள் ஏற்பட்டன என்று தலைகீழாக பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 03 தொடரும்….

0 comments:

Post a Comment