வானத்திலே
வட்டமிடும் வெண்ணிலாவே நீ
மௌனத்திலே
மிதப்பதேனோ கூறுநிலவே!
தேடியுனை
மனிதனன்று அடைந்த போதும்
மூடிவாய்
மௌனித்ததேனோ பேசுநிலாவே!
புவியின்
நிலை புரிந்து பயந்தாயோ? இல்லை
செவிமடுக்கா
சண்டியர்களால் சினந்தாயோ?
நாவுழந்தார்
நாடாட்சி கண்டு பதைத்தாயோ?
பூவுலகத்தார்
புரியாமை புரிந்து பறந்தாயோ?
கூடுவிட்டு
கண்டம் பாயும் அணுகுண்டுகள்
நாடுவிட்டு நாடுபாயும் ஏவுகணைகள்
எல்லையிலே
பீரங்கியின் எறிகுண்டுகள்
தொல்லையில்
தூர நீ தொலைந்தாயோ ?
கருப்பு
,வெள்ளை
நிறபேதம் பெருத்ததாலோ?
மறுப்பு
மதபேத மோதல் மலிந்த தாலோ?
சிறுபான்மை
சீரழிப்புகண்டு சினத்தலாலோ?
வெறுப்புற்றோ மேகத்திலே மறைகிறாய்?
கூட்டுவாழ்வு
குடியினுள் குலைந்ததாலோ?
வீட்டுக்கு
வீடு அடிதடிகள் வளர்ந்ததாலோ?
சாதிபேதம்
பித்தேறி பிணைந்ததாலோ?
பீதியில் தேய்பிறையாய் ஆனாயோ?
இடம்கொடுத்தால்
மனிதனை அறியாயோ ?
மடம் புடுங்கி மாற்றிடுவான் புரியாயோ?
பாழடித்தே
பூமியை நரகமாக்கியோன்
காலடியும்
உன்னிலத்தில் அனுமதியாதே!!
☝-செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment