நடிகையின் சதையை நம்பி......


                           
நடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா!
சினிமாவும், அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தில் இரண்டறக் கலந்து விட்டன. சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் நட்சத்திரங்கள் தமக்குரிய ஆதரவு சினிமாவில் பல்கிப் பெருகியவுடன், தம்மைச் சூழ்ந்திருக்கும் ரசிகர்களின் பலம் தமக்கும் அரசியலில் காலூன்றப் பின்னணியாக இருக்கும் எனும் நம்பிக்கையுடன் களமிறங்கி தம் வசமுள்ள பணத்தையெல்லாம் வாரியிறைந்த்து மண் கவ்வுகின்றார்கள். மக்கள் திலகத்திற்குப் பின்னர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் ஆசையோடு களமிறங்கிய பல நட்சத்திரங்கள் இறுதியில் மண் கவ்விய வரலாற்றினைத் தான் நாம் அனைவரும் கண்டு வருகின்றோம்.

மக்களுக்கான சினிமா என்று நாம் நோக்குகின்ற போது மக்களின் ரசனையினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தான் தமிழ்த் திரைப்படங்கள் செயற்படுகின்றன. குத்துப் பாட்டினை ரசிக்க வேண்டும்; கதா நாயகன் கூட்டமாக வரும் கும்பலை எதிர்த்து நின்று தனித்துச் சண்டை போட வேண்டும்;பிரபல நடிகர்களை அவர்களின் ரசிகர்களின் தலைவனாக காண்பித்து திரைப்படம் வெளி வர வேண்டும் எனும் நோக்கில் மக்களின் ரசனை என்பது இருக்கும் போது நல்ல சினிமாவினைத் தமிழ்த் திரையுலகம் தரவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது நியாயமில்லைத் தானே.
வரலாற்றுத் திரைப்படத்திலும் நடிகையின் பொக்குள் தெரிய குத்துப் பாடல் வைத்தல் தான் வரமாகும் எனும் நிலையினை தமிழ் சினிமாவினை ரசிக்கும் ரசிகர்கள் தாமாக விரும்பி ஏற்படுத்தியிருக்கின்றார்கள். பெரும்பாலான படங்களில் நடிகைகளின் உடற் சதையினை வைத்துப் பணமீட்டும் நோக்கிலான காட்சிகள் வலிந்து திணிக்கப்படுகின்றன.மக்களுக்கான யதார்த்தம் நிறைந்த வாழ்வியலைப் பற்றிப் பேசுகின்ற திரைப்படங்களின் வருகை என்பது இத்தகைய இழி நிலைகளின் காரணத்தினால் காலப் போக்கில் குறைந்து கொண்டே போகின்றது. பொக்கிஷம், அங்காடித் தெரு, மைனா போன்ற படங்கள் ஆண்டுக்கொரு முறை வருமா என்பதே இன்றைய தமிழ் சினிமாவின் நிலையினைப் பார்க்கையில் சந்தேகமாத் தான் இருக்கின்றது.
மசாலாத் திரைப்படங்கள் தான் இன்று அதிகளவில் மக்களின் ரசனையினை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. நடிகைகளுள் யார் தொடையினை நன்றாக காட்டுகிறார்? யார் அதிகம் கவர்ச்சி காட்டுகின்றார் எனப் பல போட்டிகளை ரசிகர்கள் ஏற்படுத்தி விடுகின்றார்கள். அதிகம் கவர்ச்சி காட்டும் நடிகையின் மார்க்கட் மாத்திரம் தமிழ் சினிமாவில் நின்று நிலைக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம். மக்களின் உணர்வுகளை மையப்படுத்திய கலாரசனை நிறைந்த படங்களின் வருகை என்பது அண்மைக் காலத்தில் குறைந்து கொண்டே போகின்றது. நல்ல சம்பவங்களை, வரலாற்றுக் கதைகளை, மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திப் படமெடுக்கவும்;முதலிடவும் இயக்குனர்களும், முதலீட்டாளர்களும் தயக்கம் காட்டுகின்றார்கள்.
இதே வேளை ஐந்து அல்லது ஆறு பாடல்களுடன் வரும் ஒரு திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் வரும் நடிகையின் கசாமுசா காட்சிகளை மாத்திரம் ரசிக்கும் வகையில் மசாலாப் படங்களுக்குள் உட்புகுத்திப் படமெடுப்பதற்குப் பலரும் விரும்புகின்றார்கள். தமிழ் சினிமாவில் முழுதாக காட்டுகின்றார்களா என்று நாம் கேள்வியெழுப்பினால் இல்லை என்றே பதில் கூற முடியும்! ஆனாலும் அரை குறையாக காட்டப்படும் கவர்ச்சிக் காட்சிகளை கண்டு களிக்கப் பல ரசிகர்கள் வெறி பிடித்தவர்களாக அலைகின்றார்கள். தமிழில் ஆங்கிலத் திரையுலகிற்கு நிகராக நீலப் படங்கள் இல்லாமை தான் நடிகைகளின் வாளிப்பான உடல்வாகினை நாம் ரசிக்க ஒரு காரணம் என்றும், நீலப் படங்களை எம் சமூகத்தினுள் திணித்தால் கலாச்சாரம் சீரழியும் என்றும் கூறலாம்!

ஆனாலும் நடிகையின் சதையினை நம்பித் தமிழ் சினிமாவின் போக்கினை அல்லது பாதையினை மாற்றுவதிலும் பார்க்க, நல்லதோர் கதையினை நம்பி மக்களின் பேரபிமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஒரு படத்தினை எடுக்க எம் தமிழ் இயக்குனர்கள் ஏன் முன்வரக் கூடாது? நல்ல படம் அல்லது மசாலத் தன்மையற்ற வாழ்வியலைப் பேசுகின்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் நிலையினை தமிழ் சினிமா இயக்குனர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதா? நாமும் எத்தனை நாளைக்குத் தான் மசாலாத் திரைப்படங்களைப் பார்த்து எம் மனதினுள் புகைந்து கொண்டிருப்பது. கொஞ்சமாவது வித்தியாசமாக அரைத்த மாவினை அரைப்பதனை நிறுத்தி விட்டு மேலைத் தேய சினிமாவினைப் போன்று ஜனரஞ்சக அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நல்ல படங்களைத் தருவதற்கு எம் தமிழ் சினிமா இயக்குனர்கள் முயற்சி செய்யலாம் அல்லவா?
ஐந்து பாடல்களை ஒரு படத்தினுள் சொருகி படத்தின் நேரத்தினை அதிகரிப்பதனை விடுத்து பாடல்கள் அல்லது தமிழ் இசைக்கென்று தனியான ஆல்பங்களை உருவாக்கித் தமிழ் சினிமா பயணிப்பதற்கு யாராவது ஒரு இயக்குனர் அடியெடுத்து வைக்க கூடாதா? நடிகையின் சதையினை நம்பித் தம் படங்களில் காட்சிகளை அமைப்பதனை விடுத்து மக்களின் ரசனையினை வெல்லும் வகையில் நல்ல கதைகளை நம்பித் திரைப்படங்களைத் தயாரிக்கலாம் அல்லவா? வரலாற்றுக் கதைகள், தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் சம்பவங்கள் எனப் பல விடயங்கள் புதைந்து போயிருக்க அவற்றையெல்லாம் விட்டு விட்டு மொழி மாற்றி ரீமேக் படங்களை எடுப்பதில் எம் கவனத்தினைச் செலுத்தலாமா?


நன்றி=எண்ணம், எழுத்துருவாக்கம்:செல்வராஜா நிரூபன்.

1 comment:

  1. ஐயையோ! பாடல்களே கொலை வெறி, கடி வெறி ,இரத்த வெறி, காம வெறி தாலியறு வெறி, குடி வெறி,
    எனப்பல வடிவங்களில் தமிழரை அழித்துக்கொண்டு வருகிறது.

    ReplyDelete