உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?





நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும்  குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள்,  துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக  மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“  என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும்  காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார்.

அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது  வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற்போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால்,  அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன்.  இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை  ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia) காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர்.

பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக்கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம்தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப்பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக்கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது  நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும்.

தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில்,

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"

என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மனமில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களேயானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல.கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார்.

இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள்.  
 
"அவனை நானே அடக்கம் செய்வேன்
அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும்
அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) 
"I will bury him myself.
And even if I die in the act, that death will be a glory.
I will lie with the one I love and loved by him"
 (Antigone 85- 87).

உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ்விடத்தில் தோன்றுவது உடமைபூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை  குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது தனது குழந்தைகட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவுகட்கும், சற்று தொலைவான குடும்ப உறவுகட்கும் நீட்டிக்கப்படுகிறது. இதைத்தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம்.

இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்கமாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப்போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக்கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி  என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன்  கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப்படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச்சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான  சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப்பட்டதால்தானே ராமன் பேசாமல் இருந்துவிட்டான். அதனால்தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக்குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண்டெழுகிறாள்.  சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப்படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக்கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவிமடுக்கவில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்குதான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம்தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என  கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை.

💌[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


1 comment:

  1. உறவுகளின் தொகுப்பு இங்கு வாழ்க்கையாக விரிகிறது. சுந்தராம்பாள், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் பாடல் வரிகள் சிறப்பாக உள்ளது. இனிப்பு என்றால் என்ன என்று விளக்குவது சிரமம் தான். கிரேக்கர்கள் நான்கு வகையான அன்பின் விளக்கம் மிக அருமை. சகோதரி ஆன்டிகாள் தன் சகோதரனுக்காக அரசனுடன் வாதாடினார் என்ற விளக்கமும் கட்டுரையை மேலும் சிறப்பு அடையச் செய்து வாசகர்களுவாசகர்களுக்குக்கு தெளிவான விபரங்களைவிபரங்களை கூறுகின்றது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete