-கதைகளில்
மட்டுமல்ல நிஜ வாழ்விலும்
காதல் அதன் பின் திருமணம்.
-அதைத்
தொடரும் மகிழ்ச்சியான வாழ்க்கை.
-எத்துணை
நிறைவான வாழ்வு!
ஆனால் இவை எல்லோருக்கும்
வாய்த்து விடுகிறதா?. சிலரின்
வாழ்க்கை திருமணத்தின் பின் கருகிவிடுகிறது.
சட்டரீதியான விவாகரத்தும் என்பது
எமது சமூகத்தில் துளிர் விட ஆரம்பித்தவேளையில் மணமுறிவுகளுக்கும் குறைவில்லை என்பதும்
உண்மையே.
திருமணத்தின் பின்னான வாழ்வு
நீடித்து நிலைக்குமா அல்லது முறிந்து போகுமா என்பதற்குக் காரணங்கள் என்ன?
திருமண வாழ்வை நீடிக்க அன்பும்
காதலும் மட்டும் போதுமா? இவை பற்றி
அறிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001
முதல் 2007 வரை 2500
தம்பதிகளைக் கொண்டு செய்த இந்த ஆய்வானது பல காரணங்களை வெளிப்படுத்துகிறது.
ஆண்களின் வயதும் வயது
வித்தியாசமும்
ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு
இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.
25 வயதிற்கு
முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு
வந்துவிடுகிறதாம்.
மனைவியை விட கணவனுக்கு 9
அல்லது அதற்கு மேற்பட்ட வயது இடைவெளியும் திருமண முறிவுக்கு காரணமாகச்
சொல்லப்படுகிறது.
குழந்தைகள்
திருமணத்திற்கு முன்பே இதே துணை
அல்லது வேறு துணை மூலம் குழந்தைகள் இருந்தால் மணமுறிவிற்கான வாய்ப்பு மிக
அதிகமாகும்.
கணவனை விட அதிகமாகக் குழந்தை
வேண்டும் என மனைவி ஆசைப்பட்டாலும் பிரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என இவ் ஆய்வு
கூறுகிறது.
தம்பதிகளின் பெற்றோர்
தம்பதிகளின் பெற்றோரின் வாழ்க்கை
முறையும் திருமண வாழ்வைப் பாதிக்கிறது.
தம்பதிகளில் எவர் ஒருவரின்
பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப் பெற்றிருந்தாலும்
மணமுறிவிற்கு வாய்ப்பு அதிகமாகிறதாம்.
ஏற்கனவே வேறு திருமணம்
முதல் திருமணத்தை விட இரண்டாவது
அல்லது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்தவர்களின் மணவாழ்க்கை முறிவதற்கான
வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம் எனச்
சொல்கிறது ஆய்வு.
குடும்ப வருமானமும் வசதியும்
பணத்திற்கும் திருமண உறவு
நீடிப்பதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பொருளாதார
ரீதியாக பலமான நிலையில் இருப்பவர்களை விட அதிகமாகப் பிரிய நேர்கிறதாம்.
அதே போல கணவன் வேலைவாய்ப்பு
இன்றி இருந்தாலும் மணமுறிவு அதிகம். ஆனால் மனைவி வேலைவாய்ப்பு இன்றி இருந்தால்
அவ்வாறு பிரிவு ஏற்படுவதில்லை என்பது கவனிப்புக்கு உரியதாகும்.
புகைத்தல்
தம்பதிகளில் ஒருவர் புகைப்பராக
இருந்தாலும் குடும்பம் பிரிவதற்கான சாத்தியம் அதிகமாம். ஆனால் இருவருமே
புகைப்பவராக இருந்தால் அவ்வாறு இல்லை என்கிறது இவ் ஆய்வு.
நீங்கள் புகைப்பவராக இருந்து
அதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறதா?
அவ்வாறாயின் மணமுறிவைத் தடுக்க
என்ன செய்யலாம்.
சுகமான வழி மனைவிக்கும்
புகைக்கப் பழக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணுகிறீர்களா?
உண்மைதான்!
இருவருமே புகைப்பதனால்
பிரிவதற்கான வாய்ப்புக் குறைந்துவிடும்.
அத்துடன் ‘இருவருக்குமே இவ்வுலக
வாழ்வின் துன்பங்கள் விரைவிலேயே தீர்ந்து இறைவனடி சேர்ந்துவிடலாம்!’.
மதுப் பாவனை
அதீத மதுப் பாவனையும் அத்தகைய
நிலையை ஏற்படுத்துமா என்பதையிட்டு ஆய்வு எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவும்
மணமுறிவிற்கு காரணமாவதை எமது சூழலில் காணக் கூடியதாக இருக்கிறது.
எமது சூழலுக்கு ஏற்ற ஆய்வு தேவை
இந்த ஆய்வின் முடிவுகள்
அவுஸ்திரேலிய சூழலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளன. எமது சூழலுக்கு இவற்றில்
சில பொருத்தம் அற்றவையாகும்.
-கூட்டுக்
குடும்ப வாழ்க்கை முறை,
-மாமியார்
மருமகள் பிணக்குகள்,
-புலம்
பெயர்ந்த வாழ்வு,
-கணவன்
அல்லது சில வேளைகளில் மனைவி வெளிநாடு சென்றுவிட மற்றவரின் தனிமை வாழ்வு
ஏற்படுத்தும் தாக்கம்,
-திருமணத்திற்கு
அப்பாலான தகாத உறவுகள்
போன்றவை எத்தகைய தாக்கங்களை
ஏற்படுத்துகின்றன
என்பதை இங்கு ஆய்வு செய்வது
அவசியம் என எண்ணுகிறேன்.
வறுமையும், பொருளாதாரத்தில்
குறைந்த நிலையும் மணமுறிவுகளுக்குக் காரணம் என மேற்கத்தைய ஆய்வு சொல்கிறது.
ஆனால் எமது சூழலில், மிகவும்
வறிய சூழலிலும் மிகவும் இனிமையான, அன்னியோன்யமான
கணவன் மனைவி உறவைக் காண்பது சகசம். ஆயினும் இங்கு பணம் நிறைந்த, செல்வச்
செருக்கு மிக்கவர் மத்தியில் அதிக மணமுறிவுகள் ஏற்படுவதாக எனக்குப் படுகிறது.
பதினாறு பெற்ற குசேலர் வறுமையின்
எல்லையிலும் மகிழ்வாக வாழ்ந்ததாகவே கதைகள் கூறுகின்றன.
ஜாதகப் பொருத்தம்
இவை எதுவும் காரணங்கள் அல்ல.
சரியான ஜாதகப் பொருத்தம்
பார்க்காததே காரணம் என்று சொல்லும் அதி மேதாவிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0 comments:
Post a Comment