உங்கள் சொத்து எவ்வளவு ?

சிறு கதை 


இலங்கையின் நல்லூரில் பரசுராமன் எனும் பெரும் பணக்கார வியாபாரி  வாழ்ந்து வந்தார். அவருக்கு இருந்த பெரும் வசதியால் அவரது மகனையும் ,மகளையும் கொழும்பில்  உள்ள  மாணவ விடுதியில் தங்கவைத்து  சர்வதேச பாடசாலையிலேயே கல்விகற்க வைத்தார். அதன் பயனாக பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில் மேற்படிப்பினைத் தொடர்ந்து உயர் தொழிலுடன் அங்கேயே தமக்கென்று வாழ்வினையும் அமைத்துக் கொண்டனர்.

பரசுராமனிடம்   மாளிகை போன்ற  பெரும் வீடு  மட்டுமல்ல , ,பார்ப்போர் வியக்கும் வகையில் அதி நவீன விலையுயர்ந்த கார்களும் ஒன்றிற்கு மூன்று இருந்தன. அவற்றில் பரசுராமனும், மனைவியும் ஏறிச்செல்ல அக்கார்களை இயக்க ஒரு சாரதியும் இருந்தான். வீட்டின் வேலைகளுக்கும், வெளிவேலைகளுக்கும் வெவ்வேறு வேலைகாரரும் இருந்தனர்.

காலங்கள் கடந்தன. அன்று ஒருநாள் தனது அறையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவர் நெஞ்சில் தன் வாழ்க்கையினை  எண்ணிப் பார்த்தார்.. இத்தனை செல்வங்களும் குவிந்திருந்தும் பரசுராமன் மனதில் எதோ சில கருத்துக்கள் நெருட ஆரம்பித்தன.

அ]. குழந்தைகளைப் பெற்றும்  பிள்ளைகள் என்று அவர்களின் அன்பினை அனுபவிக்கவில்லை.

ஆ]. அரண்மணை போன்ற வீட்டில் இருந்தும் ஒரு அறையில் தானே வாழ்கிறோம்.அரண்மனையை அனுபவிக்கவில்லை.ஆனால் வீட்டு வேலைக்காரர் வீடு முழுக்க உலாவி அனுபவிக்கிறான்.

இ].வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள பூந்தோட்டங்களை வெளி வேலைக்காரன் அனுபவிக்கிறான். 

ஈ.ஒன்றுக்கு  மூன்று கார் இருந்தும் மூன்றையும் அனுபவிப்பவன் எங்கள் காரின் சாரதிதானே!

உ].ஊருக்கோ ,அல்லது உறவுகளுக்கோ நான் எதையும் செய்ததில்லை. அவர்கள் மலர்ச்சியில்  காணும்  இன்பத்தினைக் கூட நான் அனுபவித்ததில்லை.  

அப்போ நான் அனுபவித்தது இவ்வளவும் தானா? இந்த அறை மட்டும் தானா? அப்போ, இந்த அறை மட்டும் தானே எனது சொத்து. வாழ்க்கையில் நான் வேறு எதை அனுபவித்தேன் என வருந்தினார். துக்கம் தொண்டையை அடைக்க கண்ணை இறுக மூடிக்கொண்டார். மூடியவர் மூடியவர் தான்.பின்னர் மனைவியின் அலறல் சத்தமே அவ் அரண்மனையை ஆக்கிரமித்தத்து.

இப்படியேதான் இவ்வுலகில் சில மனிதர்கள் , தாங்கள் வாழ்வதாக எண்ணிக்கொண்டு , வாழாமலேயே மடிகின்றனர். இவர்கள் முடிவுடன் இவர்கள் பெயரும் உலகிலிருந்து மறைந்துவிடும்.
யாருக்கும்/தனக்கும்  பயனற்ற மனிதர்கள் பூமியில் வாழ்ந்தாலும் அவர்கள் நடைப்பிணங்களே.
 'வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்?' என்ற கவியரசின்  வரிகள் ஒன்றே போதுமே ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கும்.


💮செ.மனுவேந்தன் 


1 comment:

  1. மிகவும் அருமையான தகவல். மிகவும் கஷ்ரப்பட்டு உழைக்கும் பணத்தை கோடி கோடியாக கொடுத்து தாயகத்தில் வீடு. இங்கு வெளி நாட்டு பிராயா உரிமை. வீடு கட்டி முடிந்ததும் தாயகம் சென்று வீடு குடிபூரல் மீண்டும் ஒரு செலவு. ஒரு மாத விடுமுறை முடிய பாதுகாவலர் என்று ஒருவரிடம் வீட்டுச் சாவி கொடுக்கப் படும். அதன் பின் ஒரு வருடத்தில்.. வீட்டுச் சுவரில் ஒரு பிரச்சினை, எல்லைக் காரன் காணி பிடிக்கிறான்.... மதில் கட்ட வேண்டும். பூமரங்களுக்கு ஏதோ ஒன்று... இப்படி செலவுகள். வீடு கட்டிய பின் தாயகம் போக முடியவில்லை. காரணம் பணப் பிரச்சனை. காசில்லை தொலை பேசியில் யாராவது மாட்டினால் ஊரில் உள்ள வீட்டைப்பற்றி அறுவை.

    ReplyDelete