இன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்?


வருஷம் 2120⚡

நிலத்தை ஒன்றிய,  இந்து சமுத்திரக்  கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை  இல்லம்.  இங்கு குமரன், இளம் மனைவி வெள்ளி, மற்றும் ஆண்  பிள்ளை லோகா (12), பெண் பிள்ளை மாயா (10).  லோகாவிற்கு கிரேக்க ஆணின் முகச்சாயல், மாயாவிற்கு நேபாள பெண்ணின் முகச்சாயல்; மரபணு மாற்றச் செயல்பாடுமூலம் சினை சேர்க்கப்பட்டு உருவாக்கிப் பெறப்பட்டனர்.

இவர்களுடன் வேறு இருவர்; உள்வேலைகளுக்கு சுகா என்னும் றோபோ (humanized robot} இயந்திர மனிதன், வெளி வேலைகளுக்கு புறா என்னும் ட்றோன் (drone) பறகலம்.  இவர்களால் உலகின் எல்லா மொழிகளும் பேச, வாசிக்க, எழுத இயலும்; சகல தொழில்களும் செய்யவும் இயலும்.

சுகாவின் வேலை, வீடு பெருக்கல், கழுவுதல், துடைத்தல், சமைத்தல், பரிமாறுதல், மற்றும் நீர்த்தன்மையைப்  பார்த்து தோட்டங்களுக்கு நீர் விடுதல், களை பிடுங்குதல், கணக்கு வழக்கு, என்று  எல்லாமே அடங்கும். அத்தோடு மளிகைப் பொருளோ, வேறு எதுவோ முடிய முதலே வாங்குவதற்கு முன் ஆணை ஒழுங்கு செய்தல். மேலும், அப்பா, அம்மாவின் உடல் சௌக்கிய நிலைகளை தினசரியும், அறிகுறி காணும் சந்தர்ப்பத்திலும் ஸ்கான் மூலம் முழு மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கேற்ப அவசியமான மருந்துகளை வாங்குவித்தல், சமையல் முறைகளை மாற்றி அமைத்தல். இவற்றைவிட, வசதி குறைந்த அண்டை வீடுகளிலும் சிலமணிநேரம் சென்று உதவி செய்தலும் அடங்கும்.

புறாவின் வேலையோ அதிகமாக வெளியில் சென்று உடனடியாகத் தேவைப்படும் உணவுப் பொருட்கள் வாங்கிக்கொண்டு வருவது, உறவினர்கள், நண்பர்கள், வேலைத்தல  ஊழியர்கள், வர்த்தகர்கள் முதலியவர்களுக்கு  இடையில் பொதிகள், கோப்புகள, தட்டுமுட்டுச் சாமான்கள்  என்று தூக்கித் திரிவது. அதிகமான பொருட்கள், இருப்பறிந்து தானாகவே இணைய பறகலங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து விநியோகம் செய்து விடுவதால் புறாவுக்கு கொஞ்சம் வேலை குறைவுதான்.

இரவு உணவு அருந்தும்போது  லோகா, தான் அல்ட்ரா நெற்றில் பார்த்து அறிந்த சில விடயங்களைப் பற்றி அப்பாவிடம் வினவினான்.

''அப்பா, உங்கள் மூதாதையர்களான  2020 ஆண்டளவில் இருந்த மக்கள் எல்லோரும் சுத்த மக்குகளாய் இருந்திருப்பார்கள்போல இருக்கிறதே?"

குமரன் வியப்புடன், " என்ன விடயத்தை வைத்து இப்படிச் சொல்கிறாய்?" என்கிறார்.

" அப்போதெல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய தரையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களில் மணித்தியாலக்கணக்கில் சென்றார்களாம். அதுவும் ஒரு மனிதன் இருந்து, ஒரு ஸ்டேரிங் என்று ஒன்றை அப்படியும், இப்படியும் திருப்பி ஓட்டி, அடிபடாமல் செலுத்தவேண்டி இருந்ததாம்"

குமரன், " ஆமாம் அப்படித்தான் இருந்தது. இப்படிப் போகும்போது பல மரணங்களும் நிகழ்ந்துகொண்டு இருக்கும்" என்றார்.

" அப்படி என்றால் தானாகவே இயங்கவைக்கும் அறிவைப் பெறவில்லையா அவர்கள்?"


" அப்படி ஒரு அறிவு ஆரம்ப நிலையில்தான் இருந்தது. அந்த வாகனங்கள் செல்வதற்காக, பெரும் பொருட் செலவில் வீதிகள், பெரும் சாலைகள், தண்டவாளங்கள் என்று கட்டியும், பராமரித்தும் கொண்டிருந்தார்கள். எரிபொருட்களை எரித்து புகை, புகையாய் எங்கும் தள்ளிக்கொண்டு ஓட்டித் திரிந்தார்கள்"

மாயா, சிரிப்பை அடக்கியவாறு, " ஒரு செலவும்  இல்லாமல் பாவிக்கக்கூடிய இந்த அகண்ட  வான் வழிப் பாதையை  விட்டு ஏன்தான் இவ்வளவு முட்டாள்தனமாக இருந்தார்களோ தெரியாது" 

லோகா, "அப்படி என்றால் அந்த பெரும் சாலைகள் எல்லாம் இப்போது எங்கே அப்பா, காணோமே?"  என்றாள் .

"அவை எல்லாம் இப்போது தேவை இல்லை என்றபடியால், பூங்காக்களாகவும், பொழுது போக்கும் ஓய்வு நிலையங்களாகவும் மாற்றப்பட்டு இருக்கின்றன"


மாயாவின் அடுத்த சந்தேகம், "அந்தக் காலத்திலே எல்லோரும் கையில் ஒரு பெரிய அளவில் மொபைல் போன் என்று ஒன்று கொண்டு திரிவார்களாமே?"

"ஆமாம், அதன் மூலம்தான் தொலைத் தொடர்புகள் வைத்துக் கொண்டார்கள். இப்பொழுது போல பிள்ளை பிறந்ததுமே அடையாள, தகவல், பரிமாற்ற நுண் தகடுகளை உடம்பில் பதித்துவிடும் பழக்கம் அப்போது இருக்கவில்லை. எவரும் அடையாளம் தெரியாமலேயே, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாமலே  பிறந்து, வாழ்ந்து, இறந்துவிட்டுப் போகலாம்"

"மிருகங்களை போல" சிரித்தான் லோகா.

"அத்தோடு, நிகழ்ச்சிகளைக் கண்டு கழிக்கவோ, மற்றயவர்களுடன் உரையாடவோ அதிக பணச் செலவில், பெரிய அளவுகளில், 'தொலைக்காட்சிப் பெட்டிகள்' என்று ஒன்று தேவைப்பட்டன. இவை ஒவ்வொரு அறையையும் நிறைத்துக்  கொண்டிருந்தன"

மாயா, " ஏன் அவர்களின் அறைகளில் சுவரோ, வெறும் வெளிகளோ இருக்கவில்லையாமோ, உருவங்களை பார்க்க?"  கல, கல என்று சிரித்தாள்.

அதற்குள், றோபோ சுகா இடை மறித்து : சாப்பாடு முடிக்க வேண்டிய நேரம். கதையைக்  குறைத்து அடுத்த அலுவலுக்கு  தயார் ஆகுங்கள்" என்று அறிவு கூறியது.

குமரன் 'சரி, சரி இன்னும் பத்து நிமிடம்; மாற்றி அமை"

"சரி" என்றது சுகா.

இந்த நேரம், பறகலம் புறா வெளியில் இருந்து வந்து ஒரு பையை சுபாவிடம் கொடுக்க,

"இரண்டு வினாடிகள் தாமதம்" சுகா கூறியது.

"சரியான வாகன நெருக்கடியாய் இருக்குமோ?" புறாவின் பதில்.

"இல்லையே, நீ போகும் போது 648, வரும்போது 879 பறகலங்கள், வான் ஷூட்டர்கள், வான் ஸ்கூட்டர்கள் மட்டும்தானே? காற்றின் வேகம்தான் 0.1 கி.மீ. கூடுதலாக வீசியது. அதுதான் காரணம்"

இப்போது அப்பா, "சுகா, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கினாயோ?"

"இல்லை,  உங்கள் ஸுகர் லெவல் 0.05 ஆல் கூடி உள்ளது. அதற்கு மருந்து வாங்கத்தான் புறா வெளியில் சென்றது, நாளைக்குப் பார்க்கலாம்"

இப்போது லோகா, " இங்கு இடைக்கிடை 'லாம்ப் போஸ்ட்' என்று சில மின் கம்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறதே, அது என்னப்பா?"

"அதுவா, அது பெரிய சிரிப்புக் கதை"

"என்னப்பா, என்னப்பா?"

இப்போது  உள்ளது போல, அண்டத்தில் இருந்து வரும் ஓம்  அலைகளைக்கொண்டு (nanocity) நன்சாரம்  உந்து சக்தியை, இலகுவாகவும், இலவசமாகவும் ஓம் தகடுகளுக்கூடாக பெறும் அறிவு அன்று இருக்கவில்லை"

"அப்போ, என்ன மாதிரி வாழ்ந்தார்கள்?"

"எலக்ட்ரிசிட்டி என்னும் ஒரு மின் சக்தியை பலவிதமான, சிக்கலான பெரும் பணச் செலவுடன், பல முறைகளினால் தயாரித்து,அதை விநியோகம் செய்யவென்று, உலகமெல்லாம், வீதிகள்  எல்லாம், வீடுகளெல்லாம், மின் மாற்றிகள், மின் கம்பிகள், பின் கம்பங்கள் என்று அமைத்துக் கஷ்டப்படவேண்டி இருந்தது"

"அத்தோடு செய் நிலாக்கள் ஒன்றும் வான் வெளியில் நிறுத்தப்பட்டது கிடையாது. வீதிக்கு வெளிச்சம் தர இந்த மின் கம்பங்கள் தேவைப்பட்டன"

" சரியான பாவங்கள், இல்லையே அப்பா?"

" பாவங்கள்தான். மேலும் கவலையான விடயம் என்னவென்றால், அந்த மின்சாரத்தை தொட்ட  எவரும் உடனே இறந்துவிடுவர்"

", அப்படியா?" பிள்ளைகள் இருவரும் வாயைப் பிளந்தார்கள்.

"அந்தக் காலத்தில் சகல வீட்டு வேலைகள் எல்லாம் மனிதர்களே செய்யவேண்டி இருந்தது. அவர்கள் நிறையவே சத்தற்ற உணவுகளை சாப்பிடுவார்கள், உள்ள குப்பைகளை எல்லாம் மணித்தியாலாக் கணக்கில்  சமைக்க வேண்டி இருந்தது", வெள்ளி பழங்கால குடும்பப் பெண்களின் கஷ்டங்களை படித்து அறிந்திருப்பதால் அதைத் தெரியப்படுத்தினார்.

"அது மட்டும் இல்லை; குடியிருப்புகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற கட்டிட வேலைகள், வீதி வேலைகள் என்று எல்லாமே மனிதன்தான் தன் கைகளினால் மழை, வெய்யில், குளிர் என்று பாராமல் செய்யவேண்டி இருந்தது. இப்போது ஒரு ரோபோ செய்யும் வேலையை ஆயிரக்கணக்கானவர்கள், மிகவும் கஷடங்களுக்கு மத்தியில், பல குறைபாடுகளுடன் செய்தார்கள்"

" வைத்திய சாலைகள்?" மாயாவின்  சந்தேகம்.

"ஆமாம், முன்பெல்லாம் மக்களுக்கு நோய்  அடிக்கடி வரும். வந்தால் அதை பார்ப்பதற்கென்று விசேடமாக நீண்ட காலம் படித்துப் பட்டம் பெற்ற  வைத்தியர்கள், தாதிமார்கள் என்று இருப்பார்கள். அவர்கள் நோயாளிகளை வைத்தியசாலையில் படுக்கவைத்து, மருந்து கொடுத்து, சுகப்படுத்தி அல்லது இறக்கச் செய்து அனுப்பிவைப்பார்கள்"

"நம்பவே முடியவில்லை. எவ்வளவு பின்தங்கிய மக்களாய் இருந்திருக்கிறார்கள்!" குமரன்.

"இதற்குக் கட்டுக்கட்டாக பணம் எடுத்துக் கொண்டுபோய் செலவு செய்யவார்கள்"

"பணம்? கட்டு?" மாயாவின் சந்தேகம்.

"ஆமாம், அப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும் பணத்தை வெவ்வேறு பெறுமதிகொண்ட கடதாசி நோட்டுகள் என்று அச்சடித்து, அதை மக்கள் கையில் கட்டுக் கட்டாக  கொண்டுதிரிந்து செலவு செய்வார்கள்"

"நம்பவே முடியவில்லை, இப்போது போல நம் நெற்றியில் உள்ள அட்டை என்று ஒன்று இல்லையோ அப்பா"

"இருந்தது, கையில்  அதை எடுத்துக்கொண்டுபோய், இலக்கம் எல்லாம் குத்திக் பாவிக்க வேண்டும்"

" பழம்  சாப்பிடும் நேரம்" சுகா.

"சரி, நம்ம வைத்திய நண்பனே, கொண்டுவா"

" அம்மாவின் மூளை நரம்பொன்றில் இரத்த ஓட்டம் 10 வீதம் குறைவாய் செல்வதால், இரவு படுக்கும்போது இரண்டு கால்களையும் 200 மி.மீ. உயரத்தில் வைத்துப் படுக்கவேண்டும். இரவு முழுவதும் அதை நான் கவனித்துக் கொள்ள்ளுவேன்"

 "சாப்பாடு முடிந்ததும் 30 நிமிடங்கள் கனடாவில் இருக்கும் சகோதரர் குடும்பத்துடன் கை கொடுத்துக், கட்டிப்பிடித்து அளவளாவுவோம். பின்னர் 30 நிமிடங்கள் எகிப்திய பிரமிட்டுகளைப் பார்க்கப் போவோம்"

"அதன் பின்னர் தூங்கும் நேரம். தூங்காவிடடால் விடவா போகின்றாய்? வெள்ளி கோபப்பட்டார்.

 பிள்ளைகள், பழைய மனிதர்கள் பட்ட,  நினைத்தே பார்க்க இயலாத அளவு கஷ்டங்களை எண்ணி பரிதாபப் பட்டுக்கொண்டிருக்க, சுகா திரங்கு அறையில் முப்பரிமாண மாய மெய்மை காட்சிக் கூடத்தை தயார் செய்யச் சென்றது.

✍எதிர்பார்ப்புடன் செல்வதுரை சந்திரகாசன் 

4 comments:

  1. மிகவும் அருமையான கற்பனை. 2020 ஆம் ஆண்டு மக்கள் எல்லோரும் சுத்த மக்குகளாய் இருந்திருப்பார்கள் போல?

    சரியான பாவங்கள் இல்லையா அப்பா?

    உள்ள குப்பைகளை எல்லாம் மணித்தியாலக் கணக்கில் சமைக்க வேண்டி இருந்தது!
    வைத்தியசாலைகளா?

    பாவம்? காட்டா? எங்களைப் போல் நெற்றியில் அட்டை....?

    🌹முப்பரிமான மாய மெய்வை காட்சிக் கூடம்.
    அருமையான நகைச்சுவை ததும்பும் பதிவு.
    எங்கள் வீட்டில் எனது பிள்ளைகள் கூடத்தில் ஒன்று கூடி 10... 15...வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து சொல்லி சொல்லி சிரிப்பார்கள். அது போல இது என்று சொல்லி விட முடியாது.

    ReplyDelete
  2. நடக்கக்கூடிய விடயங்கள்தான்; அற்புதம், அருமையான எதிர்பார்ப்பு.
    இதெல்லாம் என்னய்யா ஒரு றூம் போட்டு யோசிப்பீங்களா அல்லது பல றூமுகள் தேவைப்படுமா?

    ReplyDelete
  3. MANUVENTHAN SELLATHURAITuesday, June 30, 2020

    தொழில்நுட்ப மாற்றத்தின் அசுரவேகம் இவை எல்லாவ்ற்றையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுண்டு, சிலவேளை இன்னும் அதிகம் நடக்கலாம்

    ReplyDelete