வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? [பகுதி 02]


[Does history repeat itself? Do we follow the lessons of history?]



இன்று உலகை பல நெருக்கடிக்குள் உள்ளாக்கி இருப்பது கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நோய்த்தொற்று [Infection] ஆகும். பொதுவாக ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது [caused by infectious agents (pathogens) including: Viruses, Bacteria, Fungi etc]. தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் [touching / contact ] பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். கொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.  "கொரோனாவைரசு" என்ற பெயர் இலத்தீன் corona, என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள் ஆகும். இந்த குடும்பத்தின் பிற வைரசுகள் 2003 இல் சார்ஸ் [SARS-CoV], 2012 இல்
மேர்ஸ் [MERS-CoV, ] போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தின. இதே வரிசையில் இன்று புது கொரோனாவைரசு [novel coronavirus] தொற்றுநோயாக, ஏழாவது தலைமுறையாக, கோவிட்-19, சீனாவின் ஊகான் [Wuhan] நகரத்தில் தோன்றி, உலகம் முழுவதும் பரவுகிறது. வைரசு (virus) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது கண்ணுக்கு தெரியா மிக மிக சிறியது ஆகும். பாக்டீரியாவை விட பொதுவாக இருபது மடங்கு அல்லது அதற்கும் மேல் சிறியது எனலாம். இது எலக்ட்ரான் நுண்ணோக்கியில் [Electron Microscope] மட்டுமே காணவல்லன. மேலும் இதில் இனப்பெருக்கம் செய்வதற்கான நுண்ணுறுப்பு கட்டமைப்பு இல்லாததாலும், அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாதவை என்பதாலும், இதை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது புரத உறையால் சூழப்பட்ட  டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. அமிலங்களால் [contain a small piece of genetic code : DNA , RNA which may be single stranded (ss) or double stranded (ds)] உருவாக்கப்பட்டவை. மேலும் தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா [அல்லது தொன்மை பாக்டீரியாக்கள்/ Archaeans] போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன. இவை செல்லுக்குள்ளே வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் [parasite] என்று கூறலாம். இது  இரண்டு முக்கிய பாகங்களை மட்டுமே கொண்டுள்ளன. ஒன்று,  கேப்சிட் [capsid] எனப்படும் வெளியேக் காணப்படும் புரத உறை [coat of protein and fat]. மற்றது, உள்ளே உள்ள நீயூக்ளிக் அமிலம் [nucleic acid] ஆகும். புரத உறையின் பணி உள்ளே உள்ள நியூக்ளிக் அமிலத்தைப் பாதுகாப்பது ஆகும்.

ஒரு தொற்று நோய்க்கு ஒருவர் உள்ளாகும் பொழுது, நோய்க்காரணி (Pathogen) அல்லது தொற்றுநோய்க்காரணி அல்லது கிருமி அவரின் உள்ளே சென்று, அங்கே வாழ்ந்து, அவரின் சாதாரண இயக்கத்தை பாதிக்கிறது, அல்லது மாற்றுகிறது, அல்லது உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. அப்பொழுது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (immune system), மற்றும் உடலிற்கு ஊறுவிளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு எதிராக தொழிற்படவல்ல, சாதாரணமாக உடலில் காணப்படும் தாவரவளம் (normal flora) போன்றன பல நோய்க்காரணிகளுக்கு எதிராக இயற்கையாகவே இயங்கி பாதுகாப்பை ஏற்படுத்துகின்றன. ஆனாலும், இப்பாதுகாப்பையும் மீறி, வீரியமுள்ள நோய்க்காரணிகள் நோய்களை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கையில், நோய் உண்டாதல் தவிர்க்க முடியாமல் போகின்றது. உதாரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையும், உடலுக்கு உபயோகமான பாக்டீரியாக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது, இந்த நோய்க்காரணிகளுக்கு அந்நிலமை சாதகமாக மாறி,  அவை தாம் தாக்கிய அந்த நபரின் அல்லது உயிரினத்தின் [host]  உட்சென்று, பல்கிப் பெருகி, நோயை ஏற்படுத்த முடிகின்றது. அதாவது, தாம் உட்ச்சென்ற  உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன [invade a ‘host’ cell and take over its machinery to make more virus particles, basically reprogramming it [‘host’ cell] to become a virus factory].

வைரஸ்கள் காற்றில் மிதக்கக் கூடியவை, மேலும் நீரில், எமது தோல் மேற்பரப்பில் [can float through the air, survive in water, or even on the surface of your skin.] வாழக்கூடியவை. எனவே வைரஸ்கள் கைகுலுக்கல் மூலம் , உணவை தொடுவது மூலம், நீரின் ஊடாக, அல்லது ஒருவர் இருமும் பொழுது அல்லது ஒருவர் தும்மும் பொழுது காற்றினூடாக [Viruses can be passed from one person to another by shaking hands, touching food, through water, or through the air when a person coughs or sneezes] பரவக்கூடியவை. எனவே இன்னொருவருக்கு அவரின் சுவாசத்தின் மூலம் (வைரஸ் தாகத்திற்கு உள்ளான யாராவது, அவர் அருகில் இருமிய பிறகு அல்லது தும்மிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தை அவர் தொட்டுவிட்டு பிறகு அவர் தன் முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் அவரின் உடலில் நுழைகிறது எனலாம். தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவ்வற்றையும் பாதிக்கும். உதாரணமாக கொரோனா வைரஸை ஒரு செய்தியை அல்லது ஒரு கட்டளையை  தனக்குள் வைத்து அடைக்கப்பட்ட ஒரு பாட்டில் [bottle] மாதிரி கற்பனை செய்யலாம். இங்கு அந்த செய்தி டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.ஆகும். அவ்வாறே அந்த பாட்டில் புரத உறை ஆகும். இது மூச்சுக்குழலில் உள்ள ஒரு ஆரோக்கியமான செல்லின் [a healthy cell] புறப்பரப்பை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கி அந்த செல்லினுள் நுழைகிறது. அதன் பிறகு தன்னுள் இருக்கும் செய்தியை [டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. மரபணுவை] செல்லினுள் வெளிவிடுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த செல்லானது, அந்த செய்தியை வாசித்து, தன் இயல்பான தொழிற் பாடுகளை நிறுத்தி, அந்த செய்தியின் கட்டளைப்படி வைரஸை உற்பத்திசெய்ய அல்லது பல்கிப் பெருக்க தொடங்குகிறது. பொதுவாக ஒரு செல் லட்சக்கணக்கான வைரஸை உற்பத்திசெய்கின்றன. இறுதியில் வலுவிழந்து இறக்கின்றன [the intruders [virus] order the inflamed cell, "'Don't do your usual job. Your job is now to help me multiply.'" Cells do this and eventually die]. அந்த உற்பத்தியான ஒவ்வொரு வைரஸ்களும் அடுத்த அடுத்த செல்களை தாக்கி தன் செயற்பாட்டை தொடர்கின்றன. அந்த அந்த செல்களும் தொடர்ந்து இறந்து, அந்த மனிதனுக்கு உபாதை கொடுத்து, மெல்ல மெல்ல அவனை செயல் இழக்க செய்கிறது.   

பலதரப் பட்ட வெவ்வேறு வைரஸ்களால், பலதரப்பட்ட நோய்கள் பரவுகின்றன. உதாரணமாக, குளிர் காய்ச்சல் / சளிக்காய்ச்சல் [influenza], சாதாரண சளி [common cold], தட்டம்மை அல்லது சின்னமுத்து [measles], அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி [mumps], மஞ்சள் காய்ச்சல் / குருதிப்போக்கு காய்ச்சல் [yellow fever], ஹெபடைடிஸ், ஈரல் அழற்சிபறை [hepatitis] போன்றவையாகும். மேலும் அண்மைக்கால சார்ஸ் [SARS], கோவிட் 19 [corona / covid  19] போன்றவையும் இதில் அடங்கும். இவை தவிர புற்று நோய் [Cancer], மஞ்சள் காமாலை [jaundice], அம்மை நோய் [chicken pox], இபோலா தீநுண்ம நோய் [Ebola virus disease], எயிட்சு /எச்.ஐ.வி [AIDS (HIV)], பறவை காய்ச்சல் [avian influenza] போன்றவற்றையும் நாம் உதாரணமாக கூறலாம்.

பாரசீகத்தைச் [பாரசீகம் என்பது இன்றைய ஈரான் நாட்டை மையமாக கொண்ட ஒரு பண்டைய நாடு] சேர்ந்த, இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) [Abu Ali al-Hussain Ibn Abdallah Ibn Sina] பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர்  தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தவர் ஆவார். இவர் அந்த காலமே, சில நோய்களின் தொற்று இயல்புகள் [contagious natures] பற்றியும் மற்றும் எப்படி நீர், மண் போன்றவை நோய் பரவ காரணியாக இருக்கின்றன என்பதை பற்றியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே அந்த காரணிகளை அகற்றினால் தொற்று நோய் நீக்கப்படும் என்ற தகவலை அதன் மூலம் எமக்கு தந்துள்ளார்.

சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் உங்களை தாக்குமிடத்தில், ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது. நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே இதை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி, இபின் சீனா விளக்கியவாறு தொற்றுக்கான காரணிகளை இயன்ற அளவு அகற்றுவதேயாகும். ஏன் என்றால் இதற்க்கு இப்போதைக்கு பாக்டீரியா போல் [antibiotic] வைரஸ் தடுப்பு [Antiviral drug ] மருந்து கிடையாது.

கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட அனைத்து சுவாச நோய்களும் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. அதே நேரத்தில், மோசமான நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை, அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் எளிதில் தாக்கும். சீனாவில், பெண்களை விட அதிகமான ஆண்கள் இறந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் பொதுவாக புகைப்பிடிப்பவர்கள், எனவே பலவீனமான நுரையீரல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் உண்மையில்  தீவிர அச்சுறுத்தல் தானா? காய்ச்சல் அதிகமான மக்களைக் கொல்லவில்லையா? என்ற கேள்வியும் எம் மனதில் தோன்றுகின்றன. காய்ச்சலை பெரும்பாலான மக்கள் “இயல்பானதாக” கருதுகிறார்கள். இருப்பினும் அது “பாதிப்பில்லாதது” என்று கருதாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 03 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் → Theebam.com: வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா? [பகுதி 01]











1 comments:

  1. கொரோனா பற்றிய நிறைய விளக்கங்கள் பதிவுகள் வசித்து களைத்து விட்ட எமக்கு தாமதமாக வந்தாலும் தரமாக அமைந்துள்ள படைப்பு. கொரோனா தொடங்கி சில காலங்களிலேயே எனக்குள் தோன்றிய ஒரு உணர்வு, இது தீடீரென உருவாக்கி இருக்க முடியாது. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியும், கட்டவிழ்த்து விடப்பட்டது போன்ற, கை மீறியது போன்ற நிகழ்வாகக் தான் இருக்கும் என்று. கொரோனாவின் ஓட்டம் தொடங்கிய வேகத்தின் அளவின் படி அது ஓடித் தான் நிற்கும். அதை எல்லை மீறி விட்டது என்று. மனிதனின் கவனக் குறைவுகளின் நீண்ட தாக்குதல் தான் கொரோனா. கட்டுரையில் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளமை அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete