இன்று கோவிட் 19
[ coronavirus disease 2019 / COVID-19] என்று அழைக்கப்படும் ஒரு புது நோய் திடீரென சீனாவில் தோன்றி
உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கி விட்டது. என்றாலும் இந்த புதிய
சுவாச தொற்றின் [respiratory infection] அறிகுறிகள் தம் நாட்டில் பரவத் தொடங்கியதை உலக சுகாதார
அமைப்பிற்கு [World Health Organization] டிசம்பர் 31, 2019 அளவில் தான், கொஞ்சம் தாமதமாக சீனா தெரிவித்து உஷார்நிலைப் படுத்தியது.
விஞ்ஞானிகள் அதை முழுமையாக விளங்கி, அதற்கு ஒரு மருந்தை கண்டு பிடிக்கும் அறிவியலை விட அது மிக
வேகமாக எங்கும் பரவ அல்லது தொற்ற தொடங்கி விட்டது. இதனால் தான் உலக சுகாதார நிறுவனம்
இதை ஒரு பெரும் பரவல் தொற்று நோய் என 11 மார்ச் 2020 அறிவித்துள்ளது. உலகம்பரவுநோய் (Pandemic)
என்பது கொள்ளைநோய் ஒன்று தொற்றுநோயாக இருந்து,
அந்த நோய்த் தொற்று விரைவாகப் பரவுவதால்,
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ,
அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி,
பெரிய அளவில் மக்களைத் தாக்கும் நோய் என்று சுருக்கமாக
கூறலாம். இந்த கட்டுரையை 31 மார்ச் 2020 எழுதும் பொழுது, இது முதல் முதல் சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் [ Wuhan,
Hubei, China,] 2019 ஆம் ஆண்டின்
இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகம் முழுவதும் 858,127 உறுதிப்பட்ட நோயாளர்களுக்கு தொற்றி இருப்பதுடன் 42,140 உயிர்களையும் காவுகொண்டுள்ளது. முக்கியமாக இத்தாலியில் 12,428 பேரையும், ஸ்பெயினில் 8,464 பேரையும், அமெரிக்காவில் 3,883 பேரையும், பிரான்சில் 3,523 பேரையும், சீனாவில் 3,305 பேரையும், ஈரானில் 2,898 பேரையும், ஐக்கிய இராச்சியத்தில் 1,789 பேரையும், நெதர்லாந்தில் 1,039 பேரையும், ஜெர்மனியில் 775 பேரையும், பெல்ஜியத்தில் 705 பேரையும், சுவிட்சர்லாந்தில் 433 பேரையும் காவு கொண்டுள்ளது. ஆனால் இவ்வாறான பெரும் தொற்று
நோய்கள் இது முதல் முறை அல்ல. இவையை ஒரு முறைக்கு மேல் எம் வரலாறில் கண்டுள்ளோம்.
உதாரணமாக, கிழக்கு
ரோமானிய பேரரசில் [Eastern Roman Empire] கி.பி. 541 - 542 வரை தோன்றிய ஐஸ்டினியனின் பிளேக் நோயை [The
Plague of Justinian] கூறலாம்.
விலங்குகளில் [எலி] இருந்து பாக்டீரியாவால் பரவும் இந்த நோயால் ஒரே ஆண்டில் சுமார்
3 கோடி [30 மில்லியன்] மக்கள் உயிரிழந்துள்ளனர். என்றாலும் மொத்தமாக
இருநூறு ஆண்டுகளில், அந்த நோயின் மீள்வருகைகளால் மேலும் பல மில்லியன் மக்கள்
இறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், பிளேக் நோயை அன்று மருத்துவர்கள் எவ்வாறு கையாண்டார்கள்
என்ற விவரம் எமக்கு தெரியவில்லை. அது மட்டும் அல்ல, ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடையவும் ஒரு காரணியாக
இருந்ததாகவும் கருதப்படுகிறது. இதை தொடர்ந்து மீண்டும் எலிகள் மற்றும் பிளேஸ் என்ற
ஒட்டுண்ணிகளால் [Fleas are tiny bugs] பரவும் தொற்று நோயான புபோனிக் பிளேக் [Bubonic
plague] 14 ஆம் நூற்றாண்டில் [14th
century / 1347 - 1351], ஐரோப்பா,
ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களை அல்லது அதற்கும் மேல் கொன்றது. இதில்
இருந்து மீள 200
ஆண்டுகளுக்கு மேல் சென்றது. மொத்த இழப்பும் மேலும் பல பல மில்லியன்களால் கூடியது.
இதை கறுப்பு மரணம் [Black Death] என்று வரலாறு கூறும். அதே போல,
வாந்திபேதி அல்லது காலரா தொற்று [Cholera],
18 ஆம் நூற்றாண்டில்,
ஒரு வித பாக்டீரியாவால் முதன் முதலாக இந்தியாவில் பரவி,
பின் முழு ஆசியாவிலும் மற்றும் ஐரோப்பா,
ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. உலகம்
முழுவதும் சுமார் 10 லட்சம் [ஒரு மில்லியன்] மக்கள் காலராவுக்கு இறந்துள்ளனர்
என மதிப்பிடப் பட்டுள்ளது. வைரஸ்களால் ஏற்படும் சளி, காய்ச்சலை உண்டாக்கும், இன்புளுவென்சா [Influenza] என்ற தொற்று நோய் பெரும் தொற்று நோயாக [flu
pandemic (Spanish flu / ஸ்பானிஷ்
காய்ச்சல்) / type A influenza, H1N1 subtype],1918 - 1920 இல் பரவி ஏறத்தாழ 40 மில்லியனில் இருந்து 50 மில்லியன் [estimates range from 40
million to 50 million ] மக்களை
கொன்றுள்ளது. அப்பொழுது நுண்ணுயிர் கொல்லிகள் (antibiotics) ஏதும் கண்டுபிடித்திராத சமயம் ஆகும். அத்துடன் தீவிர
உடல்நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவ உபகரணங்களும்
இருக்கவில்லை. என்றாலும் 2,400 ஆண்டுகளுக்கு முன் ஹிப்போகிரட்டீஸ் [ Hippocrates]
இன்புளுவென்சா அறிகுறிகளைப் பற்றி கூறியுள்ளார் என்பது
குறிப்பிடத் தக்கது. உலகப்போரின் போது
தணிக்கை செய்யப்படாத ஸ்பெயின் பத்திரிகைகள், போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும் பரவிய இந்த நோயை
பற்றிய விவரங்களை வெளியிட்டதால் 'ஸ்பானிஷ் ப்ளூ' என பெயரிடப் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும்,
இந்த வைரஸ் எங்கிருந்து, எப்போது பரவத்தொடங்கியது என இப்போது வரை கண்டறியப்படவில்லை.
தொற்று நோய் என்ற
வார்த்தைக்கு அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அர்த்தத்தை வழங்கி
வருகின்றனர், ஆனால்
அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால், ஒரு புவியியல் பிராந்தியத்தில் வழக்கத்தை விட மிக அதிகமான
பாதிப்பை உண்டாக்கும் விரைந்து பரவக்கூடிய ஒரு நோய் தொற்று நோய் என்பதாகும். காலரா,
பிளேக், பெரியம்மை [Smallpox], இன்ப்ளூயன்சா போன்றவை மனித வரலாற்றில் அதிகமான உயிரைக்
குடித்த நோய்களாக அறியப்படுகின்றன. இந்த நோய்களின் தாக்கம் பல நாட்டு எல்லைகளைக்
கடந்து ஒரு தொற்று நோயாக பரவி இருந்தன. சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில்
கண்டறியப்பட்ட ஒரு கிருமி எபோலா வைரஸ் [Ebola virus disease]. இது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கி உள்ளது. அதே
போல, 1920 ஆண்டு
அளவில் ஆப்பிரிக்காவில் தோன்றிய எயிட்சு /எச்.ஐ.வி [ AIDS
(HIV)], என்ற வைரஸ் நோய்,
1980 அளவில் உலகம் முழுவதும் பரவத்
தொடங்கி, மில்லியன்
கணக்கான மக்களின் உயிரை காவு கொண்டுள்ளது. நாம் இந்த நோய்களைப் பற்றி ஓரளவு இன்று
விளக்கமாக, அறிவுபூர்வமாக
அறிந்து இருந்தாலும், இவ்வாறான தொற்று நோய்கள்
இன்னும் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. இது எம்மை
ஆச்சரியப்படுத்துகிறது, ஏன் என்றால் இந்த முன்னைய உலகளாவிய தொற்று நோய்களில்
இருந்து ஏன் நாம் பாடம் இன்னும் கற்கவில்லை என்று ? இவைக்கு முக்கிய காரணம் இன்னும் சுகாதாரமற்ற நிலைமைகள்,
கலாச்சார தவறான புரிதல்கள், மற்றும் கல்வி பற்றாக்குறைகள் [unsanitary
conditions, cultural misunderstandings and a lack of education] மக்களிடம் காணப் படுவதே ஆகும். நாம் இங்கு மக்களை மட்டும் குறை கூற முடியாது,
மக்களை வழிநடத்துபவர்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்
பாடும் கூட காரணமாக அமைகின்றன. உதாரணமாக,
வெவ்வேறு நூற்றாண்டுகளாக இருந்தாலும் அப்போது பரவிய 1918 ஆண்டு இன்புளுவென்சா [influenza pandemic ] மற்றும் 2002–2003 ஆண்டு சார்ஸ் [SARS outbreak ] போன்றவை எமக்கு எடுத்து கூறுவது நாம் இந்த தொற்றுக்களை
கட்டுப் படுத்துவதற்கு, நெருக்கமாக இல்லாமல் சில இடைவெளியை ஒருவருக்கும்
ஒருவருக்கும் இடையில் கடைப்பிடிப்பதும் [சமூக இடைவெளி],
செய்திகளை அல்லது கட்டளைகளை சரியாக தொடர்பு செய்வதும்
மற்றும் சரியான சர்வதேச ஒத்துழைப்பும் [social distancing
measures, communication and international cooperation ] அவசியம் என்பது ஆகும். அன்று மக்கள் கூட்டமாக இருக்கும்
இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், திரையரங்குகள், விழாக்கள், பள்ளிகள், கூட்டமாக இருக்கும் ரயில் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க
வேண்டும் என்றும், காற்றோட்டமாக இருக்கும் இடங்களில் தூங்குவது நல்லது என்றும்
கூறப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தை ஒப்பிடும் போது தற்போது மருத்துவத்தில் பல
மடங்கு முன்னேறி இருந்தாலும், இதுவரை மருந்து கண்டறியப்படாத கொரோனா வைரசிற்கு மக்கள்
தங்களை தற்காத்து கொள்ள, வரலாறு எமக்கு கற்பித்த இந்த பாடங்களை அல்லது அறிவுரைகளை, கோவிட் 19 இன் வீரியத்தை அல்லது பரவலை குறைக்க,
அவைகள் தாமதம் இன்றி எல்லா நாடும் கடைபிடிக்கப் பட்டிருக்க
வேண்டும். ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? இப்ப நடப்பது என்ன ? இவைதான் நாம் அலசி ஆராய வேண்டிய உண்மையாகும் !
வைரஸ் என்றால் என்ன ?,
அது எப்படி மக்களை பாதிக்கிறது ?
எப்படி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றுகிறது?
போன்ற விளக்கங்கள் கட்டாயம் சாதாரண மக்களுக்கும் புரியும்
படியாக இருக்க வேண்டும். அப்பதான் அவர்கள்
அதை தவிர்க்கும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பார்கள்.
சிலவேளை அவர்களின் பிழையான நம்பிக்கைகள், பிழையான தகவல்கள் அல்லது விளக்கங்கள் இவைக்கு இடையூறாக
அமையும். அது மட்டும் அல்ல, அவர்களின்பழக்க வழக்கங்கள் மற்றும் வசதிகளும் கவனத்தில்
எடுக்க வேண்டும். உதாரணமாக தடுப்பு மருந்தேற்றம் [vaccination] உடலில்
நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயை
தடுப்பதற்காக பொதுவாக பாவிக்கப் படுகிறது. என்றாலும் இத்தாலியில் பொய் தகவல்களை பலர் நம்பி,
தடுப்பு மருந்தேற்றத்திற்கு எதிராக செய்த பரப்புரையால்,
அங்கு அது வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக 2017 ஆண்டு ருமேனியா
மற்றும் இத்தாலி [Romania and Italy] நாட்டில் தட்டம்மை அல்லது சின்னமுத்து [measles]
அதிகரித்தது குறிப்பிடத் தக்கது. அதே போல ஈரானில் மது
குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் மார்ச் 2020 இல் பலியானது
மேலும் ஒரு உதாரணம் ஆகும். பழக்கவழக்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதற்கு
மிக அண்மையில், மார்ச் 25,
2020 இல் கொரோனா வைரஸ் உறுதி
படுத்தப்பட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
[Charles, Prince of Wales] ஒரு நல்ல உதாரணம். இவர் அண்மையில் கட்டிப்பிடிப்பது,
கட்டிதழுவுவது போன்ற பழக்கங்களை கை விட்டு வணக்கம் சொல்ல
ஆரம்பித்தார். என்றாலும் அதற்க்கு முன்பே பழைய பழக்கத்தின் காரணமாக நோய்
தொற்றிவிட்டது.
"யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம்
நம்பிக்கையிலே"
என்ற பழமொழியை
நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே
இயங்குகிறது? நம்பிக்கைகள்
தான் மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?
இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும்,மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே
நம்பிக்கைகள் ஆகும்.மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை
ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது [cats
were witches], அதனால் பூனைகளை
அழித்தது, எலி தனது
தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது. இதனால் 1665-1666இல் கொள்ளை நோய் [Plague/பிளேக் நோய்] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு
இருக்கலாம்?
ஆகவே,
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து, முன்னைய வரலாறு தந்த அனுபவங்களையும் ஒன்று சேர்த்து நாம்
சிகிச்சை செய்ய வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
தமது குறள் 948 இல்
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்
செயல்."
என்று கூறியுள்ளார், ஆகவே அந்த வழியில் இந்த கோவிட் 19 யை நாமும் கட்டுப்படுத்த முயல்வோம் !
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
கொரோனா பற்றிய நிறைய விளக்கங்கள் பதிவுகள் அறிந்திருந்த போதிலும் இந்த பதிவு வித்தியாசமான கருத்துக்களை கொண்டு உள்ளது அருமை. பாராட்டுக்கள்
ReplyDeleteஉலகை ஆட்டிப்படிக்கும் கொள்ளைநோய் கொரோனாவின் தாக்கங்களோடு வரலாற்று ரீதியான நோக்கல்களுடன் உங்கள் புதிய தொடரின் ஆரம்பம் , தொடர வாழ்த்துக்கள்,நன்று
ReplyDeleteவித்தியாசமான கருத்துக்களை கொண்டு உள்ளது அருமை. பாராட்டுக்கள்
ReplyDelete