தாலி கட்டாத தமிழ்ப் பெண்கள்




தாலி கொடுக்கும் பெண்கள்! 
  
தங்கத் தாலியத் தொங்கத் தொங்கக் கட்டிக்கிட்டு நூறு வருசம் வாழணும்யா..’ இன்றைக்கும் கிராமத்து பெரியவர்கள் புதுமணப் பெண்ணை இப்படித்தான் வாழ்த்தி ஆசிர்வதிக்கிறார்கள். இப்படி வாழ்த்துபவர்கள் காணாது கண்டான் கிராமத்துக்குக்கு வந்தால் அதிசயித்துப் போவார்கள் - காரணம் இந்த கிராமத்துப் பெண்களின் கழுத்தில் தாலியைப் பார்க்க முடியாது!

தாலி என்ற ஒற்றைச் சொல்லுக்கு தமிழ் பெண்கள் ஆயிரம் அர்த்தம் சொல்வார்கள். அவர்களுக்கு அது நெஞ்சோடு நிழலாடும் ஒரு நிதர்சன தெய்வம், கண்ணாளனின் உயிர் காக்கும் உயரிய காப்பீட்டு யந்திரம், குடும்பத் தலைவிக்கான அம்ச லட்சணம். பெண்கள், தாலிக்கு இத்தனை பெருமைகளை வைத்திருப்பதால் தான் எதற்கும் கலங்காத பெண்கள்கூட தாலி சென்டிமென்ட்டுக்குக் கலங்கிப் போகிறார்கள். எதார்த்தம் இப்படி இருக்க, காணாது கண்டான் கிராமத்துப் பெண்கள் ஏன் தாலி அணிவதில்லை? அதற்கும் ஒரு கதை இருக்கே!
 [குறிப்பு:கதைகளுக்குத்தானே எம்மவர் மத்தியில் குறைச்சலில்லை]
அம்மனுக்கு காணிக்கையாக..

விருத்தாச்சலம் - நெய்வேலி சாலை யில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக் கிறது காணாதுகண்டான் கிராமம். முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லை என்றாலும் வாய்க்கும் கைக்குமாய் வாழும் மக்கள். நகரங்களைவிட கிராமங்களில் தாலிக்கு மரியாதை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இங்கிருக்கும் பெண்களின் கழுத்தில் தாலிக் கயிறு, தாலிச் சங்கிலி இருந்தாலும் தாலியைப் பார்க்க முடியவில்லை.

காணாதுகண்டான் கிராமத்துப் பெண்கள்..திருமணத்தின்போது இவர்கள் கட்டிக் கொண்ட தாலி எங்கே போனது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வந்தார் மகேஷ்வரி. ‘‘கல்யாணத்தப்ப எல்லாரும் போல எங்களுக்கும் மஞ்சக் கயித்துல தாலியைக் கோர்த்துத்தான் கட்டுவாங்க. அந்தத் தாலி ஒரு வருசம் தான் எங்க கழுத்துல இருக்கும். இடைப் பட்ட காலத்துல, குடும்பம் தழைக்க சீக்கிரமே ஒரு வாரிசு பொறக்கணும்னு பிடாரி அம்மனை வேண்டிக்குவோம். அவளும் தட்டாம எங்களோட பிரார்த் தனையை நிறைவேத்தி வைப்பா. அதுக்கு காணிக்கையா, குழந்தை பொறந்ததும் தாலிய தனியா பிரிச்சுக் கடையில குடுத்து பொட்டா அடிச்சுப் பிடாரி அம்மனுக்கு போட்டுருவோம்.
[குறிப்பு:இதுவும் எம்மவர்களின்   வழக்கமான செயல்பாடு தான்.நேர்த்தி செய்வார்கள். குழந்தை கிடைத்தால் அம்மன் அருள் என்று பறைதட்டுவர்,. குழந்தை கிடையாவிட்டால்  அம்மனிடம் தாலியை கொடுத்திட்டு இது என் தலை விதி என்று ஒதுங்கிக்கொள்வர். ஊரும் ஒதுக்கி வைத்திடும்.] 

புருஷன் தாலியை அம்மன்கிட்ட ஒப்படைச்சிடுறதால அதுக்கப்புறம் ஆயுசுக்கும் நாங்க தாலி போடுறதில்ல. வெறும் கயிறோ சங்கிலியோ தான் கழுத்துல கெடக்கும்’’ அம்மனின் மகிமையை அழகாய் சொன்ன மகேஷ்வரி, தன் கழுத்தில் தாலி இல்லாமல் தொங்கிய சங்கிலியை எடுத்துக் காட்டினார்.
[குறிப்பு: அட! கடவுளை சாட்டி என்ன கூறினாலும் செய்யத் துணியும் வீர பரம்பரை]

தாலியை நீ ஏத்துக்கிட்டு..

தாலியை அம்மனுக்கு பொட்டாக மாற்றிக் கொடுத்தாலும் தாலியோடு சேர்த்து அணியும் குண்டு, காசு ஆகியவற்றை தொடர்ந்து அணிந்து கொள்கிறார்கள் இந்தப் பெண்கள். எதனால் இப்படியொரு பழக்கம் வந்தது? வயது எழுபதைக் கடந்த மூதாட்டி பாப்பம்மாள் சொல்லக் கேட்போம். ‘‘பொறக்கும் குழந்தையும், கட்டுன புருசனும் நோய் நொடி இல்லாம நீடூழி வாழணும்னு பிடாரியை வேண்டிக்கிட்டு அதுக்கு காணிக்கையா தாலியை செலுத்துறோம். ‘தாலியை நீ ஏத்துக்கிட்டு தாலி பாக்கியத்தையும், கொழந்தை பாக்கியத்தையும் காப்பாத்திக்குடு’ன்னு வேண்டிக்கிறோம்.

அதுபடி, மொதக் குழந்தை பொறந்ததும் தாலியை கழட்டிடுவோம். சித்திரை மாசம் நடக்கிற பொட்டுத் தரித்தல் திருவிழாவுல பிடாரி அம்மன் வீதி உலா வரும். அந்த வருசத்துல தாலிய கழட்டி பொட்டுச் செஞ்சவங்க எல்லாரும் வீதி உலாவின்போது அம்மனுக்கு அதை சாத்துவாங்க. அந்தப் பிடாரி ஆத்தாளும் சந்தோஷமா அதை ஏத்துக்கிட்டு எங்களை குலம் தழைக்க வைக்கிறா’’ என்கிறார் பாப்பம்மாள்.
 [குறிப்பு:கடவுளை இத்தனை பேராசைக்காரியாய் காட்டி கேவலப்படுத்தும் கூட்டம்]

காணாதுகண்டானில் பிறந்தவள்

அருகிலுள்ள சின்னப்பண்டாரக் குப்பத்தில்தான் பிடாரி அம்மன் கோயில். சித்திரை திருவிழாவில் சின்னப்பண்டாரக்குப்பம், செம்பலக் குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், கோபுராபுரம், காணாதுகண்டான் இந்த ஏழு ஊர் எல்லைக்கும் பிடாரி அம்மன் ஊர்வ லமாக செல்கிறாள். அப்போதுதான் காணாதுகண்டான் பெண்கள், அம்ம னுக்கு தங்கப் பொட்டுக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்களைப் பின் பற்றி இப்போதுமற்ற ஊர்களிலும் ஒரு சிலர் தாலியை அம்மனுக்கு காணிக்கை யாகக் கொடுக்கிறார்கள்.
[குறிப்பு: பவுண் ஏறும் விலையில் இதுவும் நல்ல பிசினெஸ் தான், அயலூர் என்ன,யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தினாலும் நல்லாக ஓடும்.]

பிடாரிக்கு பூஜை வைக்கும் மரபில் வந்தவரான சின்னப்பண்டாரக்குப்பம் ராமச்சந்திரன், ‘‘பிடாரி காணாது கண்டானில் பிறந்தவள். அதனால தான் அந்த ஊர் மக்கள் அவளைக் கொண்டாடுறாங்க. சித்திரைத் திருவிழாவில் அம்மன் ஏழு ஊர் எல்லைக்கும் போய் வந்ததும் இங்கிருக்கும் பச்சைப் பந்தலில் அவளை எழுந்தருளச் செய்வோம். அப்போது தான் அம்மனுக்கு தங்கப் பொட்டுத் தரித்தல் வைபவம் நடக்கும்.

அம்மனுக்கு அவளோட பொறந்த வீட்டுச் சீதனமாக அவ்வூர் பெண்கள் தங்களோட தாலியை பொட்டாக்கித் தருகிறார்கள். திருவிழா முடிந்ததும் அந்தப் பொட்டுகள் அனைத்தையும் அந்த ஊருக்காரங்க கிட்டயே திருப்பிக் குடுப்போம். அதை அவங்க, நகைகளா மாத்தி மறுபடியும் அம்மனுக்கே கொண்டு வந்து சாத்திருவாங்க’’ என்கிறார்.
[குறிப்பு:அவை அம்மனின் சொத்தல்லவா!]

பெண்கள் தெய்வமென மதிக்கும் தாலியையே தனக்குக் காணிக்கையாக தருவதால் குழந்தைப் பேறுக்காக, காணாதுகண்டான் பெண்களை எப்போதுமே ஏங்கவிட்டதில்லையாம் பிடாரி அம்மன்!
[உதாரணமாக ஒன்று-   இதே ஊரில் இறக்கும் மக்களின் உடலைத் தகனம் செய்ய ஒரு சுடுகாடு இல்லாது,சொந்த நிலத்தில் எரிக்கும் நிலையில்  காலமெல்லாம் ஏங்கும் இம் மக்களை இப் பிடாரிக்குப் புரியவில்லையே அல்லது சிறுபகுதி தங்கத்திலாவது ஒரு காணியை வாங்கி சுடுகாடாக்கி மக்களுக்கு வழங்க அவ்வாலயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் உள்ளம் திறக்கவில்லையே].

📂தொகுப்பு:செ.மனுவேந்தன் 


No comments:

Post a Comment