நாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்

1.நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை, சில பல காரணங்களால், தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவிடும். அதற்குப் பின்னால் அவர்களின் உடல் உறுப்புக்களை சகட்டு மேனிக்கு நக்கித் தொலைக்கும். (அவற்றிற்கு உப்புச் சுவை மிகப் பிடிக்கும். உங்களுக்கு அதிகம் வேர்க்கும் என்றால் நீங்கள் அதற்கு ஒரு ட்ரீட்.)

2.நாய்களுக்கு பய உணர்ச்சி அதிகம். அது, நமக்கு அவை மேல் இருப்பதை

விடக் கூடுதலானது.சில நாய்கள் முந்திக்கொள்கின்றன.சில நாய்கள் தைரியமாக இருப்பது போல நடிக்கின்றன.(அவற்றிற்குப் பழக்கமாகாத சில சப்தங்களுக்கு அவை உடனே எதிர்வினை காட்டும்)

3.குரைக்கும் நாய் கடிக்காது போகலாம் . ஆனால் கடிக்கும் நாய் கண்டிப்பாகக் கடிக்கும். (சுக்ரன் நீச்சமடைந்தவர்களை நாய் கடிக்கும் என்றொரு புரூடா உண்டு. நாய்க்கு ஜோஸ்யம் தெரியாது. சில சொல்லாமலே கடிக்கும். வேறுசில சொன்னாலும் கடிக்காது).

4. நாய்கள் தனக்கு ஒரு வஸ்து உபயோகமாகிறதோ இல்லையோ மற்றொரு நாய்க்கு அது கிடைக்கக் கூடாது என்ற உயரிய, தீராத விளையாட்டுக் குணத்தோடு திரிவதோடு, பொழுது போகாத புலவர்களின் உவமைக்கும் உதவும். ( நாய் பெற்ற தெங்கம் பழம்.)

5. வீட்டுக்கு வந்துவிட்டுப் போன ஒரு பிடிக்காத மனிதனின் முதுகுக்குப் பின்னால் அவனின் குணத்தைப் பற்றி இழிவு படுத்தவும் நாய் உபயோகப்படுகிறது. (சீச்சீ! சரியான நாய் குணம் அவனுக்கு)

6. காரணமற்று உபயோகமற்று அடுத்த கட்டம் என்ன? என்ற குழப்பத்தில் விடாது குரைக்கும் நாய்களின் குரைப்பை  தெரியாத்தனமாக சண்டையிலும், வசவுகளை வாறியடிப்பதிலும் ஈடுபட்டுள்ள அனைவருமே நினைவு படுத்தத் தவறுவதில்லை. (இப்ப என்னான்ற? என்ற ஒற்றை வரியோடேயே வெகுநேரம் தொடரும் சண்டைகள் இதற்கு உதாரணம்)

7. புலி மட்டுமல்ல. நாய்களும் பசித்தால் புல்லைத் தின்னாது. அவற்றை இளப்பமாக நினைத்து பொறை மற்றும் இருப்பதிலேயே நாய் கூடச் சீண்டாது என்ற வகையறா பிஸ்கோத்துக்களை அதன் முன்னே விட்டெறிந்து கவர்ச்சி காட்டினால் உங்களை அல்பமாகப் பார்த்துவிட்டு இரு முன்னங்கால்களிலும் தலையைத் தேமே (அது என்ன தேமே?) என்று சாய்த்துக்கொள்ளும்.

8. உடலுக்கு நோவு வந்தால் அவற்றிற்கு மிகப்பிடித்தமான எதை வைத்தாலும் திரும்பிக்கூடப் பார்க்காது. அவற்றிற்கு வைத்தியமும் தெரியும். ஏதோ ஒரு வகைப் புல்லைத் தின்று கக்கும். இந்த விஷயத்தில் இவை மனிதனின் குணத்துக்கு நேர் மாறானவை. உடல் சரியாகி விட்டதாக அது நினைக்கும் அடுத்த நொடி சாப்பிடத் துவங்கும்.

9. அவற்றின் குட்டிகளுக்குத் தேடிப்பிடித்துப் பாலூட்டும். அவை நடக்கத் துவங்கிவிட்டால் தலைகீழாக நின்றாலும் (நிற்காது) பால் கொடுக்காது. தேட் தேட் டாக் தேட் தேட் பொறைதான்.

10. குட்டிபோட்ட ஒரு வாரத்துக்குக் கண்ணைத் திறக்கவோ நடக்கவோ குட்டிகளால் முடியாது. ஒரு வாரத்துக்கும் பால் பூத்துக்கு (அம்மா) மோப்ப சக்தியை வைத்தே, நீந்தியோ உருண்டோ போய் தன் வேலையைத் தீர்த்துக்கொண்டு விடும்.

11. தன் ப்ரசவ நாள் நெருங்கும் தினங்களில் அவற்றின் உள்ளுணர்வு வேலை செய்து உணவை நிராகரித்துவிடும். தனக்கு வசதியாக மறைவாக உள்ள இடங்களைத் தேர்வு செய்யத் தொடங்கும். நம்மைத் திசை திருப்ப இரண்டு மூன்று இடங்களில் பள்ளம் பறிக்கும்.



யாரும் எதிர்பாராத இடத்தில் குட்டிகளை ஈன்று வசதியான ஒரு பள்ளத்திற்குக் குட்டிகளுடன் இடம் பெயரும். குட்டிகளை ஈன்ற பின் முதலில் ஒரு தட்டில் நீர் வைத்தால் தாகம் தணித்துக் கொள்ளும். அதன் பின் பால். திட ஆகாரம் ஒரு நாளைக்குப் பின்னர்தான்.

எந்தக் குட்டியையும் அதன் கண்ணெதிரில் எடுக்க விடாது. எஜமானனாக இருந்தால் சுமுகமாக நைச்சியமாக அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு தன்னுடன் வைத்துக்கொள்ளும். வேற்றாளாக இருந்தால் குட்டிக்குச் சமமான சதையை நம் உடம்பிலிருந்து குறைத்துவிட்டு, குட்டியை பிடுங்கிக் கொள்ளும்.

12. நாய்க்கு மழை பெய்வது பிடிக்காது. மழைக்கு முன்னால் சூறாவளிக் காற்றிருந்தால் இன்னமும் மோசம். ஊளையிட ஆரம்பித்து விடும்.

13. இரவுகளில் நாய்கள் தூங்காது. பயம்தான் காரணம். வழக்கப்படி விடிந்து எல்லாம் அதனதன் பாட்டில் இயங்கத்துவங்கும்போதுதான் இதமான வெய்யிலில் தூங்க விரும்பும்.

14. மிகக் குளிச்சியான மிகச் சூடானவற்றையும் அவை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தன் வாயைச் சுத்தம் செய்துகொள்வதில் ரொம்பவும் அக்கறை காட்டும்.

15. அவற்றைச் சுற்றியுள்ள இடத்தில் பாம்போ, பறவையோ எது வந்தாலும் கடித்துக் குதறிவிடும். குறிப்பாகப் பாம்பு. ( என் இரண்டு நாய்களும் சேர்ந்து ஒரு சாரைப் பாம்பைப் பந்தாடி விட்டது. மற்றொரு முறை அதன் குட்டியைத் தூக்க வந்த ஒரு வல்லூறையோ பெரும் போராட்டத்தில் சிறகை முறித்துக் கிடத்தி விட்டது. இவைகளுக்கும் முதுகில் நகம் கீறிப் பெருத்த காயம். மறுநாள் காலையில் எப்படி நம்ம சாமர்த்தியம்? என்பது போல என்னை நிமிர்ந்து பார்த்தது.)

16. நாய்கள் தரையோடு இருப்பதால் அல்லது நம்மை விட உயரம் கம்மி என்பதால், பூமியின் அதிர்வுகள் அதற்கு அத்துப்படி. பழக்கமான சப்தம் கேட்டவுடனே அதன் வாலை ஆட்டத் துவங்கிவிடும். அதன் காதுகள் இன்னும் துல்லியத்துக்காக முன்பக்கமாகக் குவியும். என் மகன்கள் தொலைதூரத்திலிருந்து எழுப்பும் சைக்கிள் மணியை முதலில் அவைதான் குரைப்பால் உணர்த்தும். சுனாமியையும் டீவிக்கு முன்னால் சொன்னவையும்  அவைதான்.

17. அவற்றின் எஜமானர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு என்றால் அவையும் மூட் இழந்துவிடும். சாப்பிடாது. ஓடிஆடி விளையாடாது.

18. அதேபோல வழக்கத்துக்கு மாறான உடையோடு யாராவது வந்தாலும் பிடிக்காது. உதாரணம் நீளமான குர்தாவுடன் ஜோல்னா பையர்கள், தலைக்கு மேலே முடியோ, பின்னே ஒளிவட்டமோ தேவலாம். தொப்பி மற்றும் குடை.... ஓ நோ.

19. அவற்றிற்குக் கடிகாரத்தில் மணிபார்க்கத் தெரியாது. ஆனாலும் அவை வழக்கமாகச் சாப்பிடும், உபாதை கழிக்கும் நேரத்தை மிகச் சரியாக அறியும்.

20. வெகுநேரம் கட்டிப்போடப்பட்டால் குரலெழுப்பி, ஒன் பாத்ரூம் டூ பாத் ரூம் என்று குரைக்கும். அந்தக் குரைப்பு தனி தினுசு. அதுபோல இனவிருத்திக்கான குரைப்பும். அது புரியாத, சரியான பிராயத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற எதிர்வீட்டு மாமா, ’சனியன்! எப்பப் பாத்தாலும் என்ன கொரைப்போ’ என்று அலுத்துக்கொள்வார்.

21. நாய்களுக்கிடையே சண்டை வந்தால் ரத்தம் வரும் அளவுக்குக் கீறிக்கொள்ளும். ஆனாலும் பட்ட காயத்துக்கு மருந்துக்குக் கூட நம்மைப் போல் ஃபில்ம் காட்டாது. தானே நக்கிக் கொடுத்து புண்ணை ஆற்றிக்கொள்ளும்.

22. (அ) குரைக்கும் நாய் கடிக்காது (ஆ) நாய் விற்ற காசு குரைக்காது (இ) நாற்பதுக்கு மேல் நாய் குணம் (ஈ) நாயைக் குளிப்பாட்டி ........ (உ) ஆறு நிறைய ஓடினாலும் .... (ஊ) நாயைக் கண்டால் கல்லைக் காணோம் (எ) நாய் வாலை நிமிர்த்த முடியாது போன்ற சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும் அறுதப் பழசான பழமொழிகள் தன்னைப் பற்றியவை என்பது நாய்களுக்குத் தெரியாது.

23. சாப்பிட ஆலாய்ப் பறக்கும். ஆனால் அதற்கு உணவிடாவிட்டாலும் அது லட்சியம் செய்யாது. அலட்டிக்கொள்ளாது பட்டினியாய் இருக்கும்.

24. நாய்களும் கனவு காணும். அவை கலையும் போது சட்டென்று கண் விழித்து நிஜத்தோடு தன்னைப் பொறுத்திக்கொள்ள சிறிது குழம்பும். அதன் குரைப்பில் அதைக் கண்டுபிடித்துவிடலாம்.

25. நாய்களைப் பழக்குவதும் மிக எளிது. மிருகங்களைத் தனக்குச் சாதகமாகப் பழக்குவது மனிதனின் கேவலமான செயல். ஆனாலும் மிளகாய்ப் பொடி தூவி நாய்களின் மோப்ப சக்திக்கு வேட்டு வைக்கும் நவீனத் திருடர்களிடம் தோற்பதை உளவுத் துறை நாய்கள் விரும்புவதில்லை.

26. நாய்கள் காற்றில் மிதந்து வரும் கலப்படமில்லாத வாசனைகளை மூக்கைத் தூக்கி முகரும் அழகே அழகு. அதற்கு எல்லா பிஸ்கட்டுக்களையும் எழுதிவைத்துவிடலாம்.

27. அது தினமும் சிறுநீரோ, மலமோ கழிக்கும் இடத்தை முகர்ந்து பார்த்து அந்த இடத்திலேயேதான் கழிக்கும். தன் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதில் மிக்க ஆர்வமுடையவை. ஈரம் அடைவதையோ சொதசொதவென்ற பரப்பையோ அவை விரும்பாது.

28. குளிப்பது அவற்றிற்குக் கொஞ்சமும் பிடிக்காது. கட்டாயப் படுத்திக் குளிக்க வைக்கும்போது ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும். ஆனால் உடல் காய்ந்ததும் தூங்குமே பார்க்கலாம் அப்படி ஒரு தூக்கம்.

29. தனிமையை நாய்கள் விரும்புவதில்லை. எல்லோருடனும் தன்னை இணைத்துக் கொள்வதில் நாய்களுக்கு இணை மற்ற நாய்கள்தான்.

30. உங்கள் செருப்புக்களோ, ஷூக்களோ அவ்வளவாக அவற்றிற்குப் பிடிப்பதில்லை. பற்கள் நமநம என்று வரும்போது தன் எதிரியின் தோலாய் நினைத்துக் கடித்து உண்டு இல்லை என்றாக்கிவிடும். அல்லது உங்களின் பார்வைக்குத் தென்படாத தொலைவில் அதைக் கவ்விக் கொண்டுபோய்ப் போட்டுவிடும். நீங்கள் ரெண்டுகாலிலும் செருப்பில்லாமல் முணுமுணுத்துக்கொண்டே தேடியலைவதை அது வேடிக்கை பார்க்கும்.

31. மனிதனை விடவும் பல மடங்குகள் உணர்வுப்பூர்வமானவை அவை. பிரிவை அவை விரும்புவதில்லை. எத்தனை திட்டினாலும், அடித்தாலும் அவை உங்களை நேசிக்கும். விட்டுவிட்டு ஊருக்குப் போவது இருக்கட்டும்- ஒரு நாள் அதைக் கொஞ்சாமல், தடவிக் கொடுக்காமல் நிராகரியுங்கள். மறுமுறை உங்களிடமே தீனமான குரலில் புகாரளிக்கும் என்று இந்த வரிகளை எழுதும்போது என் மனது பொங்குகிறது.

🐶படித்ததில் புடித்தவர்: தங்கவடிவேல் 

1 comment: