ஞான வாழ்வு நல்கும்..வழிபாட்டில்


சச்சிதானந்த சற்குருவின் பெருவழிப்பாதை
மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும் நீங்கி இளைப்பாற இடம் கிடைத்தால் அதுவே நிம்மதிப் பெருவாழ்வாகின்றது.

படிப்பு பாதியும், வேலை மீதியும் ஆகி நம் வாழ்வு பயனற்றுக் கழிந்திட, தளர்ந்தபோதில் ஞானம் நோக்கிப் புறப்பட்டு ஆகப் போவது என்ன? இளங்காலத்திலேயே ஆசையற்று, அன்புற்று, குருபாதம் தேடி அடையப் பெற்றால் அதைவிட ஆனந்தம் வேறென்ன இருக்க முடியும். இந்தப்பேற்றைவிட உறுதியான நற்பேறு வேறு என்னவாக இருக்க முடியும். சற்குருவின் சிந்தனை நன்மை பயக்கும். வாழ்வில் புதுப் பொலிவைத் தரும். அதன் தொடர்பு பெருக பெருக மற்றைய கவலை தரும் தொடர்கள் கழிந்து அற்றுப்போகும். இந்நிலை எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தேடினும் கிடைக்கப்பெறாத வரப்பெறாத பெருஞ்செல்வம் அது என்பதில் ஐயமில்லை.

முன்னோர்கள் இளையோர்களை இந்த வழி நடத்தவேண்டும். இளமை வாழ்வில் நலம் பெருக நல்ல வழி இதுவே ஆகும். இதுவே ஞானம் பெருக்கும் பெருவழியாகும்.

மானிட வாழ்வின் தீர்மானம் என்ற தலைப்பின் கீழ் அமைந்த அப்பாடல் மனித வாழ்வினை மதிப்பீடு செய்து நல்வழி காட்டுகிறது.

நான் நானென்றதுமென்ன கொடுமை நம்பி
தானென்ற தாய் தந்தைக்கு ஆனார் அடிமை

என்று மனித வாழ்வின் தொடக்கத்தில் இருந்து இப்பாடல் தொடங்குகிறது. நான் நான் என்று பெருமை பேசித்திரியும் மானிடர்கள் தன் உடம்பினை, உடல் உறுப்புகளை வைத்தே தற்பெருமை பேசித்திரிகின்றனர். ஆனால் அவர்களின் உடம்பு அவர்களுக்குச் சொந்தமானதன்று. தாய், தந்தையின் வயப்பட்டு வந்த பொருள் அது என்று ஆணவத்தின் நிலை அறுத்து பிறப்பின் நிலையினை இவ்வடி சுட்டுகிறது.
மனித வாழ்வில் பொன் பொருள் சேர்க்கும் ஆசையை அடுத்த அடிகள் சாடுகின்றன.

விரும்பினார் வீடு என்றும்
காடுமனைவி வேண்டினார் வேதனை
தூண்டினார் மாடு பொருந்தினார் மக்களினோடு
பொன்பூஷணம் வேணுமென்று ஆசையில் நாடி
வருந்துறார் வாழ்க்கை திண்டாடி

என்ற அடிகளில் நிலையற்ற பொருள்களின் மீது மனிதன் கொண்டுள்ள நீங்காத ஆசை வீண் என்று காட்டப்படுகிறது. பணம், பதவி, பொருள், போகம் எனத்திரியும் இக்கால உலகிற்கு நிலையாமையை எடுத்துக்காட்டும் இனிய அடிகள் இவை.

இதுமட்டும் இல்லாது தன்னை அறியாது,உணராது   மனிதக்கூட்டம் அலைவதும் வருந்துதவதற்கு உரியது என்று இப்பாடல் எடுத்துரைக்கிறது.

மதிகெட்டுப் போனதெவ்வாறு தோற்றும்
நிதியுற்றுக் கடவுளை நீங்கள் நினையாது
சதிசெய்யும் மனிதர் கூட்டம்
தன்னைத் தான் அறியாததனாலே திண்டாட்டம்
சதி செய்யும் நோயினாலே வாட்டம்

என்றைக்கும் சதிசெய்வது மனிதத் தொழிலாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதிய செய்தி அல்ல என்ற புறநானூற்று வாசகம் இன்றும் ஏற்புடையதாக உள்ளது. சதி செய்து தான் வாழ நினைக்கும் இழிந்த குணம் பெற்ற மனிதரை இந்த அடிகள் வெறுக்கின்றன. அவர்களின் சதி செயல் மற்றவரை வதைக்கும். சதி செய்தோருக்கு நோய் சதி செய்யும் என்ற வார்த்தை சத்தியமான வார்த்தையாகும். சதி செய்யாது மனிதரை வாழ வைக்கும் சத்திய வரிகள் இவை.
மேலும் கடவுளை உணர முடியாத  மதிகெட்ட கூட்டத்தையும் இந்த அடிகள் வெறுக்கின்றன. கடவுள் குறித்த மூட, பலி வழிபாட்டையும் இந்தப்பாடல் சாடுகின்றது.

செப்புக்கல்லுக்கு உயிர் கொன்று
மாமிச ஊட்டம் இட்டார்
நோய் தீரவுமில்லை இதனாலே
கடவுளை யேசுவார் தொல்லை

என்ற பகுதியில் கடவுளுக்காகச் செய்யப்படும் பலி வழிபாட்டால் பயன் இல்லை என்பதும் உணர்த்தப்படுகிறது. இந்தப் போலி வாழ்க்கை தீர வேண்டும். உண்மை வாழ்வை மனிதன் வாழவேண்டும். அதற்கு என்ன வழி என்பதையும் இந்தப்பாடல் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. எது உண்மை வழிபாடு என்பதற்கும் இந்தப் பாடல் விடை சொல்லுகின்றது.

"அகமும் புறமும் பரிசுத்தம் குருநாதர்
அருள்மொழி நேசி நீ நித்தம்
பொறுமையாய் உயிர்களில் அன்பும் உண்மை
இரக்கமும் சத்தியமும் தன் நலங்கெட்டு
தத்துவமென்பதை விட்டு உண்மைக்
கடவுளை தன்னுள்ளே காணஆசைப்பட்டு
நித்தியம் நீடுழி மோட்சம் கிட்டும்''

இவ்வடிகளில் காட்டப் பெற்றுள்ள வாழ்வே உண்மை வாழ்வு. மனிதர்கள் ஞானமரநிழலில் இளைப்பாறிக் களைப்பாற்றும் வாழ்வு. உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாக ஆக்கிக் கொண்டு குருநாதரின் அருள்மொழிகளை நேசிக்கவேண்டும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும், உண்மையான இரக்கத்தையும் செலுத்துதல் வேண்டும். தன் நலத்தைக் குறைக்கவேண்டும். தத்துவங்களைத் தேடி அலைவதை நிறுத்திவிட்டு கடவுளைத் தன்னுள்ளே காணும் பெறும் பேறு பெற வேண்டும். அதுவே மோட்சம் எனப்படும் என்று தெளிவான மானிடர்க்குத் தேவையான வழியினைச் சற்குரு இவ்வடிகளின் வழியாகக் காட்டுகிறார்.

முனைவர் மு. பழனியப்பன்

No comments:

Post a Comment