ஏன்தான் நீ நம்ப
மறுக்கின்றாய்?
✪✪✪✪✪✪✪✪✪
அன்பார்ந்த பூலோகம் வாழ் உறவுகளே! நீங்களே கேளுங்கள்; நான் ஏற்கனவே இறந்துவிட்டேன் என்று எப்படித்தான் நிறுவினாலும் இந்த எமன்
நம்புகிறான் இல்லை. இப்பொழுது நான் எம லோகத்தில் எமன் முன்னால் நிற்கின்றேன்.
தந்திரோபாயமாக அவனது பாசக் கயிற்றினை (பொய்
சொல்லிக்) கைப்பற்றி என்னிடம் வைத்துள்ளேன். அதனால், என்னுயிரை எடுத்தால்தான் அவனால் பிறர் உயிரை எடுக்க இயலும். 'என் உயிரை எடுத்து
தீர்ப்பினை வழங்கிவிடு' என்று எத்தனை முறை வேண்டினாலும் செவி மடுக்க மாட்டானாம்.
என்னுடைய ஆயுள் இன்னமும் முடியவில்லையாம். நேரம் வந்ததும் தனது தூதுவர்கள்
என்னைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்பொழுதுதான் என் இறப்பு நிகழுமாம். அதுவரை
தன்னால் ஒன்றுமே செய்ய இயலாதாம்.
என் நேசப் பிறப்புக்களே! என் இறப்பினது காரணத்தை, இந்த வாட்ஸாப் மூலமாக முழுவதாக உங்களுக்கும் அறியத் தருகின்றேன்; நீங்களும் சிரமம் பாராது உங்கள் மின்னஞ்சல் மூலம்,
eman@emalokam.com.el(Attention to: சித்திர புத்திரன்)
என்ற எமனின் முகவரிக்கு, உங்கள் ஆதரவை அவனுக்குத் தெரியப் படுத்துமாறு
பணிவுடன் வேண்டுகிறேன்.
✬✬✬✬✬
இவ்வுலகிலே உயிருடன் வாழ்வதற்கு எமக்கு அளிக்கப்பட்டதுதான் இந்த உடம்பு. இந்த
உடம்பில் எமக்கென்று இருப்பது ஐந்து புலன்கள்; மெய் , வாய், கண், மூக்கு, செவி என்பன. இவற்றில், மெய் என்னும் இந்த எனது உடம்பில், கால்கள் வலு இழந்தன; கைகள் செயல் இழந்தன. முதுகு வளைவுற்றது; வயிறோ உட்குவிந்தது. இரத்தம் எல்லாம் சர்க்கரை; குழாய்கள் எல்லாம் கொழுப்படைப்பு, மித்தமான இரத்த அழுத்தம், தாங்கேலாத் தலை சுற்றலுடன், நெஞ்சு நோவும், நாரி நோவும்,கழுத்து நோவும், முடக்கு நோவும், அடைத்துப்போன சுவாசப்பையும், வீங்கிப்போன சிறு நீர்ப்பையும், பலனற்ற பிறப்புறுப்பும், இப்பவும், அப்பவும் தொல்லை தரும் மலசலமும கொண்டு, நாற்றமிடும் சூழலிலே, உணர்வின்றி, ஆட்டமின்றி, இரசிப்பின்றி, மனமின்றி, களிப்பின்றி, அனுதினமும் படுக்கையில் சட(ல)மாய் கிடைப்பதனால், மெய் என்னும் உடலால் தொடு உணர்வை அறிந்துகொள்ளும் அனுபவத்தை இழந்துவிட்டேன்.
ஆதலால், இப்பொழுது சடமாய்க் கிடக்கின்றேன், எனது மெய்ப்புலன் செயலிழந்துவிட்டது!
வாய் என்னும் புலனினால், மொழிகள் பேசினேன்; கவிதைகள் பாடினேன்; மாதா, பிதா, குரு, தெய்வம்பால் அளவளாவினேன். உடன் பிறந்தோர், நண்பர், உற்றார், உறவினர், உலகினர் ஈறாக எல்லோருடனும் உரையாடினேன்.
குழந்தைகளுடன் மழலை புரிந்தேன். சிரித்தேன், அழுதேன், வாழ்த்தினேன், புகழ்ந்தேன், இகழ்ந்தேன். படித்தேன், நடித்தேன். ஆறு சுவை உணவெல்லாம் ஆர்வத்துடன் புசித்தேன். தேன் போன்ற
பானமெல்லாம் ஆசையுடன் அருந்தினேனே!
ஆனால் இப்போது, பல் விழுந்து, வாய் சுருங்கி, பேச்சு தளம்பி அடங்கிவிட , நா மரைத்து, சுவை அற்று, வாய் நொந்து, தொண்டை வீங்க, உட் செலுத்தப்படும் சில உணவும் வாந்தியாய் வெளியில் வர, இப்பொழுது, இந்த வாய், மருந்துக் குளிசைகள் இடும் அஞ்சல் பெட்டியாகி, பலனற்று, செயல் அற்று சும்மா கிடக்கிறதே!
ஆதலால், எனது வாய்ப்புலன் வலுவிழந்துவிட்டது!
கண் என்னும் புலனால், நூல் படித்து கல்வி கொண்டு, காட்சி கண்டு, சொந்த, பந்தம் சேர்ந்து மகிழ்ந்து, இயற்கை தரும் வளங்கள் கண்டு, பூமி முதல் வானம் வரை கொண்ட அற்புதக் காடசிகளையும்
ரசித்து, அழகுமிகு பட்சிகளின் வண்ணங்களில் மகிழ்ந்து, ஆறு, மலை, கோவில், குளம், நகர் என்றெல்லாம் ஆனந்தித்து சுற்றுலா சென்று வந்து, நாடகமும், ஆடல்களும், எண்ணற்ற திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்து நன்று
இரசித்திருந்தேன்.
ஆனால் இப்போது, வெள்ளெழுத்துப்பட்டு, கண்கள் கறுத்து , கற்றாராக்காம், குளூக்கோமாவாம் என்னோவெல்லாம் நோய் பிடித்து, முன்னால் ஒன்றும் தெரிவதில்லை, எவ்வொளியும் புரிவதுமில்லை. ஆதலால், இப்பொழுது எங்கும் வெளிச்சமில்லை. எனது கண்
புலனும் இருண்டுவிட்டது!
மூக்கு என்னும் புலனால், எத்தனை உணவுகளை முகந்தேன், பழங்கள், மலர்களை மணந்தேன், இயற்கையை உணர்ந்தேன், உறவுகளை அனுபவித்தேன், சுகந்தமான வாசனைத் திரவியங்கள் வீசும் நறுமணத்தில மூழ்கி இருந்தேன், விதம் விதமான கறிப்பொருட்களைச் சுவைத்திருப்பேன்.
மூக்கு என்னும் புலனால், எத்தனை உணவுகளை முகந்தேன், பழங்கள், மலர்களை மணந்தேன், இயற்கையை உணர்ந்தேன், உறவுகளை அனுபவித்தேன், சுகந்தமான வாசனைத் திரவியங்கள் வீசும் நறுமணத்தில மூழ்கி இருந்தேன், விதம் விதமான கறிப்பொருட்களைச் சுவைத்திருப்பேன்.
ஆனால் இப்பொழுது, மூக்கடைத்து, மூச்சடைத்து, மூலையெல்லாம் தோல் உரித்து, வாசமும் தெரியுதில்லை, வாழவும் முடியுதில்லை. ஆதலால், எனது மூக்குப் புலனும் அடைத்துவிட்டது!
செவி என்ற ஒரு புலனால், பெற்றோர் சொல்வழி கேட்டேன், பெரியோர் மொழி கேட்டேன், கல்வி கண்டேன், தொழில் கொண்டேன், அன்புத் துணைவியின் காதல் மொழி பெற்றேன், அருமைக் குழந்தைகளின் மழலை மொழி கேட்டேன், இசை, இயல், நாடகம் பரவசமாய்க் கேட்டறிந்தேன், தென்றலும், தூறலும் துல்லியமாய் அறிந்திருந்தேன், வண்ணப்பறவைகளின் சங்கீதம் இரசித்திருந்தேன், அயலூரின் ஒலிகூடி பிசகாமல் கிரகித்தேனே.
ஆனால் இப்போது, எங்கும் நிசப்தம். எனது செவி என்று ஒன்று
இருப்பதாய் தெரியவில்லை!
✬✬✬✬✬
இப்பொழுது தெளிவாகத் தெரிகிறதல்லவா நான் ஏற்கனவே இறந்துவிட்டேன் என்று?
ஆதலால் பொதுமக்களே, இந்த வாட்ஸாப் செய்தியை தந்திபோல் பாவித்து, காலம் தாழ்த்தாது உடனடியாகவே உங்கள் மின்னஞ்சலை யமதேவனுக்கு அனுப்பி வைக்கவும்.
நான் உண்மையிலேயே இறந்துவிட்டேன்!
நன்றி.
✍செல்வதுரை,சந்திரகாசன் ✍
0 comments:
Post a Comment