கனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020]

                               
                                              25.04.2020

அன்புள்ள தங்கைச்சிக்கு,
நான் நலம். உன் கடிதம் கிடைத்தது. உனது புதினங்கள், சுகம்   யாவையும் அறிந்தேன்.

தங்கைச்சி , உனது கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களில் முதலாவதிற்கு வருகிறேன்.
சில பிள்ளைகளின் வரம்புமீறிய தகாத வார்த்தைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தாய். பிள்ளைகளின் இந்த நிலைக்கு முதலில் பெற்றோர்களே காரணம் என்று கூறுகிறேன்.ஏனெனில் பிள்ளைகளின் முன்னால்  பெற்றோர்கள் சண்டைபிடிப்பதுவும், அவர்களுக்கிடையில் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் பிள்ளைகளின் நெஞ்சினில் பதிந்துகொள்வதுவும் பிள்ளைகள் ஆத்திரமுறும் வேளையில் அச்சொற்கள் அவர்கள் வாயிலிருந்து வெளிவரக் காரணமாக அமைந்து விடுகின்றன.
இதில் ஒன்றை நீ கவனிக்கவேண்டும். பிள்ளைகள் நாம் சொல்லிக்கொடுப்பதனை தம் நெஞ்சில் பதிப்பதை விட ,நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதனையே அதிகம் பதிவு செய்துகொள்கிறார்கள் என்பதனை மறந்துவிடாதே.
பிள்ளைகள் ஏதாவது புத்திசாலித்தனமாக கேட்கும் கேள்விகளுக்கு, ஆரோக்கியமான பதிலைச் சொல்லாமல் 'வாயை மூடு' என்று கூறும் பழக்கம் அந்தக்காலத்தில் மட்டுமல்ல ,இன்றும் சில குடும்பங்களில் காணப்படுவது  கவலைக்குரியதாகும். அப்படியான பிள்ளைகள் வெளியுலகத்துடன் அதிகம் தொடர்பினை வைக்கும் போது அவ்விடங்கள் தவறானதாக இருந்தால் பிள்ளைகளின் நிலையும் தப்பாகவே போய்விடும். எனவே பிள்ளைகளுடன் முடிந்த அளவு நேரத்தினை செலவழிப்பதன் மூலமே நல்ல ஒரு எதிர்காலத்தினை உருவாக்க முடியும்.

உன்னுடைய இரண்டாவது விடயத்துக்குக்காக ஒரு கதையினை கூறுகிறேன்.

கல்யாண வயது வந்த மகள் ஒருத்தி  , வரும் திருமணப் பேச்சினை எல்லாம் 'வேண்டாம், வேண்டாம்' என பலமுறை குழப்பி வந்தாளாம். தாய் சந்தேகத்தில் ,எங்காவது காதலிக்கிறாயா என விசாரித்தும் அவள் பதில் 'இல்லை' என்றே வந்ததாம்.  ஒரு நாள் தகப்பன் அவளிடம் , கெஞ்சி,மன்றாடி காரணத்தினைக் கேட்டாராம். அவள் கூறினாளாம்,
'' அப்பா! நீங்களும் அம்மாவும் சண்டை பிடியாத நாள் ஒன்றை சொல்லுங்கோ பார்ப்போம், அப்பிடி நானும் கல்யாணம் செய்து சண்டைதான் வாழ்க்கையாய் வாழவேணுமே? எனக்கு அந்தக் கல்யாணம் வேண்டாமப்பா!'
எனக் கூறியவள் குலுங்கி,குலுங்கி அழ ஆரம்பித்தாளாம்.
பெற்றோரின் சண்டை பிள்ளைகளின் கல்வி, மனம், வாழ்க்கை என அனைத்திலும் எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்துமென்று உன் தாய் மாமன், மாமி     சிந்தித்ததில்லை. இக்கதை  உனது சந்தேகத்தினை தீர்த்திருக்கும் என நினைக்கிறேன்.

தங்கைச்சி , எமது தமிழ் சமுதாயம் ,பிள்ளைகள் எதிர்காலத்தில்  நல்ல நிலைக்கு செல்லவேண்டும் என்ற கனவுடன் உழைப்பவர்கள். அக்கனவு இருந்தாலும் சிலர்  தங்களை அறியாமலே பிள்ளைகளில் வளர்ச்சிக்கு தடங்கலாக, நடந்துகொள்கிறார்கள். இந்த நிலைகள் மாறவேண்டும் என்பதே எம் அனைவரினதும் விருப்பம்.

உனது தேவைகளையும், சுகமான செய்திகளும் அடுத்த உனது கடிதத்தில் எதிர்பார்க்கிறேன்

அனைவரும் சுகம் பெற வாழ்த்திக்கொண்டு விடைபெறுகிறேன். மீதி பின்னர்....

இப்படிக்கு
அன்புள்ள அண்ணன்
செ.மனுவேந்தன்.

📮 📮 📮 📮 📮 📮 📮 📮 📮
            

0 comments:

Post a Comment