[சீரழியும் சமுதாயம்]
10] அறநெறி
சரிவு [decline of morality] / சுயக்கட்டுப்பாடற்ற
ஒழுக்ககேடு
முழு சமுதாயத்திற்கும் அல்லது ஒரு தனிநபரின்
நம்பிக்கைகளுக்கும் ஏதாவது ஒரு ஒழுக்கம் இருக்கலாம். இவ்வகையான ஒழுக்க நெறிகள் ஒரு
கதையில் இருந்தோ அல்லது அனுபவத்தில் இருந்தோ பிறக்கின்றன. எது சரி, எது பிழை
என்பதை இந்த ஒழுக்க நெறிகள் அல்லது விதிமுறைகள் நிர்வகிக்கிறது. எனவே அறம் அல்லது
ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது
தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை,
நல்லவை தீயவை என்பன தொடர்பில், ஒரு
சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடத்தைகளின் தொகுப்பு என்றும் கூறலாம். ஒழுக்க
நெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்று போல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு
என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடு கின்றன. உலகளாவிய சில உதாரணங்களாக, பரீட்சையில்
ஏமாற்றுவது ஒரு நற்செயல் அல்ல, அதற்கு எதிர்மாறாக தகுதிகள் அடிப்படையில் உயர் பதவிகளை
அடைவது ஒரு சரியான வழி. இதே போல, இனவாதம் தவறானது மற்றும் கஷ்டப்படும் அகதிகளுக்கு அன்பு
காட்டுவது உயர்ந்த நெறி முறை.
சமூகத்தில் முழுமையாக மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டு
மெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும்
விதித்துக் கொள்ளவேண்டும். வேறு வகையில் குறிப்பிடுவது என்றால், ஒரு தனிமனிதன் பிறரிடம் எந்த எந்தப் பண்புகளை எதிர்பார்க்கின்றானோ, அந்தப் பண்புகளைத் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணும்போது,
அந்தப் பண்புகள் யாவும் அவன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய
வாழ்வியல் அறிநெறிகளாக ஆகிவிடுகின்றன. ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் தனது
குறள்: 0131 இல், ஒழுக்கமே
எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த
ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி என்பது
தனிச்சொத்து என்கிறார் தந்தை பெரியார்,ஈ. வெ. இராமசாமி. ஏனென்றால் ,பக்தி இல்லாவிட்டால்
நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்பதாகும். ஒழுக்கம்
– ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது –
வாழ்வது ஒழுக்கமுடைமை. இதைத்தான் வள்ளுவர்,
குறள் : 0140 இல், உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல
நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே என்று ஆணித்தரமாக கூறுகிறார். "உலகம்
வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"
என்றார் விவேகானந்தரும்.
ஒரு விதையை நீங்கள பார்த்து, அது விதைக்கப்
பட்டபின் எத்தனை சுவையான கனி, எத்தனை காலத்திற்கு கொடுக்கும் என்பதை எல்லாம் உடனடியாக
ஊகிக்க முடியாது. அது விதையின் தரம்,
மண்ணின் தன்மை, உரத்தின்
இயல்பு, அங்கு நிலவும் இயற்கையின் ஆற்றல், மற்றும்
கண்காணிப்பு போன்றவற்றின் சிறப்புகளை பொறுத்தே கூறமுடியும். அவ்வாறே ஒவ்வொரு
மனிதனும் ஒவ்வொரு விதையாக இருக்கிறான். சமூகத்தில் அவன் நல்ல கனி கொடுக்க வேண்டும்
என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கு ஒவ்வொரு மனிதனும் நல்ல ஒழுக்கங்களைக்
கொண்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகிறது. ஒரு மனிதன் என்பவன் சமூகத்தின் ஒரு
அங்கம். ஒரு உறுப்பில் ஏற்படும் புற்று நோய் அந்த உடலையே, நாளடைவில்
பெரும்பாலும் அழிப்பது போல, ஒரு தனி மனிதனிடம் காணப்படும் ஒழுக்கக் கேடுகள், அவன்
வாழும் சமூகத்தையே ஒருவேளை அழித்து விடும் ஆற்றல் படைத்தது என்பதையும் நாம்
மறக்கக் கூடாது.
ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கமாகும் . வன்முறை, இனவெறி, சமயவெறி
இவற்றிலிருந்து விடுபட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு நாம் இன்று உள்ளோம். அதற்க்கு
நாம் அன்பெனும் கயிற்றில் சமுதாயத்துடன் எம்மை பிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்
என்று எண்ணுகிறேன். பொதுவாக தனிமனித ஒழுக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகிறது.
‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்’ என்ற பழமொழிக்கேற்ப சமுதாயத்தில் ஒருவன்
தீயவனாய் இருந்தாலும் சமுதாயத்திற்கும்,
மக்களுக்கும் அதனால் பெரும் துன்பம் ஏற்படும். இந்த
ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந் நோயின்
அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும்
மற்றும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில்
பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை
அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே,
சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும்
போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மக்களுள் பலர் பணந் தேடும்
நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு,
எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை
என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான்
உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப்
பின்பற்றி வாழ்ந்தார்கள் என சங்க பாடல்கள் எமக்கு அறிவுரை கூறுகின்றன. சமூகச்
சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே
மாற்றங்களை விதைக்க வேண்டும். இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற ஒவ்வொரு பெற்றோரும்
தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம்
நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து
அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப்
பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை
வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும் என்று நம்புகிறேன்.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 14
தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்↴ Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
பகுதி 14B வாசிக்க
அழுத்துங்கள் ↴
No comments:
Post a Comment