பண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]



[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]
கடைசி தமிழ் சங்கம் [700 B C to 300 A D ]
BETWEEN 700 BC to 300 AD[LAST SANGAM PERIOD]


ரோமன், கிரேக்கம், பாரசீகம், ஹீப்ரு, சமஸ்கிருதம், தமிழ், சீனம் ஆகியவை உலகத்தின் பழைய மொழிகள். ஒவ்வொரு மொழியும் தனியாக இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் கொண்டுள்ளது.தமிழ்மொழியின் இலக்கண நூல் தொல்காப்பியம். அது கி.மு.700-300 இடையில் எழுதப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தமிழின் பண்டைய நூல்களில் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆயினும் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது. "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'[புறத்திணையியல் -சூத்திரம் 27] என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை.

மேலும் "காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்." (தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)-இப்படி கூறுகிறார் .அதாவது கடவுள் பற்றி பாடல்களில் காமப்பொருளை சார்த்திப் பாடுதலை நீக்கமாட்டார்கள். ஏனெனில் கடவுளரின் காதலும் பாடல்களில் ஏற்கப்படுவன. இங்கு ஏனோர் எனப்பட்ட தலைவர், மன்னர்கள் ஆகியோரது பெயர் சுட்டியும் இவை வரும். "இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்" என்பதே இதன் பொருள். எல்லா அனைத்து  புலன் சார்ந்த இன்பங்களில், உச்ச உயர்வான , ஒப்புயர்வற்ற  மகிழ்தல் என கருதப்படும் ஐம்புல இன்பங்களும் நிறைந்த  காம இன்பம் ஒரு பெண்ணிடம் நிறைந்துள்ளன என்பதை திருவள்ளுவர் குறள் 1101 மூலம் கூறுகிறார்.

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள." -குறள் 1101

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த இந்த வடிவழகியிடம்[மனைவியிடம்] நிறைந்துள்ளன

இந்த உச்ச உயர்வான , ஒப்புயர்வற்ற  மகிழ்தலின் மூலமான காதல் அன்பை பற்றி பாடும் திணைகளை  ஐந்து வகையாக, ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக,கூடல்[குறிஞ்சி] ,பிரிவு[பாலை] ,காத்து இருத்தல்[ முல்லை] ,இரங்கல் [நெய்தல்]  & ஊடல்[மருதம்] என தொல்காப்பியர் அந்த அந்த நிலத்திற்குரிய தெய்வத்துடன் அகப் பொருளில் குறிப்பிடுகிறார்.
மனிதர்களை நாலு வகையாக பிராமண, சத்திரிய வைசிய, சூத்திரர்  என்னும் நான்கு வர்ணங்களாக பிரிக்கும் ஆரியர் கொள்கை பண்டைய தமிழர்களுக்கு அன்னியமானது . அங்கு வர்ண  ஜாதி அமைப்பு இல்லை .தொல்காபியத்தில்  எங்கும் சூத்திரர்  என்ற சொல்  பதம் ஒன்றும் இல்லை.ஆனால் பண்டைய தமிழர்கள் மத்தியில் ,அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலான குலம் இருந்துள்ளது.குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும்.

இவ்வாறு தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் ஐயம் எதுவுமில்லை.

தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)

[உரை:-மாயோன் மேவுவது காடுடைய நிலம்.சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம் .தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.இந்த நான்கு நிலங்களும் முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும். மேய = விரும்பிய]
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாகவும் சங்க நூல் வழியும், சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

பழந்தமிழ்ப் பேரிலக்கணம் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. திருமால்[மாயோன்], முருகன்[சேயோன்], இந்திரன்[வேந்தன்], வருணன்,கொற்றவை ஆகிய தெய்வங்களையும் கூறும் இந்நூல் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைக் குறிப்பிடவில்லை. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப்பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.ஆனால் சிவன் என்னும் பெயரோ, அவன் இன்ன நிலத்துக்கு உரியவன் என்றோ கூறுப்படவில்லை.

.சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர்..சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை. இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார்.தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள்.முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் "முக்கட் செல்வர் நகர்" எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது.திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை.கிருஸ்துக்குப் பின் 4ஆம்  – 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருமுருகாற்றுப்படையிலும் பரிபடலிலும் நாம் காணும் சிவா பார்வதியின் மகன் முருகன் என்ற கதையும் அங்கு இல்லை.அது மட்டும் அல்ல,லிங்க வழிபாடும் அங்கு இல்லை.  சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான்,குப்தா காலத்தில்,பிள்ளையார்.ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார்.பல்லவ மன்னரின் படைத்தளபதியான பரஞ்சோதி[இவரே பிற்காலத்தில்  சிறுத்தொண்டராவார் ],கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ,வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை  [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகபடுத்தப்பட்டார்.
மிகவும்  போற்றிப் பாராட்டி  வணங்கிய தமிழரின் தெய்வமாக  சேயோன் ,முருகன் ஆதி காலம் தொடங்கி  இருக்கிறார். தமிழ் அகராதியில் சேய் =மகவு : சிவப்பு: இளமை  என்று குறிக்கிறது .புறநானுறு  56 முருகனை சேயோன் என்று அழைக்கிறது

"மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்."

"மயிற் கொடியை எடுத்த மாறாத வெற்றியை யுடைய அம் மயிலாகிய ஊர்தியை யுடைய ஒள்ளிய செய்யோனு மென்று சொல்லப்பட்ட"

 என்று புகழ் சூட்டுகிறது .அப்படியே தொல்காப்பியமும் முருகனை  புகழ்  சூட்டுகிறது .

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரனின் கோயிலை குறிக்கிறது.சங்க காலத்து வழிபாட்டை  ஆராயும் போது எமக்கு மேலும் இரு தகவல்கள் தெரிய வருகிறது.முதலாவது திருமால்-திருமால் அல்லது கண்ணன் என்ற பெயரில் பல தடவை குறிப்பிட்டு  வணங்கப்பட்டுள்ளது. இரண்டாவது திராவிடர் தெய்வங்களும் ஆரியர் தெய்வங்களும் தமக்கிடையிலான கூட்டிணைப்பை[ ஒன்றுபடுத்ததலை] இந்த சங்க காலத்தில் தான் ஆரம்பிக்க தொடங்கின . 

உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே கூறுயிருக்கிறார்.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(தொல். மரபியல் 1589)

ஆகவே பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!
முதலில் இயற்கை என்பது நடுகல்லானது!

தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும்.புறப்பாடல் 265 ஊருக்குப் புறத்தே இருந்த திடலில் வேங்கை மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையை அணிவித்து கோவலர் ஒரு வீரனுக்கு கல் நட்டதைக் கூறுகிறது.இக் கற்களில் வீரனின் பெயரும் பெருமிதமும் எழுதப்பட்டு அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என அகப்பாடல் ஒன்று (67) குறிக்கிறது. மறக்குடி பிறந்த மக்கள் விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று  புறம் 335 கூறுகிறது .

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு 335

அதாவது ,இந்த நடு கல்லுகளுக்கு சில சக்திகள் இருப்பதாக கருதிய சங்க கால மக்கள் அதை வழிபட்டனர் எனவும் ,இந்த நடு கல்லிற்கான   சடங்குமுறைக்குள்  [கரணவியலுக்குள்  ] உட்பட்ட  சில  பண்புகள்  [குணம்] பின்பு தென் இந்தியாவின் [திராவிடரின் ] லிங்க வழிபாட்டிற்குள்  நுழைய பட்டுள்ளதாகவும்   George L. Hart கூறியுள்ளார்
பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது!அதாவது நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.

இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் முருகன் குறிஞ்சிக் கடவுள்  ஆனான்.

சங்க காலத்து முருகனின் குணாதிசியங்களே வேறாகச் சொல்லப்படுகிறது. ஒரு சங்க காலப்பாடல்.அகநானூறு 22,தலைவனைப் பிரிந்து பசலையால் மெலிந்து நோயுற்றவளாக இருக்கிறாள் நாயகி. அவள் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு முருகன் பிடித்திருப்பதாகச் சொல்லி பூசாரியைக் கொண்டு குணம் செய்விக்கிறார்கள். ஆக முருகன் என்பவன் பெண்களோடு மையல் கொள்ளும் ஒரு தெய்வமாக இருந்து வந்திருக்கிறான்.

"மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடுவேள் பேண தணிகுவள் இவள்’ என
முது வாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,"--அகநானூறு 22

சிலப்பதிகாரத்தில் ஒரு படி மேலே  போய் முருகனை ஏளனம் , நையாண்டி செய்கிறாள் .மேலும் குறுந்தொகை 263 இல் ,தலைவியின் நண்பி ,தலைவியின் காதல் நோயை பிழையாக கருதி ,அவளுக்கு வெறியாட்டம் ஆட்டுகிறார்கள் என்கிறாள்.

"தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி..."--குறுந்தொகை 263

இந்த பாடல்கள் தமிழர்  கலாச்சாரம் , பண்பாட்டு வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு  மிகவும்  முக்கியம் .ஏன் என்றால் ,இந்த பாடல்கள் முருகனுக்கு செய்யப்பட்ட திராவிடருக்கு மட்டுமே உரித்தான சடங்கு ,தியாகம் , பலிகளை கூறுகின்றன .மேலும் இந்த பாடல்கள் மதச்சார்பின்மைக் கோட்பாடு அல்லது உலகியல்வாதம் அந்த காலத்தில் நிலைவியதை  காட்டுகிறது .இப்படியான கருத்துள்ள பாடல்கள் பல இருப்பதால் ,இந்த ஒத்த பாடல்கள் பிரபலமாக  , புகழ் பெற்றதாக இருந்திருக்க வேண்டும். இப்படியான பிரபலமான கடவுளை   ஏளனம் , நையாண்டி செய்யும் கருத்துடைய  பாடல்கள் ,அந்த காலத்தில் ,சமயச் சார்பற்ற , உலகியல் சார்ந்த சமுகம் இருந்ததாக ஊகிக்க முடிகிறது .இது பக்தி காலத்தில்[ கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ளகாலம்] கேள்விகள் ஒன்றும் இல்லாமல் கடவுளை நம்பியதற்கு முரணாகும் .அதாவது சங்க காலத்தில்[ கி.மு 700-இலிருந்து கி.பி 300-வரையுள்ளகாலம்] மக்கள் சடங்குகளுக்கு பின்னால் இருக்கும்  தருக்கங்களுக்கு  கேள்வி கேட்டார்கள்  என்பதை அறிய முடிகிறது

தெய்வம் வந்து வெறியாடிய வேலன் நாளடைவில் கைவேல் தாங்கிய முருகனாக வழிபடப்பட்டான்.தொல்காப்பியர் காலத்து 'சேயோன் மேய மைவரை உலக' குறிஞ்சி நிலத் தெய்வம் சங்க காலத்தில் முருகக் கடவுளாகத் தோற்றம் பெற்றார். இந்தப் பழமை காரணமாகவே முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்டுகிறார்?

'வெறிஅறி சிறப்பின் வௌ;வாய் வேலன்
வெறியாட்டு அயந்த காந்தளும். (தொ.பொ.புறத்திணை 5 )

கொல்லும் தன்மையுள்ள வேலைத் தாங்கியிருப்பவன் வேலன். அவன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தளின் மலர் மாலையை அணிந்து உருக்கொண்டு ஆடுவான். இந்த ஆட்டம் காந்தள் என அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பழைய காலத்து மட்பாண்டப்  பொருட்களில்  உள்ள வெட் டெழுத்துக்களை  [எழுத்து வடிவங்களை]  ஆய்வுகள்  செய்த [படித்த] அறிஞர்  ஐராவதம் மகாதேவன் ,இவை  300 BC  பழைமை வாய்ந்தது என்றும் , அது  விசுவாசமுள்ளவரையும்  , பக்தியுள்ளவரையும்  காப்பாற்ற , கெட்ட அரக்கனை கொல்லக்கூடிய  ஒரு துணிச்சலான  வீர மிக்கப் போர் வீரனை குறிக்கின்றது என்கிறார் .

திருமால்/ முருகன் = இவர்கள் நிலத்தின் தலைமக்கள்.இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர்; பலமுகம்-மாயாஜால வடிவினர் அல்லர்.அது போல தொல்காப்பியர் குறிப்பிடும் மற்ற  நிலத் தெய்வங்களும் [ வேந்தன், வருணன், கொற்றவை ]அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்?.

இன்று இறந்தவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்தபோது விரும்பி உண்ட உணவை ஏழாம் நாள் அன்று காய்ச்சிப் படைப்பதும், ஊர்க் கோயில்களில் பூசாரிகள் உருவந்து ஆடி அருள்வாக்குச் சொல்வதும் சங்க கால நடுகல் வணக்கம் மற்றும் வெறியாட்டின் எச்சங்களே..

ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......
* முருகன் ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்!
* திருமால் விஷ்ணு ஆனான்!
* சிவன் ருத்திரன் ஆனான்!
* கொற்றவைபார்வதி/துர்க்கை ஆனால்!
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி
விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள் சமஸ்கிருதக்காரர்கள்.
தமிழர்கள் வணங்கிய ஒரு மலைக்கடவுளான மற்றும் போர்,காதலில் சிறந்து விளங்கிய கடவுளான முருகன் என்றால் அழகன்.இளைஞன்.முருகு--அழகு, இளமை.[முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)]

வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’/சுப்ரமணி என்றால்?
ஸ்கந்தன் என்றால்?ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன்.

சுப்ரமணியர் என்றால்?--- உயர்ந்த பிராமணன்

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

"பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.இப்போது வேண்டாம். நான் தயாரில்லை... என்கிறார்.இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல்  தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த கணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் கங்கைக் கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது."
பல இடத்தில் சிவனது வீரியம்[சக்தி/உயிர்மூலம்] ஸ்கலிதமான[வெளியேற்றப்பட்ட] தன் பலனாக அக்குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்று பெயர்.இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் "சிவன் பார்வதியை புணர்ந்தது" என்று தலைப்பெயர் கொண்ட 36ஆம் சருக்கத்திலும், "குமாரசாமி உற்பத்தி" என்கின்ற 37ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.
அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.

உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது.

தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை.

தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது.

இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர்  அல்லது கிராமபுர மக்கள் மத்தியில்  "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது  சம்ஸ்கிருத மோகம் கொண்ட   மக்கள் மத்தியில்  , அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்.

நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்!

இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே  உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் .......

சுருக்கம்:சங்க கால மக்களின் சமய நம்பிக்கை:Summary:Major Religious Beliefs of the sangam people:

கி.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாகப் பலதரப்பட்ட நாகரிகநிலையில் வாழத் தொடங்கிவிட்டனர் என நாம் கொள்ளலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் மெல்ல மெல்ல ஆரிய மக்களுடைய தொடர்பு தமிழ் மக்களுக்கு ஏற்படலாயிற்று.சங்க கால பொதுமக்கள் கொற்றவை, முருகன் முதலிய பழந்தெய்வங்களையே வணங்கிவந்தனர்.சங்க இலக்கியங்களிலே ஆரியத் தெய்வங்கள் ஆங்காங்கு குறிக்கப்படுவது உண்மையே. அவை அரசர், வணிகர், சமயக்கணக்கர் முதலிய உயர் வகுப்பினரால் ஆங்காங்கு வணங்கப்பட்டிருக்கலாம்.

கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு.பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,

பல தமிழ் இலக்கியங்கள்  முருகனை தாய்வழி உரிமை பெறுத் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன.  "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது.சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.

தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத்தியிலே "அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை"என்னும் முடிவிற்கு குடிகளாகவும் (Tribes and Clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன.மருத நிலத் தெய்வம் இந்திரன்  உழவர்/வேளாளர்களால் வழிபடப்பட்டான் .வீரர்,வீராங்கனை வழிபாடும் மூதாதையர்(சிரார்த்தம்) வழிபாடும் அங்கு இருந்தது .மரக் கண்டுகள் என அழைக்கப்படும் நட்ட மரத் துண்டும் அங்கு கடவுள் உறைகிறார் என்ற நம்பிக்கையில்[மரத்துக் கடவுள்] வழிபாடாக இருந்துள்ளது . 

புத்த சமயமும் சமண சமயமும் ,சங்க காலத்தில் ஒன்றாக செழித்தோங்கின எனினும் அவை பிராமணர்களின் வேத சமயத்தின் கீழ்நிலைப்பட்டதாகவே இருந்தது .சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள் .உதாரணமாக உயர் உடம்பு பற்றிய கோட்பாடுகள் ஊழ் , விதிகளின்  முதன்மை[மேம்பட்ட நிலை] , ஒரு  புனிதமான  நோக்கம், காரணத்திற்காக மரணிப்பது ,...போன்றவைகளை.
சங்க காலத்தில் ஆலயம் -நகர் ,கோயில் ,கோட்டம், புரை அல்லது  தேவாலயம் என அழைக்கப்பட்டது .

கோவில் என்பது அரசன் வீடு என பொருள் படும்  – கோ + இல்-. ‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை -பட்டினபலை 50  .ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .அரசனுக்கான இன்னும் ஒரு சொல்   இறைவன். ஆகும் . ‘நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்’ –பட்டினபலை 120, அது மட்டும் அல்ல "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;"என்று புலவர்  மோசிகீரனார் ,புறநானூறு 186 இல் கூறுகிறார் .மேலும் தொல்காப்பியர்  மூ வேந்தரை "வாண்புகழ் மூவர்" என அழைக்கிறார் .இவை எல்லாம் ,பிராமணர் வர்ண அமைப்பை புகுத்த முன்பு ,அதாவது அரசனையும் குருவையும் பிரிக்க முன்பு ,பண்டைய தமிழர் அரசனையே கடவுளாக அல்லது கடவுளின் தூதுவராக வழி பட்டனர் என அறிய முடிகிறது .

மூன்றாவதும் கடைசியுமான  சங்க காலம் [700BC to 300AD],ஆயிரம் வருடங்கள் பரவி ,எமக்கும் தமிழரின் சரித்திரத்தையும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் காட்டுகிறது .தொல்காப்பியம் தொடக்கம் பரிபாடல் வரை நீண்டு செல்கிறது .இறுதி சங்க காலத்தில் ஆரியருடைய தெய்வங்களும் வரத் தொடங்கி உள்ளன.
இந்த காலத்தில் தான் இரண்டு தெய்வங்களும் ஒன்றுபட தொடங்கின .இதன் மூலம் அவை தமிழ் ,சமஸ்கிரத பெயர்களை பெற்றன .முருகன் -சுப்பிரமணிய ,திருமால் -விஸ்ணு ,சிவா -ருத்திர ....இப்படி .உதாரணமாக ,முருகனை எடுத்துக் கொண்டால் ,அவருக்கு தமிழிலேயே முதல் வழிபடப்பட்டது .பின் அவர்  பழம் இலக்கியத்தையும் [பழங்கதை ,மரபுகதை].புதிதாக வந்த புராணக்கதைளையும் சுமந்து சுப்பிரமணியாக மாறினார் .
  

...............  ..................
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் →Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01
பகுதி 03  வாசிக்க அழுத்துங்கள் ↴↴
Theebam.com: பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:

4 comments:

  1. Pathmanathan VinyTuesday, May 12, 2020

    கடவுள்களின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட
    சுவிஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட
    Erik von Danican என்பவரின் தமிழ் நூலை படிக்கும் வாய்ப்பு அண்மையிலே
    கிடைத்தது.அதிலே அவர்
    கடவுள்கள் என்பவர்கள்
    ஏதிலியன்கள் என்றும்
    அவர்கள் பறக்கும் தட்டுகளில் இந்த லோகத்திற்கு வந்தபோது வெறும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த
    நம் முன்னோர்கள் அவர்களைக் கண்டு
    பயம் கொண்டதாகவும்,
    பின் அவர்கள் தங்களை புரிய வைத்து மனிதர்களுடன் நெருங்கிப் பழகினர் என்றும்,,
    அவர்களையே காலப்போக்கில் மேல் லோகத்தில் இருந்து வந்த கடவுள்கள் என மனிதர்கள் கொண்டாடி வழிபடத் தொடங்கினர் எனவும் Erik von அவர்களின் நூல் ஆராய்ச்சியின் முடிவுகள்
    கூறுகின்றன.மற்றும் ஏதிலியன்களின் தலையில் ஆண்டனா போன்ற ஒருவகை கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அதையே நாம் கடவுளர்கள் என்றால் அரச முடி போட்டிருப்பது போன்று சுவாமிப்படங்களை அமைப்பதாகவும்
    கூறுகின்றார்.மேலும்
    சிவனின் தலைமீது கொண்டிருக்கும் கங்கை கூட ஏதிலியன்களின் தலையில் உள்ள ஒருவகை கருவியே என்பது அவரின் விவாதம்.
    இது பற்றிய உங்களின்
    கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.குறிப்பாக ஐயா கந்தையா
    தில்லைவிநாயகம் அவர்களின் இது சம்மந்தமான கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,நானும் பரந்தனில் இருந்த காலத்தில் நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கிறேன், இராவணன் கூட தன் இசையால் அவர்களை மகிழ்வித்ததாகவும், அவர்களின் உதவியால் விமான , மற்றும் வசதிகள் கிடைத்ததாகவும் அப்புத்தகத்தில் படித்துள்ளேன்

      Delete
    2. Kandiah ThillaivinayagalingamTuesday, May 12, 2020


      இது மிகவும் அழகான கற்பனை என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், மற்றும் படி அதில் ஒன்றும் இல்லை, பொழுது போகவில்லை என்றால், நீங்கள் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் star wars, Harry potter ... வாசிப்பது போல இது வாசிக்கலாம் , அவ்வளவு தான், மற்றும் படி இதில் இருந்து எமது வாழ்க்கைக்கு அல்லது வரலாற்றுக்கு எடுக்க ஒன்றுமே இல்லை, just waste of time !!!

      Delete
  2. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிTuesday, May 12, 2020


    ஐயா! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் கட்டுரைகளில் நான் விரும்புவது, வரலாற்று கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் எழுதுவது. எங்களால் சில கருத்துக்களை நம்ப முடியாவிட்டாலும், நம்பியே ஆக வேண்டும். காரணம் அங்கு ஆதாரங்கள் காட்டப் பட்டிருக்கும். இன்றைய கால கட்டத்திலும் கூட விநாயகர், சிவன்... இப்படி சில தெய்வத்தின் நாமங்கள் முதன்மை படுத்தப் பட்டாலும் முருகன் என்னும் தெய்வம் எல்லா தெய்வங்களின் நாமங்களிலும் ஏதோ ஒரு வகையில் கலந்தே இருக்கிறது. கட்டுரையிலும் தொடக்கம் முதல் இறுதி வரை முருகப் பெருமானின் கருத்துக்கள் ஆங்காங்கே பரவி வருகிறது. ஐம் பூதங்களின் இயற்கை வழிபாட்டு முறைகள், ஐந்து வகை நிலங்களின் சமயம் சார்ந்த கருத்துக்களின் விளக்கம் தெளிவாக விபரிக்க பட்டமை சிறப்பு. சிலப்பதிகாரத்தில் சமயங்கள் பற்றிய கருத்துகள் இணைக்கப்பட்டமை அருமை கொற்றவை என்ற கடவுள் பற்றிய விளக்கங்கள் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி 🌹

    ReplyDelete