கனடாவிலிருந்து ஒரு கடிதம்











அன்புள்ள தங்கைச்சிக்கு,                                              28.03.2020

நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும் ஆகுக. உனது கடிதம் கிடைத்தது.யாவையும் அறிந்தேன்.மகிழ்ச்சி.

தங்கைச்சி , உலகைத் தாக்கிக்கொண்டிருக்கும் [covid-19] கொரோனா வைரசு நமது நாட்டினையும் விட்டுவைக்கவில்லை எனும் செய்திகள் மேலும் வருத்தத்தினை கொடுக்கிறது. வளர்ந்த நாடுகள் போலல்லாது ,இலங்கை ,இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டு ,மக்களை வீட்டில் இருக்கச்செய்து நோய் பரவலைத் தடுக்கும் அரசில் நீ குற்றம் கூறியிருந்தாய். இந்த நாடுகள் போன்று வெறும் அறிக்கைகளினால் மக்களைக் கட்டுப்படுத்தமுடியாது என்பது இலங்கை,இந்திய அரசுகள் அறியாத விடயமல்ல. எனவே ஊரடங்கு சட்டம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றுதான். இருந்தாலும், சட்டம் தளர்த்தப்படும் சில மணி நேரம் ,மக்கள் தங்கள் அத்தியா வசிய தேவைகளுக்கு பலரும் செல்வதால் கூட்டம் அதிகமாகி நோய் தொற்று பரவலுக்கு கூடிய சந்தர்ப்பமாகிவிடும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாய்.உண்மைதான். அந்த இடத்தில் மக்கள்தான் கவனமாக ,ஒருவருக்கு ஒருவர் ஒரு மீற்றருக்கு மேல் இடைவெளி துரத்தினை கடைபிடித்தல் அவசியமானது .எல்லாவற்றிற்கும் அரசு காவல்காரனைப் போடமுடியாத விடயம். மக்கள்தான் புரிந்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இது ஒருவருடைய,தனிப்பட் ட விஷயமல்ல. பலரும் ஒன்றிணைந்தாலே வைரஸினை நாடவிடாமல் தவிர்க்கலாம். பல்வேறு வழிகளாலும் ஒற்றுமையினைத் தொலைத்த உலகம் இன்று ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய ஒரு காலத்தின் கட்டயாத்துக்குள் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது உண்மையே.

தங்கைச்சி , வைரசு தாக்கத்திலிருந்து விடுபட நீ ,சமூகவலைத்தளங்களில் கூறப்படும் தொற்றுநிவாரணிகள் எல்லாவற்றினையும் நம்பிவிடாதே!  அவை உன் உடல்நலத்தினை ஆபத்து நிலையில்கூட தள்ளிவிடலாம். சீனாவில் ஒரு பெண் சாப்பிட்ட உள்ளியின் அளவு கூடியதினால் ,தொண்டை அவிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மதுரையில்  ஆயுள்வேத மருந்தென்று நம்பி வாங்கி உண்டவர், ஆபத்தான நிலையில்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே வழமையாக நாம் சேர்க்கும் உள்ளி,இஞ்சி  என்பவற்றில் அவதானமாக எடுத்துக்கொள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது நீ அறியாததல்ல . வைத்தியர்களினால் கொடுக்கப்படும் மருந்துகளைத் தவிர , வேறு எதுவும் எடுத்துக் கொள்ளாதே. கொரோனாவின் வீறுகொண்ட தாக்கத்தின் மத்தியிலும் அந்நோயாளர்களை விட, அதற்கு மருந்து கூறும்பட்டம் வாங்காத வைத்தியர்களே இவ் உலகில்  அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.

தங்கைச்சி, கொரோனா பரவலிருந்து உன்னைப் பாது காத்துக் கொள்வதற்கு கூறும் வழிவகைகளைக் குறிப்பிடுகிறேன் கவனித்துக்கொள்.

மிக முக்கியமான சிறந்த வழி  என்னவெனில்   வெளியில் சென்று வந்தாலும் , வேலை முடிந்த பின்னரும்    சோப்பையும், தண்ணீரையும் கொண்டு   கைகளின் இருப்பக்கமும் ,விரல்களுக்கிடையிலும், நகத்தின் நுனியுள்ளும், மணிக்கட்டு வரையில் நன்றாக 20 வினாடிகள் வரையில் சுத்தம் செய்தல்  அவசியமாகும்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூபேப்பர்  வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.


கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.

சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்று மற்றவர்களுக்குப்  பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

தங்கைச்சி கோவிட் - 19 நோயில் இருந்து குணமாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறி வீடு சென்ற நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் மீண்டும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  சுகமடைந்துவிட்டது என ஆறுதலடைந்து கொள்ளமுடியாத நோய் இது. எனவே நாம் என்றும் கவனமாகவே இனி வரும்காலங்களில் வாழவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

தங்கைச்சி , எனது கடிதம் உனக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உனது பதிலை எதிர்பார்த்தவாறே இத்துடன் முடிக்கிறேன்.

இப்படிக்கு
அன்பின் அண்ணன்
செ.மனுவேந்தன்.

📧📧📧📧📧📧📧📧📧📧📧


No comments:

Post a Comment